ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவு மொரீஷியஸ். அதிநவீனத் தொழில்நுட்பக் கேந்திரமாக உத்தேசிக்கப்பட்டு 2001-ல் சைபர் சிட்டி என்னும் புதிய நகரத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரே நேரத்தில் இன்று நகரியத் திட்டமிடலின் சீரழிவாகவும், மொரீஷியஸ்காரர்களின் பெருமிதமாகவும் இந்த நகரம் இருக்கிறது. நவீன அலுவலக வாழ்க்கையை முழுமையாக அர்த்தப்படுத்தக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டது.
இன்று வார நாட்களில் 25 ஆயிரம் பேர் இந்த நகரத்தில் தங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்துப் பணியாளர்கள். தொடர்ச்சியற்ற தன்மை, மோசமான பொதுப் போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களின் போதாமை, பாதசாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது போன்ற விமர்சனங்கள் இந்த நகரத்தின் மீது வைக்கப்பட்டாலும் நவீனத் தகவல்தொடர்பின் பல அம்சங்களை இந்த நகரத்தின் உருவாக்கம் மொரீஷியஸின் பணியாளர்களுக்குச் சாத்தியமாக்கியது.
வசதிகள் கொண்ட நகரம்
“இந்த நகரம் சற்றும் முழுமை பெறாததே என்றாலும் முன்பிருந்ததற்கு இப்போது எவ்வளவோ தேவலாம்” என்கிறார் ராஸ் மேக்பெத் என்ற கட்டிடக் கலைஞர்.
கரும்புத் தோட்டங்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட இந்த சைபர்சிட்டி சுற்றுப்புற நகரங்களிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டிருக்கிறது. மொரீஷியஸின் எதிர்காலத்தை நோக்கிய பெரும் பாய்ச்சல் என்றெல்லாம் இந்த நகரம் அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.
எவ்வளவோ குறைகள் இருந்தாலும் 64 ஹெக்டேர் பரப்பளவுள்ள இதன் வளாகத்தில் அதிவேக இணைய வசதி இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தே பார்த்திட முடியாத வசதி இது. அடிக்கடி நிகழும் மின்வெட்டைச் சமாளிக்க மின்னியற்றிகளும் இணையத் தொடர்பு துண்டிக்கப்படாமல் இருக்க வலைப்பின்னல் அமைப்புகளும் துணைபுரிகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து மிகவும் தொலைவில் இருந்தாலும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த இந்த தீவு இணையம் வழியாக ஆப்பிரிக்காவுடன் நன்றாகவே தொடர்பில் இருக்கிறது.
“புத்திசாலித்தனமான முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள், குளிர்சாதன அமைப்புகள், மின்சாரத்துக்கான பக்கத் துணைகள் என்று உண்மையில் இந்த நகரம் என்பது நவீன வசதிகளின் கேந்திரம்” என்கிறார் குமரன் செட்டி. மொரீஷியஸ் வணிகப் பூங்காக்களின் (BMPL) தலைமைச் செயலதிகாரியாக இவர் இருக்கிறார். சைபர்சிட்டியை உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்தான் இது.
இந்திய நிறுவனங்களின் கட்டிடங்கள்
முதல் பணியாக 12 மாடிகளைக் கொண்ட சைபர் டவர் 1 கட்டப்பட்டது. இதை வடிவமைத்தது, கட்டியது எல்லாம் இந்திய நிறுவனங்களே. கூடுதலாக இந்தக் கட்டுமானத்துக்கு இந்திய அரசு கடனுதவியும் வழங்கியது. ஆனால், இரண்டாவது கட்டிடத்தைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு உத்தேசித்தபோது உள்ளூர்க் கட்டிடப் பொறியாளர்களையும் உள்ளூர்க் கட்டுமான நிறுவனங்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள். வெளிநாடுகளிலிருந்து மொரீஷியஸ்காரகள் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு என்று அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது.
தற்போது இரண்டாவது பத்தாண்டில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது இந்த சைபர்சிட்டி. திட்டமிட்ட நகரிய வளர்ச்சியைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையில் இருக்கும் முக்கியமான வேறுபாட்டை சைபர்சிட்டி கோடிட்டுக் காட்டுகிறது.
“ஐரோப்பாவில் திறன் நகரங்களைப் பற்றி (smart cities) பேசும்போது ஏற்கெனவே இருக்கும் நகரங்களுக்குப் புத்துயிர் ஊட்டத்தான் நினைப்போம். ஆனால், இதற்கு நேரெதிராகத்தான் மொரீஷியஸ் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் திறன் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. புழுதியும் இரைச்சலும் சமத்துவமின்மையும் நிரம்பிக் காணப்படும் நகரங்களுக்குத் தொலை தூரத்தில் புத்தம் புதிதாகத் திறன் நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. சமுதாயத்தில் எல்லோரையும் உள்ளடக்க வேண்டும் என்ற சிந்தனைக்கே எதிரான போக்கு இது” என்கிறார் மோஜோன பெர்த்ராந் என்ற பிரெஞ்சுப் பேராசிரியர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும்பாலான திறன் நகரங்கள் அப்படித்தான் என்கிறார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரஷீக் ஃபதார் என்ற நகரிய வல்லுநர். “பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் இதன் பின்னுள்ள ஒட்டுமொத்த நோக்கம்” என்கிறார் அவர்.
