உலகின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களான ஃபிராங் கெரி, லே கார்புசியர், ஃப்ராங்க் லாயிட் ரைட், ஐ.எம்.பெய் ஆகியோர்களுடன் ஒப்பிடத்தகுந்த இந்தியக் கட்டிடக் கலைஞர் சார்லஸ் கொரிய. நவி மும்பை என அழைக்கப்படும் புதிய பம்பாய் நகரத்தை வடிவமைத்தவர் இவர்தான் . உலக அளவிலான நகரத் திட்டமிடல் அறிஞர்களுள் ஒருவராக அறியப்பட்டவர்.
சாம்பலீமட் செண்டர் பார் அன்நோன், போர்சுகல்
நவி மும்பை மட்டுமல்லாது கர்நாடக மாநிலத்தில் நியூ பகல்கோட் போன்ற புறநகர்களை வடிவமைத்தவர். ஏழைகளுக்கான வீடுகளிலிருந்து பிரம்மாண்டமான கட்டிடங்கள் வரை எழுப்பியவர். இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, கத்தார், ஜப்பான், மொரீஷியஸ், போர்சுகல், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் கட்டிடங்களை உருவாக்கியுள்ளார். அவரது முதலாம் நினைவாண்டு இது.
சார்லஸ் கொரிய, 1930-ம் ஆண்டு செம்படம்பர் 1அன்று செகந்திராபாத்தில் பிறந்தவர். மும்பையிலும் அமெரிக்காவிலும் உயர் கல்வி பயின்றார். அமெரிக்காவில் கல்வி பெற்றுத் திரும்பிய அவர் 1958-ல் சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டிடக் கலை பயின்றாலும் அவரது சிந்தனைகளைப் பாதித்தவை சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியக் கட்டிடக் கலைகளே.
கோரமங்களா வீடு, பெங்களூரு
அவர் பிறந்து வளர்ந்த செகந்திராபாத்தில் அவர் பார்த்த முகலாய பாணியிலான கட்டிடங்கள் அவரைப் பாதித்தன. அவர் பின்னாட்களில் உருவாக்கிய கட்டிடங்களில் சுதந்திரத்துக்கு முற்பட்ட இந்தியக் கட்டிடக் கலைகளின் பாதிப்பு இருக்கும். நிறுவனங்களின் தலைமையிடங்கள், அருங்காட்சியகம் போன்ற பொதுக் கட்டிடங்கள், ஏழைகளுக்கான வீடுகள், தங்கும் விடுதிகள் என அவர் எதை உருவாக்கினாலும் அதில் உயிர்த்தன்மை இருக்குமாறு வடிவமைத்தார்.
பிரிட்டிஷ் கவுன்சில், டெல்லி
கட்டிடங்களுக்குள் காற்று, வெளிச்சம் போன்ற இயற்கையான அம்சங்கள் வருவதற்கான வாசல்களை விசாலமாகத் திறந்துவைத்தார். பெங்களூருவில் கொரமங்களாவில் அவர் வடிவமைத்த வீட்டை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். தென்னிந்திய பாணியிலான தொட்டிக்கட்டு வீடாக அதை உருவாக்கியிருப்பார். வீட்டின் உள்ளே நடுமுற்றம் இருப்பது மாதிரியான அமைப்பு.
எம்.ஆர்.எஃப் தலைமையகம், சென்னை
அந்த நடு முற்றத்தில் ஒரு சிறிய மரமும் இருக்கும். அவரது கட்டிடங்களின் இயற்கைத் தொடர்புக்கு இதைச் சாட்சியாகக் கொள்ளாலாம். பெலபூரில் அவர் வடிவமைத்த வீடுகளும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் ஒரு பெரிய முற்றத்தையும் புற்களையும் உருவாக்கியிருப்பார். கொரியவின் வடிவமைப்புகளில் முக்கியமானதாகச் சொல்லப்படும் காந்தி அருங்காட்சியகத்தைத்தான் அவர் முதன்முதலில் வடிவமைத்தார்.
கஞ்சன்ஜங்கா குடியிருப்பு (1974), மும்பை
குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்துக்குள்ளே ஒரு பகுதியாக இதை அவர் உருவாக்கியுள்ளார். தலைநகர் டெல்லியில் தேசியக் கைவினைக் கலை அருங்காட்சியகத்தை வடிவமைத்த பெருமையும் இவருக்கு உண்டு. நமது கிராமங்களில் உள்ள மண்குதிரைகள், அய்யனார் சாமிகள் உட்பட இந்தியாவின் பலதரப்பட்ட கலாசாரத்தை எடுத்துக்காட்டக்கூடியவகையில் இந்த அருங்காட்சியகத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
இஸ்மாயிலி செண்டர், கனடா
கொரிய தமிழ்நாட்டில் சென்னையில் இரு கட்டிடங்களை உருவாக்கியுள்ளார். ஒயிட்ஸ் சாலையிலுள்ள சுந்தரம் டவர்ஸ் என்னும் சுந்தரம் ஃபைனான்ஸ் அலுவலகக் கட்டிடமும், கிரீம்ஸ் சாலையிலுள்ள எம்.ஆர்.எஃப். டயர்ஸ் தலைமையகக் கட்டிடமும் கொரியவால் வடிவமைக்கட்டப்பவை.
பெலப்பூர் இன்கிரிமெண்டல் ஹவுசிங்
1984-ம் ஆண்டு இங்கிலாந்து ராயல் இன்ஸ்டிடியூட் சார்லஸ் கொரியவுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது. அதே ஆண்டு அவர் நகர்ப்புற வடிவமைப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த நாற்பதாண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளில் நகர்ப்புறங்களின் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான வீடுகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். இந்தியா மட்டுமல்லாது பெரு போன்ற நாடுகளிலும் இதை வெற்றிகரமாக உருவாக்கியும் காட்டினார்.
- சார்லஸ் கொரிய