வீடு என்றால் எப்போதுமே மகிழ்ச்சி பொங்குமா என்ன? சில சமயம் கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். ‘உங்கள் யோசனை முட்டாள்தனமானது’ இப்படி உங்கள் குடும்பத்தில் ஒருவர் மீண்டும் மீண்டும் விமர்சித்தால் எப்படியிருக்கும்?
‘இருக்கட்டும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லணுமா?’ என்று நீங்கள் பற்களை நறநறக்கலாம். ‘நான் ஒருமுறைதானே சொன்னேன்!’ என்று விமர்சித்தவர் வியக்கலாம். கூடவே, நீங்கள் ஏன் அந்தக் கேள்வியை இரண்டு முறை கேட்டீர்கள் என்று எண்ணி மேலும் ஆச்சரியப்படலாம். ஆனால், நீங்கள் கேட்டதும் உண்மைதான். அவர் ஒரு முறை சொன்னதும் உண்மைதான். அப்படியானால் அது எப்படி இரு முறை கேட்டது? அதைச் சொன்னது யார்?
இரண்டாவது முறை சொன்னது உங்கள் அறைச் சுவராகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் சொல்வதை உங்கள் வீட்டுச் சுவர் எதிரொலித்தால் இருமுறை கேட்டிருக்கக்கூடும். எதிரொலி என்பதை ஒலியின் உடனடி எதிர்வினை எனலாம். சுவரில் ஒலி மோதும்போது அது உடனடியாக எதிரொலிக்கிறது. ‘அப்படியொன்றும் நடப்பதில்லையே’ என்று நீங்கள் கூறினால் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அது மிகச் சிறிய அறையாக இருக்கக்கூடும் (நீங்கள் ஒலி எழுப்பிய வினாடியின் ஒரு பகுதியிலேயே எதிரொலி வந்துவிட்டால் அதை நீங்கள் தனியாகப் பிரித்துக் கேட்க மாட்டீர்கள்). தவிர ஒலியைச் சுவரும் கொஞ்சம் உள்வாங்கிக் கொண்டு மீதியைத்தான் எதிரொலிக்கிறது.
ஒரு மிகப் பெரிய அறையில் அதுவும் காலியான அறையில் நீங்கள் பேசினால் அது எதிரொலிக்க வாய்ப்பு உண்டு. நடைமுறையில் இது பலவித சிக்கல்களை உண்டாக்கும் (மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல… அல்ல… எனும் திரைப்படப் பாடல்போல் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் எதிரொலித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்).
நம் வீட்டில் எதிரொலி உண்டாவதைக் குறைக்க அல்லது தவிர்க்க என்ன செய்யலாம்?
தரையின்மீது தடிமனான விரிப்பைப் போடுங்கள். அது அலங்காரமாக இருக்கும். கால்களுக்கு வெதுவெதுப்பைத் தரும். அதே சமயம் எதிரொலியையும் குறைக்கும் (கான்க்ரீட் என்பது ஒலியை நன்கு எதிரொலிக்கக் கூடியது). திரைச் சீலைகள், ஓவியங்கள் போன்றவற்றை அறையில் மாட்டி வைப்பதும் பலன் தரும். உங்கள் வீட்டில் உயரமான புத்தக அலமாரி இருந்தாலும் அது எதிரொலியைக் குறைக்கும் (மறக்காமல் புத்தகங்களை அதில் அடுக்கி வையுங்கள். அப்போதுதான் பலன் இருக்கும்).
Acoustic panel அல்லது Acoustic board என்பது ஒலியை உறிஞ்சிக் கொள்ளும் பொருள்களால் ஆனது. இதன் இரு சுவர்களுக்கு இடைப் பகுதியில் ஒலியை உள்வாங்கிக் கொள்ளும் பொருள் பொருத்தப்பட்டிருக்கிறது. தவிர இதன் சுவர்கள் துளைகளைக் கொண்டவையாக இருப்பதால் ஒலியின் பெரும்பகுதி உள்ளே சென்றுவிட, எதிரொலிப்பது தவிர்க்கப்படுகிறது. பெரிய அரங்குகள், நூலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றில் இவை அதிக அளவில் பொருத்தப்படுகின்றன.
இதையெல்லாம் குறிப்பிட்டதற்காக எதிரொலி என்பதே ஒர் உபத்ரவம் என்று எண்ணிவிட வேண்டாம். கடலின் ஆழத்தைக் கண்டுபிடிப்பது, கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிவது போன்ற பல விஷயங்களுக்கு எதிரொலி பெரிதும் உதவுகிறது.
பொதுவாக 17 மீட்டர் தூரம் இருக்கும்போதுதான் எதிரொலியை நாம் கேட்க முடியும். வழுவழுப்பான தளங்கள் ஒலியை நன்கு எதிரொலிக்கும். காரணம் ஒலி அலைகளை இவை உடைப்பதில்லை. கலையரங்குகளில் இந்த எதிரொலி கோணத்தைக் கணித்து கட்டிடத்தை அதற்கேற்பக் கட்டாவிட்டால் பழைய ஒலியின் எதிரொலியும். புதிய ஒலியுமாகச் சேர்ந்து கேட்பவர்களுக்கு நாராசமாக இருக்கும்.