சமீபத்தில் நடந்த இரு கட்டிட விபத்துகள் கட்டுமானத் துறையையும் பாதித்திருக்கின்றன. தி.நகரில் தனியார்த் துணிக்கடையில் ஏற்பட்ட விபத்து தீயால் நடந்தது என்றாலும் கட்டுமானம் தீயைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது கவனிக்கத்தக்கது. எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாகச் சொல்லப்படும் இங்கிலாந்தில் லண்டன் நகரில் ஏற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு தீ விபத்தும் கட்டுமானத் துறைக்கு ஒரு பாடம். சென்னையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு மவுலிவாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழந்தததும் கட்டுமானத் துறையைப் பொறுத்தவரை நினைவுகொள்ள வேண்டிய சம்பவம்.
இம்மாதிரி வீடுகள் விபத்துக்குள்ளாகும்போது அந்த வீடுகளைப் பணம் கொடுத்து வாங்கியவர்களின் கதி என்னாகும், அவர்கள் அதற்காக முதலீடு செய்த பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது? சொந்த வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற சிறிது சிறிதாகச் சேமித்து வாங்கிய வீடு விபத்துக்குள்ளானால் அதைத் தாங்கிக்கொள்வது எளிதல்லவே. ஆனால் இதையும் கடந்துவர வேண்டியதிருக்கிறதே. இத்தகைய விபத்துகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஒரு கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.
வீட்டுக்குக் காப்பீடு பெற்றிருந்தால் பணத்தை அந்தக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பது அத்துறை நிபுணர்களின் கருத்து. இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. வீடு வாங்கக் கடன் வாங்கியவர்கள், அந்தப் பணத்தின் பாதுகாப்புக்காகக் காப்பீடு பெற முடியாது என்கிறார்கள் வங்கியாளர்கள். ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்ட பிறகே காப்பீடு என்பது செல்லுபடியகும் என்றும் கூறுகிறார்கள். வீடு கட்டும்போதே இடிந்துவிட்டால் காப்பீடு மூலம் பணத்தைப் பெற இயலாது. அதுமட்டுமல்ல; வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனுக்கும் மாதந்தோறும் இ.எம்.ஐ. செலுத்த வேண்டிய நிலையும் வரும். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வங்கிகளிடமிருந்து சலுகைகள் பெற வாய்ப்புகள் எதுவும் இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சட்டரீதியாக இதை எதிர்கொள்ள வழியிருக்கிறது.
உதாரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குழுவாகச் சேர்ந்து ஒரு அமைப்பைத் தொடங்கியோ தனிநபராகவோ நீதிமன்றத்தை அணுகிக் கட்டுமான நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரலாம். பணம் வாங்கிக்கொண்டு வீடு கட்டித் தரவில்லை என்று நீதிமன்றத்தில் எடுத்துரைக்கலாம். பொதுவாக வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் குடியிருப்புத் திட்டத்தைக் காப்பீடு செய்வதுண்டு. வீடு கட்டும்போது ‘Errection all risk’ என்ற காப்பீடோ அல்லது ‘contractor all risk’ என்னும் காப்பீடோ எடுத்துக்கொள்வார்கள். இந்தக் காப்பீடுகளில் ஏதேனும் ஒன்றைக் கட்டுமான நிறுவனம் எடுத்திருந்தாலும் காப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். இதை வைத்துக் கட்டுமான நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடலாம்.
வீடு கட்டும்போதுதான் மேற்கண்ட பிரச்சினைகள் எழுகின்றன. வீடு கட்டிய பிறகு, அந்த வீட்டுக்குச் சாதாரண காப்பீடு எடுத்துவிட்டால் போதும், நம் வீட்டுக்கும் முதலீட்டுக்கும் பாதுகாப்பு நிச்சயம். எனவே, வீடு கட்டிக் குடியேறியவர்கள் காப்பீடு எடுப்பதில் தயக்கம் காட்டக் கூடாது.