சொந்த வீடு

பொருள் புதிது: கூரையடைப்புக்குப் புதிய பலகை

விபின்

முன்பெல்லாம் வீடுகள் ஓலைகள் வேய்ந்துதான் கட்டப்பட்டன. பிறகு ஓடுகள் புழக்கத்துக்கு வந்தன. ஓடுகள் புழக்கத்துக்கு வந்த காலகட்டத்தில் வீட்டுக்கு உள்புறம் ஓட்டுச் சாய்ப்புகளுக்குக் கீழே பலகையடிக்கும் வழக்கம் வந்தது. ஓடுகளிலிருந்து சூரிய வெப்பம் வீட்டுக்குள் இறங்காமல் இருக்கவும் வீட்டுக்கு அழகான தோற்றத்தைத் தருவதற்கும் இந்தப் பலகை அடைப்பு பயன்பட்டது. இந்த முறை கேரளத்தில் பரவலாக நடைமுறையில் இருந்தது.

இன்றும் கேரளத்தின் பழமையான அரண்மனைகளில் இந்த முறையில் மரப் பலகைகளால் அதன் ஓட்டுச் சாய்ப்புகள் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இன்றைக்கு ஓட்டுச் சாய்ப்புகள் வீடுகள் கிட்ட தட்ட இல்லை என்றாகிவிட்டது. பொதுக் கட்டிடங்கள்கூட ஓட்டுச் சாய்ப்பு முறையில் கட்டப்படுவது இல்லை. முழுவதும் கான்கிரீட் கட்டிடங்கள் வந்துவிட்டன. ஆனால் இந்தக் கான்கிரீட் கூரை அமைப்பு முறையிலும் பலகை அடைப்பு முறை இன்று பரவலாகி வருகிறது.

ஆனால் பலகை அடைப்பு இன்றைக்கு அதிகம் செலவாகும் என்பதால் தெர்மாகோல் போன்ற வேறு பல பகுதிப் பொருள்களைக் கொண்டு அடைப்பு செய்யப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் சூரிய வெப்பத்தைத் தடுப்பதும், வீட்டுக்கு அழகு சேர்ப்பதும்தான். வீடுகள் மட்டுமல்லாது அலுவலகங்களிலும் இந்தப் பலகை அடைப்பு முறை உள்ளது.

இந்தப் பலகை அடைப்பு முறையில் புதிதாக வந்துள்ள பொருள்தான் ட்ரோல்டுடெக்ட்(Troldtekt). டென்மார்க்கைச் சேர்ந்த நிறுவனம் இந்த வகைப் பலகையை உருவாக்கியுள்ளது. மரப் பலகைக்கு மாற்றாக அதே வடிவமைப்பில் இந்தப் புதிய பலகை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கையான மரப் பலகையுடன் சிமேண்டை இணைத்துப் புதிய முறையில் இதை உருவாக்கியுள்ளார்கள். மரப் பலகையுடன் சிமெண்டும் சேர்த்து உருவாக்கப்படுவதால் இந்தக் கட்டுமானப் பொருள் அதிக ஆயுள்கொண்டதாகவும் எளிதில் மக்கக்கூடியதாகவும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த ட்ரோல்டுடெக்ட் பலகை சீரான மேல் பரப்புடன் வீட்டுக்கு அழகு கூட்டும். ஒலியை உட்கிரகிக்கக்கூடிய தன்மையும் கொண்டது. அதனால் வீட்டின் உள்ளே ஒலியை எதிரொலிக்காது. மரப் பலகை இருப்பதால் இது ஈரத்தையும் உறிஞ்சக்கூடியதும் வெளிவிடக்கூடியதுமாக உள்ளது. இதன் தீப்பற்றக்கூடிய தன்மை குறைவு. சிமெண்ட் இந்தப் பலகைக்கு உறுதியைத் தருவதுடன் மரப் பலகை நெகிழ்வுத் தன்மையையும் தருகிறது. இதன் ஆயுட்காலம் 75 ஆண்டுகள். படங்கள், அலமாரிகளுக்காக ஆணி அடிக்கும்போது மரப் பலகை உள்ளதால் எளிதாக இருக்கும். அதேசமயம் உறுதியானதாகவும் இருக்கும்.

சாம்பல் நிறப் பொதுவான சிமெண்ட் அல்லது வெள்ளை சிமெண்ட் ஆகிய இரண்டில் ஒன்றைப் பகுதிப் பொருளாகக் கொண்டு ட்ரோல்டுடெக்ட் தயாரிக்கப்படுகிறது. வெள்ளை, சாம்பல், சிவப்பு, கறுப்பு உள்பட 7 வண்ணங்களில் இப்போது ட்ரோல்டுடெக்ட் பலகைகள் கிடைக்கின்றன.போலந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், ஹாங்காங், நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் புதிய பலகை விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த நிறுவனம் தன் விற்பனையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT