சொந்த வீடு

பாகற்கொடியும் பாதுகாப்பும்

செய்திப்பிரிவு

எங்களது வீட்டைக் கட்டிய ஒப்பந்தக்காரர் மரத்தாலான ஏணி, இன்னும் சில பொருள்களை தோட்டத்துப் பக்கம் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆறுமாதத்திற்கு மேலாக அவர் வைத்திருந்த பொருள்கள் வெயிலிலும் மழையிலும் காய்ந்து வீணாகிக் கொண்டிருந்தன. பலமுறை அவரை அழைத்துச் சொல்லிய பிறகு அவர் வருவதாகத் தெரியவில்லை.

கடைசியாக நானே அந்தப் பொருள்களைப் பராமரிக்க ஒரு திட்டம் போட்டேன். இயற்கை அதற்குக் கைகொடுத்தது. நாம் என்னதான் செயற்கையாக அரண்களை அமைத்துக்கொண்டாலும் இயற்கை நமக்கு அளிக்கும் அரண் மிகவும் பாதுகாப்பனது இல்லையா? இப்போது வீடுகளில் அழகுக்காகப் பலவிதமான கொடிகள் வளர்ப்பதை நீங்கள் பார்க்கலாம். அவை பெரும்பாலும் குரோட்டன் போன்ற அழகுச் செடிகளாக மட்டுமே இருக்கும்.

அந்தச் செடிகள் வீட்டிற்கு அழகைத் தருவதோடு கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். அது மட்டுமில்லாமல் வீட்டுச் சுவர்களுக்கு ஓர் அரணாகவும் இருக்கும். அந்த வழியையே நானும் கடைபிடிக்கத் தீர்மானித்தேன். ஆனால் நான் வளர்தது வெறும் அழகுக்கான செடிகளை அல்ல, பயன் தரும் பாகற்கொடிகளை.

கட்டுமானப் பொருள்கள் மீது பாகற்கொடிகளைப் படரவிட்டேன். இப்போது கொடிகள் நன்கு தழைத்து அந்தப் பொருள்கள் மீது ஓர் அரணாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகற்காய்களை நான் சமையலுக்குப் பறித்துக்கொள்கிறேன். பாகற்காயின் பயன்களைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

- எஸ். முத்துசெல்வி, கூடுவாஞ்சேரி

SCROLL FOR NEXT