சொந்த வீடு

வீடு கட்டச் சில விதிமுறைகள்

செய்திப்பிரிவு

வீடு கட்ட நிலம் வாங்கியாகிவிட்டது. அதில் நம்முடைய விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் வீடு கட்டலாம்தான். ஆனால், அதற்குச் சில விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. எத்தனை மாடி கட்ட வேண்டும், எவ்வளவு இடம் விட்டுக் கட்ட வேண்டும், என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.

நம்மிடம் உள்ள நிலம் முழுவதிலும் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.

அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம், செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். மொத்தப் பரப்பில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.

அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரத்தைப் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர், அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அனுமதி கிடைக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.

SCROLL FOR NEXT