சொந்த வீடு

வீட்டுக் கடன்: வட்டிக் குறைப்பால் வங்கி மாறலாமா?

மிது கார்த்தி

உயர் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டிக் குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வீட்டுக் கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக வட்டிக் குறைப்பைச் செய்துள்ளதால், வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்படி வேறு வங்கிக்கு மாறுவது லாபமா?

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஏராளமான பணம் வங்கிகள் வசம் வந்ததால், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டன. இதனால், பொதுத் துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. சில வங்கிகளில் வட்டி விகிதம் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில வங்கிகளிலோ குறைந்த அளவிலேயே வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி விகிதம் குறைந்திருப்பது புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே குறைந்த வீட்டுக் கடன் வட்டியில் கடன் பெற புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு பொருந்தும் என்றாலும், சில அடிப்படை விஷயங்களைச் செய்தால்தான் அதற்கான பலனை அனுபவிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதாவது ‘கன்வர்ஷன்’ செய்ய வேண்டும். இந்த நடைமுறை எல்லா வங்கிகளிலும் அமலில் உள்ளது. புதிதாக நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதப் பலனை அடைய ‘கன்வர்ஷன்’ செய்துகொண்டால்தான் முடியும். இதற்கு சிறிது செலவாகும். ‘கன்வர்ஷன்’ செய்துகொள்வதாக வங்கியில் தெரிவித்து, பணத்தை செலுத்திய பிறகு வட்டிக் குறைப்பு பலனை அனுபவிக்க முடியும்.

வழக்கமாக வீட்டுக் கடன் வட்டி குறைந்தால், செலுத்தும் தவணைத் தொகை (இ.எம்.ஐ.) குறையாது. செலுத்தப்படும் தவணைக் காலம் மட்டும்தான் குறையும். ‘கன்வர்ஷன்’ செய்தாலும் தவணைக் காலம் மட்டுமே குறையும். இதுவும் சாதகமான விஷயம்தான். ஒருவர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வீட்டுக் கடன் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு 20 தவணைக் காலம் குறைந்தால் 3 லட்சம் ரூபாய் குறைந்துவிடும். ‘கன்வர்ஷன்’ செய்துகொள்ளும் வசதி மாறுபடும் வட்டியின் கீழ் கடன் வாங்கியவர்களுக்கே பொருந்தும். குறிப்பிட்ட காலம் வரை ஒரே வட்டி விகிதமே வசூலிக்கப்படும் என்பதால் நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்காது.

எப்போதும் வட்டி விகிதம் குறைவதையும், அதன் மூலம் தவணைத் தொகை குறைவதையும் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் அதிக வட்டிக் குறைப்பு செய்யப்படும் வங்கியின் மீது பார்வை திரும்புவதும் வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கை. அதிக வட்டிக் குறைப்பு வழங்கும் வங்கிக்கு செல்வது சரியா? அதிக வட்டிக் குறைப்பு வழங்கும் வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்வது சரியானதுதான். ஆனால், சில சாதக, பாதக விஷயங்களை இதில் பார்க்க வேண்டும்.

முதலில் வட்டி விகிதம் குறைப்பு வித்தியாசம் எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டும். சுமார் 1 சதவீதம் அளவுக்கு வித்தியாசம் இருந்தால் தாரளமாக வேறு வங்கிக்கு மாறுவது பற்றி சிந்திக்கலாம். இதுவே 0.50 சதவீதம் அளவுக்கு இருக்குமானால் அதே வங்கியில் தொடர்வது நல்லது. ஏனென்றால், புதிதாக ஒரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், அந்த வங்கி கடனுக்கான பிராசஸிங் கட்டணம் வசூலிக்கும். மேலும் கடன் வாங்கினால், வங்கி பெயரில் வீடு அடமானத்தை பத்திரவுப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து தர வேண்டும். அதற்கெனத் தனியாகச் செலவாகும். இந்தச் செலவுகளைப் பார்க்கும்போது குறைந்தபட்சம் 1 சதவீதம் அளவுக்கு வட்டி வித்தியாசம் இருந்தால் மட்டுமே லாபமாக இருக்கும். அப்படி இல்லாவிட்டால் பழைய வங்கியிலேயே செயல்படுவது நல்லது.

SCROLL FOR NEXT