சொந்த வீடு

வீட்டுக்கு அழகு சேர்க்கும் டைல்

செய்திப்பிரிவு

இன்றைக்கு வீட்டுக்குத் தரைத்தளம் அமைப்பதில் பல முறைகள் உள்ளன. பழைய வீடுகளில் சிமெண்ட் தளமே அமைப்பது வழக்கமாக இருந்தது. மொசைக், டைல், மார்பிள் இடுவது புதிய முறைகளாகப் பின்னால் அறிமுகமாயின. இவற்றில் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையில் தரைத்தளம் அமைக்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை செட்டிநாடு வீடுகள். இதற்குக் காரணம் செட்டிநாட்டு ஊரான ஆத்தங்குடி டைல். இந்த ஆத்தங்குடி டைல்ஸ் குறித்துக் கூடுதல் தகவல்கள் கேட்டு வாசகர்கள் கடிதம் அனுப்பியதை முன்னிட்டு இந்தக் கட்டுரை வெளியிடுகிறோம்.

இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க மனிதர்களாலேயே ஆத்தங்குடி டைல் உருவாக்கப்படுகிறது. இதன் சிறப்புக்குக் காரணங்களில் இது முதன்மையானது. வீடுகளில் தரைகளில் பதிக்கப்படும் ஆத்தங்குடி டைல்கள் வீட்டுக்கு பாரம்பரியமான அழகைக் கொண்டுவருபவை. செட்டி நாட்டின் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது ஆத்தங்குடி டைல்களின் உருவாக்கமும்.

கலாச்சாரம் குடிகொண்டு பழங்காலப் பெருமை பேசும் பல வீடுகளின் தரைகளில் பதிக்கப்பட்டாலும் நம்மை நிமிர்ந்து பார்க்கச் செய்பவை இந்த டைல்கள். இதன் வண்ணமும், வடிவமும் பார்க்கும் விழிகளுக்குள் வந்து பதுங்கிக்கொள்ளும். வெவ்வேறு வண்ணங்களில் விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்படும் இந்த டைல்களைப் பதிக்கும் போது வீடுகளுக்குத் தனி அழகு வந்து சேரும்.

ஆத்தங்குடி டைல்கள் தயாரிக்கும் வழிமுறைகள் மிகவும் கலைநயம் மிக்கவை. அவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். தியானிப்பது போன்ற மன ஒருங்குவிப்புடன் மேற்கொள்ளப்படும் செயல் இதன் தயாரிப்பு. மிக அழகாக ஒரு பூ டிசைனால் நமது பாதங்களைத் தாங்கும் பளிங்குத் தரைகளின் மீது படுத்துக் கிடக்கும் ஆத்தங்குடி டைல்கள் கடுமையான உழைப்பைக் கோருபவை. உள்ளூரிலேயே கிடைக்கும் மண், சிமெண்ட், பேபி ஜெல்லி, சில செயற்கை ஆக்ஸைடுகள் ஆகியவற்றைக் கலந்து இந்த டைல்களை உருவாக்குவார்கள்.

முதலில் ஆத்தங்குடி டைலுக்கான அலங்கார வடிவ வார்ப்பைக் கண்ணாடிமீது வைப்பார்கள். அந்த அலங்கார வார்ப்பு பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ஒரு பூ வடிவ வார்ப்பு என்றால் பூவின் இதழ்களுக்கான பிரிவுகள் தனித் தனியே பிரிந்து காணப்படும். ஒவ்வொரு பிரிவையும் சிறிய தடுப்பு பிரிக்கும். இதனால் அந்தப் பிரிவுக்குள் வண்ணக் கலவையை ஊற்றும்போது, அவை ஒன்று சேர்ந்துவிடாமல் தனித்தனியே இருந்து பூ டிசைனைத் தோற்றுவிக்க ஏதுவாக அமையும். செயற்கை அல்லது இயற்கையான வண்ணக் கலவையை அந்த வார்ப்பின் பிரிவுகளில் ஊற்றுவார்கள். அதே போல் வார்ப்பு எதுவும் இன்றிக் கண்ணாடி மீது வண்ணக் கலவையைக் கரண்டியில் ஊற்றிக் கையாலேயே சில அலங்கார வடிவங்களை உருவாக்குவதும் உண்டு.

டைலின் முன்பக்கத்துக்குத் தேவையான டிசைன் வேலை முடிந்த பின்னர் வார்ப்பின் பின்பக்கத்தில் உலர்ந்த மணல், சிமெண்ட் கொண்ட கலவையை இட்டு நிரப்புவார்கள். பின்னர் அதன் மீது ஈரமான மணல், சிமெண்ட் கலவையை வைத்துப் பூசுவார்கள். சமதளக் கரண்டி உதவியுடன் பின்பக்கத்தின் மேற்பரப்பை சொரசொரப்பின்றி நேர்த்தியாக நிறைவேற்றி, ஈரமான கலவை உலர் கலவையுடன் நன்கு இணையும்படி அழுத்தம் கொடுப்பார்கள். இந்த வேலைகள் அனைத்தையும் முடித்த உடன் டைலை வார்ப்பிலிருந்து எடுத்து உலர வைப்பார்கள். தேவையான அளவு உலர்ந்த பின்னர் அந்த டைலைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நீரில் போட்டுப் பதப்படுத்துவார்கள். இந்தப் பதப்படுத்துதல் நிறைவேறிய பிறகு பார்சல் செய்து அனுப்பும் நிலைக்கு டைல்கள் வந்துவிடும்.

இனியென்ன இந்த டைல்களைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவிட்டால் போதும், ஏதோவோர் அழகிய வீட்டின் தரையில் கிடந்து தனது அழகால் பார்ப்போரின் மனதுக்கு உற்சாகத்தை அள்ளித் தரும். ஆனால், முன்பு போல் இப்போது அதிகமான அளவில் ஆத்தங்குடி டைல்கள் பயன்படுத்தப்படுவது இல்லை. நவீனம் நவீனம் என்று கூறி பாரம்பரிய ஆத்தங்குடி டைல்களுக்கு பாராமுகம் காட்டாமல் மீண்டும் அவற்றை முன்பு போல் பயன்படுத்தினால் பாரம்பரியமும் பண்பாடும் செழிக்கும்.

SCROLL FOR NEXT