இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விவசாய நிலங்கள் சம்பந்தமாக வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சில மாநிலங்களில் விவசாய நிலங்களை விவசாயி மட்டும்தான் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்தியா முழுவதும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் விவசாய நிலங்களை அல்லது பண்னை வீடுகளை வாங்க இயலாது. ஆனால் விவசாய நிலங்களை உரிமை வழியாகப் பெற முடியும் (Inherit).
தமிழ்நாடு
விவசாய நிலங்களை வாங்க இங்கு எந்தத் தடையும் இல்லை. ஒருநபர் அதிகபட்சமாக 59.95 ஏக்கர் (புன்செய்) விவசாய நிலங்களை வாங்கலாம். விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான உரிமை மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது (குறைந்தபட்சம் கடந்த 10 ஆண்டுகளில் அந்நிலப் பகுதியில் விவசாயம் எதுவும் செய்யாமல் இருந்தால்).
கர்நாடகா
விவசாயிகள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க முடியும். ஒரு நபருக்கு ஆண்டு வருமானம் 25 லட்சத்துக்கு மேல் இருந்தால் அவர் விவசாயி எனக் கருதப்படமாட்டார். கர்நாடகா நில வருவாய்ச் சட்டம் 1964 பிரிவு 109 கீழ் அரசாங்க ஒப்புதலுடன் சமூகத் தொழிற் சார்ந்த அமைப்புகள் விவசாய நிலங்களை வாங்க முடியும்.
கேரளா
கேரள நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963-ன் படி கேரள விவசாய நில உச்சவரம்பு கீழ் வருமாறு.
அ) திருமணமாகாத வயதுக்கு வந்த நபர் இருந்தால் நில உச்ச வரம்பு 7.5 ஏக்கர்.
ஆ) குடும்பத்தில் 2 நபருக்கு மேல் 5 நபருக்குள் இருந்தால் நில உச்சவரம்பு 15 ஏக்கர்.
இ) குடும்பத்தில் 5 நபருக்குமேல் இருந்தால் நில உச்சவரம்பு 20 ஏக்கர்.
ஈ) பிற நபர்களுக்கு நில உச்சவரம்பு 15 ஏக்கர்.
கேரளத்தில் விவசாய நிலங்களைப் பிற பயன்பாட்டுக்கு மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. 2008-ம் ஆண்டில் ஏற்றப்பட்ட சட்டத்தின்படி விவசாய நிலத்தில் பிற பயன்பாட்டுக்காக அதிகபட்சமாக 10 சென்ட் நிலத்தை மட்டுமே மாற்ற முடியும். மேலும் மாற்றப்பட்ட அந்த 10 சென்ட்டில் 4 சென்ட் நிலத்தில் மட்டும்தான் கட்டிடங்கள் கட்டமுடியும்.
மகாராஷ்டிரா
இங்கு விவசாயிகள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க முடியும். ஆனால் ஒருநபர் இந்தியாவில் பிற மாநிலத்தில் விவசாய நிலங்களுக்கு உரிமையாளராக இருந்தால் அந்த நபர் மகாராஷ்டிராவிலும் விவசாயி எனக் கருதப்படுவார். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அதிகபட்சம் 54 ஏக்கர் விவசாய நிலங்களை மட்டுமே வாங்க முடியும்.
குஜராத்
விவசாயிகள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க முடியும். முன்பு குஜராத் மாநிலத்தில் வசிக்கும் விவசாயிகள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க இயலும். ஆனால் குஜராத் மாநில உயர் நீதிமன்றம் 2012 ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி இந்தியாவிலுள்ள எந்த விவசாயியும் குஜராத்திலுள்ள விவசாய நிலங்களை வாங்க முடியும்.
ஹரியானா
சில பகுதிகள் Controlled area என வகைப்படுத்தபட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் விவசாய நிலங்கள் வாங்க வேண்டுமென்றால் (விவசாயமில்லாப் பயன்பாடு) அரசாங்கத்திடம் முன் ஒப்புதல் பெற வேண்டும்.
இமாச்சல பிரதேசம்
இந்த மாநிலத்தில் குடியிருக்கும் விவசாயிகள் மட்டுமே விவசாய நிலங்களை வாங்க முடியும். பிற மாநிலத்தில் இருக்கும் விவசாயிகள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் விவசாய நிலங்களை வாங்க வேண்டுமானால் Himachal Pradesh Tendency Land Reforms Act பிரிவு 118-ன் கீழ் அரசாங்கத்திடம முன் அனுமதி பெறவேண்டும். நில உச்சவரம்பு இமாச்சல பிரதேசத்தில் 160 பீகா (32 ஏக்கர்).
மேற்கு வங்கம்
மேற்கு வங்க நிலச் சீர்த்திருத்தச் சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு நில உச்சவரம்பு 17.5 ஏக்கர் (பாசன வசதி பெற்ற நிலங்கள்). மழையை நம்பியிருக்கும் விவசாய நிலங்களில் அதிகபட்ச உச்சவரம்பு 24.5 ஏக்கர். தேயிலைத் தோட்டம், ஆலைகள், ஆடு மற்றும் மாடுபராமரிக்கும் கூடங்கள், கோழிப் பண்ணை, பால் உற்பத்திமையங்கள் ஆகியவை நில உச்சவரம்பின் கீழ் வராது.
கட்டுரையாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்