வீடோ மனையோ எது வாங்கினாலும் முதலில் என்ன செய்வீர்கள்? விலை நிலவரத்தைக் கேட்பீர்கள். விலையை பல வழிகளில் விசாரித்து வாங்கும் பலரும், பத்திர விஷயங்களை அந்த அளவுக்கு ஆராயமல் விட்டுவிடுவார்கள். வீடோ அல்லது மனையோ வாங்கும்போது பத்திரங்களின் உண்மைத் தன்மையை மிகவும் கவனமாக ஆராய வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் போலி பத்திரங்கள் மூலம் வீடுகளை விற்றுவிடுவார்கள் என்பதால் உஷார் தேவை.
# வீடு அல்லது மனையை விற்கும் சிலர், பழைய ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி பேசிக்கொண்டே இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஜெராக்ஸ் பத்திரத்தை மட்டும் பார்க்காமல் அசல் பத்திரத்தைக் காட்ட சொல்ல வேண்டும்.
# மனையையோ அல்லது வீட்டையோ அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அசல் பத்திரம் இல்லாமல் இருக்கும். எனவே ஜெராக்ஸ் காட்டி ஏமாற்ற பார்ப்பார்கள்.
# அப்படி கொடுக்கப்படும் அசலை ஆவணங்களையும் தெளிவாகக் படித்து பார்க்க வேண்டும். சிலர் அடமானம் வைத்து மீட்டு விட்டதாகவும் கூறுவார்கள். அப்படி மீட்டிருந்தால் வங்கி இரு சான்றிதழ் கொடுத்திருக்கும். அந்தச் சான்றிதழைக் காட்டச் சொல்லி கேட்க வேண்டும்.
# உங்களோடு விட்டு விடாமல் ஆவணங்களை ஒரு நல்ல வழக்கறிஞரிடம் காட்டி அதன் உண்மை தன்மை பற்றியும் விசாரிக்க தவறாதீர்கள். வழக்கறிஞருக் கான கட்டணத்தில் சிக்கனம் பார்க்க வேண்டாம்.
# தாய்ப் பத்திரம், கிரயப் பத்திரம் சரியாக இருந்து, வழக்கறிஞரும் சிக்கல் இல்லை என்று கூறிய பிறகு முன் தொகைப் பணத்தைக் கொடுக்கலாம்.
# முன் தொகை கொடுத்த பிறகுகூட வீடோ மனையோ பிடிக்காமல் போகலாம். அந்த மாதிரியான நேரத்தில் கொடுத்த முன் பணத்தைக் கொடுக்காமல் சிலர் ஏமாற்றுவார்கள். முன் பணம் கொடுப்பதற்கு முன்பு விற்பவரின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்துவிட வேண்டும்.