உலகில் அழிக்கப்படும் இயற்கை வளங்களில் 45 சதவீதம் கட்டுமானப் பணிகளுக்காகவே சுரண்டப் படுகின்றன. கட்டுமானத் துறை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான வழி, இயற்கைக்கு நெருக்கமான பசுமைக் கட்டிடக் கலையைப் பின்பற்றுவதுதான்.
பசுமைக் கட்டிடம் என்பது நமது பாரம்பரியக் கட்டிடக் கலையால் உருவாக்கப்படுவதுதான்; உள்ளூர்த் தொழில்நுட்பத்துடன் உள்ளூர்ப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுவது. நவீனக் கட்டிடக் கலை என்ற பெயரில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு எதிரானதாக இந்தக் கட்டிடக் கலையை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.
இம்மாதிரியான பசுமைக் கட்டிடக் கலையைப் பயன்படுத்தி, அந்தோணி ராஜ் என்பவர் கட்டிடங்களை உருவாக்கி வருகிறார். பசுமைக் கட்டிடக் கலையின் முன்னோடியான லாரி பேக்கரின் மாணவர்கள் உட்பட இத்துறையில் ஆர்வம் மிக்கவர்களுடன் இணைந்து, பாரம்பரியக் கட்டிடக் கலையை மீட்டெடுத்து வருகிறார் இவர்.
பசுமைக் கட்டிடம் குறித்துப் பேசும்போது, “இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு கட்டிடக் கலைப் பாரம்பரியம் இருக்கும். கேரளாவிலும், குஜராத்திலும் மரப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும்.
அங்கு மரவேலை செய்யும் தச்சர்தான் பிரதான பங்களிப்பைச் செய்வார்.
ஊட்டி போன்ற மலைப்பகுதிகளுக்கு வேறு மாதிரியான கட்டிடக் கலை தேவைப்படும். மலைப் பகுதி, சமவெளி என வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாதிரியான கட்டிடக்கலைதான் நமக்கு அவசியம். ஆனால் நாம் இன்று எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான கட்டிடக் கலையைப் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.
சிமெண்ட் எனும் அரக்கன்
1930-ம் ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாட்டில் சிமெண்ட் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. சிமெண்டின் பயன்பாடு நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை அழிக்கத் தொடங்கியது. சிமெண்ட் எந்தப் பொருளுடன் சேர்ந்தாலும் அதை அழித்து விடும். சிமெண்ட் பயன்படுத்திய ஒரு கட்டிடத்தை இடித்தால், அதிலிருந்து எந்தப் பொருட்களையும் மறுசுழற்சி செய்ய முடியாது. நமக்கு அருகில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி கட்டிடத்தை உருவாக்குவது மலிவானது; இயற்கை வளங்களைப் பாதுகாக்கக்கூடியது. உதாரணமாக சிமெண்டிற்குப் பதிலாகக் களிமண்ணைப் பயன்படுத்திக் கட்டலாம்.
“நாங்கள் களிமண்ணைக் குழைத்துக் கட்டிடம் கட்டிவருகிறோம். ஆனால், சிமெண்டை மிகக் குறைந்த அளவாக 5 சதவீதமே பயன்படுத்துகிறோம். இதனால், கட்டுமானச் செலவும் குறைகிறது. கூரைகளில், மண் ஓடுகளைக் கவிழ்த்து அதன்மீது கலவைகளைக் கொட்டிப் பலப்படுத்துகிறோம். இதனால், மேற்கூரையில் சிமெண்டுக்கான பயன்பாடு கணிசமாகக் குறைகிறது. மேலும் கான்கிரீட் தூண் அமைப்பதில்லை. ஆனால் பாருங்கள்... துருதிருஷ்டவசமாக, கான்கிரீட் தூண் அமைத்தால்தான் தமிழகத்தில் கட்டிட அனுமதியே கிடைக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் மூன்று மாடிவரை கான்கிரீட் தூண் அமைக்கக் கூடாது என்ற சட்டமே உள்ளது” என்கிறார் அந்தோணி.
நவீனக் கட்டிடங்களைக் காட்டிலும் பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. களிமண்ணைக் குழைத்துக் கட்டும்போது, அதற்கு வெளிப்பூச்சு தேவைப்படாது. இதனால் சிமெண்ட் பயன்பாட்டை முழுதாகத் தவிர்க்க முடியும். சிமெண்ட் பயன்பாட்டைக் குறைப்பதால் மணலுக்கான தேவையும் இல்லாமல் போகும். இதனால், இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது; கட்டுமானச் செலவும் குறைகிறது.
களிமண் கிடைக்காத இடத்தில் அங்கு அதிகமாகக் கிடைக்கக்கூடிய பொருளைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது செடி, கொடி தாவரங்களை மட்க வைத்தும்கூட பயன்படுத்தலாம். இம்மாதிரி அந்த நிலப் பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருள்களை வைத்துக் கட்டப்படுவதால் மண் சார்ந்த கட்டிடக்கலை என இதைச் சொல்கிறார்கள்.
மேலும் பசுமைக் கட்டிடக் கலை போதிய வெளிச்சமும், காற்றும் வரும் வகையில் கட்டப்படும். இதனால் மின்சாரத் தேவையும் குறையும்.
அடுக்குமாடிகளும் கட்டலாம்
“மண் சார்ந்த கட்டிடக்கலையில், மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்ட முடியும்” என்கிறார் அந்தோணி. தற்போது தாம்பரம் அருகே உருவாக்கிவரும் வேத சாலையை அடுக்குமாடிக் குடியிருப்பாகவே அமைத்து வருகிறார். மின் இணைப்புகளைக் கட்டிடத்திற்குள் புதைத்த நிலையில் இவர் அமைப்பதில்லை. கட்டிடத்தில் மேற்பரப்பில் அமைத்திருக்கிறார். இம்மாதிரி அமைப்பதால் எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களை எளிதில் செய்ய இயலும்.
மேலும் சுவர்களின் உட்புறத்தில் மேல்பூச்சும் பூசவில்லை. இது கட்டிடத்திற்குப் புதுவகையான அழகைக் கொடுக்கிறது. பனைமரங்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவது அரிதாகி விட்ட சூழலில் அந்தோணி பழைய பனைமரங்களை வாங்கி, அதைச் செம்மைப்படுத்திப் பயன்படுத்துகிறார்.
“என்னைப் பொறுத்தவரை கட்டிடத்தின் 90 சதவீதம் பயன்பாட்டுக்கானது. 10 சதவீதம் மட்டுமே அலங்கார உபயோகத்துக்கானது” என்கிறார் அவர். அதுபோல தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிப் பதற்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், சமையலறை, குளியலறை போன்றவற்றில் பயன்படுத்திய நீரையும் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறார்கள்.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தோட்டத்திற்கும் இதர பயன் பாட்டுக்கும் திருப்பப்படுகிறது. ஆக, இங்கு தண்ணீர் ஜீரோ வேஸ்டேஜ் முறையில் மறுசுழற்சி செய்யப்படுவதால், வடிகால் வசதிகூட தேவையில்லை.
இந்தக் கட்டிடம் கட்டு வதற்காக கட்டுமானப் பகுதியில் இருந்த மரங்களை வெட்டாமல் மரங்களின் ஊடேயே கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார். உண்மையான பசுமைக் கட்டிடம் என்பது இதுதான்.