மோஜோன பெர்த்ராந், “சமீபத்திய ஐரோப்பிய, அமெரிக்கத் திறன் நகரங்களை ஆப்பிரிக்கா பின்பற்றினால் நல்லது” என வலியுறுத்திறார். அவர் குறிப்பிடும் ஐரோப்பிய, அமெரிக்க மாதிரிகள் சமூக, சுற்றுச்சூழல் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டவை.
புதிய நகரங்கள் தேவை இல்லை
மொரீஷியஸின் சைபர்சிட்டியைப் பீடித்துள்ள பிரச்சினைகள் அங்குள்ள கட்டிடங்கள், அவற்றிலுள்ள அலுவலகங்கள் தொடர்பானவையல்ல; ஒட்டுமொத்த திட்டப்பணிக்கும் தொடர்பானவை. ஒன்றுக்கொன்று இயைந்துபோகாத கட்டிடக் கலை வடிவமைப்புகளின் கலவையாக இந்த நகரம் காட்சிளிக்கிறது. நவீனத்தன்மை, வசதிகள் போன்றவை தரத்தில் வெவ்வேறு அளவில் வேறுபடுகின்றன. நசநசப்பு, மோசமான காற்றோட்ட வசதி, மோசமான குளிர்சாதன வசதி, எங்கெங்கும் உணவின் நாற்றம்! இதுதான் சைபர்சிட்டியின் நிலை என்கிறார்கள்.
13 லட்சம் பேர் வசிக்கும் இந்தத் தீவைப் பொறுத்தவரை நகர மேம்பாடு என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பெரும் பிரச்சினையாக இருக்கிறது. சைபர்சிட்டியும் அதில் அரசின் பங்கும் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில் புதிய அரசு அந்தத் தீவு முழுவதும் பல்வேறு திறன் நகரங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 115 ஹெக்டேரில் அமையவிருக்கும் ஹெரிட்டேஜ் நகரமும் அவற்றுள் ஒன்று. அந்த நாட்டின் பெரும்பாலான அரசுக் கட்டிடங்களும் அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளும் அந்த நகரத்தில் அமையவிருக்கின்றன.
“எங்களுக்குப் புதிய நகரங்கள் வேண்டாம்; எங்கள் நகரங்களைத் திறன் மிக்கவையாக ஆக்கினால் போதும்” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவருமான ஆடில் ஆமீர் மீயா.
ஹெரிட்டேஜ் நகரத்துக்கான நிதியை மொரீஷியஸ் அரசு எங்கிருந்து பெறப்போகிறது என்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. கட்டுமானச் செலவுக்காக சவுதி அரேபியாவிடம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க மொரீஷியஸ் அரசு திட்டமிட்டிருக்கிறது.
“மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களைத்தான் நாங்கள் பின்பற்ற நினைக்கிறோமே தவிர ஆதியில் நடந்ததுபோல் முதன்முதலாகச் சக்கரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை” என்கிறார் கேட்டன் சீவ். திறன் நகரங்களுக்கு அங்கீகாரமும், வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அளிக்கும் குழுவின் தலைவர் இவர்.
சைபர்சிட்டியில் தனது அலுவலகத்தில் அமர்ந்தபடி நம்முடன் பேசும் குமரன் செட்டி, சைபர்சிட்டியின் குறைகளை ஒப்புக்கொள்ளவே செய்கிறார். அந்தக் குறைகளைக் களைவதற்காக ‘திறன் சமூகம்’ என்ற ஒரு திட்டத்தைத் தான் வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் அங்கே வரவழைத்து அவர்கள் ஒன்றுகூட, பழக, ஒரு சமூகமாக உருவெடுக்க ஏற்றவாறு வெவ்வேறு கட்டிடங்களை அங்கே கட்டலாம் என்று குமரன் செட்டி கூறுகிறார்.
இந்தத் தீவை மறுவடிவமைப்பு செய்யும் செயல்பாட்டில் சந்தையின் தேவை என்ற ஒரு விஷயத்தையே காணோம் என்கிறார் மீயா. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலல்லாமல் மொரீஷியஸின் மக்கள்தொகை நிதானமாகவே இருக்கிறது. இந்தச் சிறிய நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் திருமணங்களே நடைபெறுகின்றன. ஏராளமான வெளிநாட்டுக்காரர்கள் வந்தாலொழிய புதிய நகரங்களை உருவாக்குவதற்கான தேவை இங்கு குறைவே.
காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி மக்கள் வெகுவேகமாகத் தங்கள் அலுவலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். தலைநகரத்துக்குச் செல்லும் வழியின் இடது புறம் கரும்பு வயல்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அங்கேதான் புதிதாக உத்தேசிக்கப்பட்ட ஹெரிட்டேஜ் நகரம் வரக்கூடும். இடது பக்கமோ சைபர் சிட்டி நிற்கிறது, வெறும் கட்டிடங்கள் ஒருபோதும் சமூகங்களை உருவாக்காது என்பதையும் நகரிய மேம்பாட்டுச் செயல்பாடுகள் எல்லோருக்கும் வேலை தராது என்பதையும் நினைவுறுத்தியபடி.
தமிழில் சுருக்கமாக: ஆசை