அமெரிக்காவோடும் ஐரோப்பிய நாடுகளோடும் நம் மாநிலத்தை ஒப்பிட்டு தமிழ்நாடு மோசம், அதிலும் சாலைப் போக்குவரத்து மிகவும் மோசம் என்று சொல்வது ஒரு ஃபேஷன்.
தங்களது நவநாகரிகத் தன்மையை நிரூபிக்க இப்படிச் சொல்வது இயல்பாகிவிட்டது. இதில் உண்மை சிறிய சதவீதத்தில் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. சென்னையின் பல சாலைகள் போக்குவரத்தால் பிதுங்கிவழிவதும், பாதசாரிகள் படாதபாடுபடுவதும் கண்கூடு.
இதை ஏன் இன்னும் முறைப்படுத்தாமல் வைத்திருக்கிறார்களே என்னும் ஆதங்கமும் மேற்கண்ட கருத்து கொண்டவர்களுக்கு இருக்கலாம். இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. முதல் கட்டமாக பாண்டி பஜார் சாலை நவீனமாக்கப்பட உள்ளது.
இப்போதைய தியாகராய நகர், பாண்டி பஜாரை நினைத்த மாத்திரத்தில் மக்கள் நெருக்கடியும், வாகன நெருக்கடியும்தான் மனத்தில் காட்சி கொள்ளும். ஆனால் நவீனமான பின்னர் இதே பாண்டி பஜாரில் நடந்து செல்லப் பிரியப்படுவீர்கள், வாகனங்களில் செல்வதைவிட நடந்து சென்றால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தை உங்களிடம் விதைக்கப்போகிறது புதிய மாற்றம். அது என்ன மாற்றம்?
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம், ஸ்பெயினின் ராம்ப்லா போன்ற பகுதிகளை மாதிரியாகக் கொண்டு பாண்டி பஜாரைச் சென்னை மாநகராட்சி மறு வடிவமைப்பு செய்யப்போகிறது. இதற்கான வரைபடம் தயார் நிலையில் உள்ளது. இந்தத் திட்டம் பாண்டி பஜாரை மூன்று பகுதியாகப் பிரிக்கிறது.
முதல் பகுதி பனகல் பூங்காவிலிருந்து டாக்டர் நாயர் சாலை வரையும், இரண்டாம் பகுதி டாக்டர் நாயர் சாலையிலிருந்து வடக்கு போக் சாலையிலுள்ள ரெஸிடென்ஸி கோபுரம் வரையும் உள்ளடக்கியது. ரெஸிடென்ஸியிலிருந்து மவுண்ட் ரோடு வரையானது மூன்றாம் பகுதி.
முதல் பகுதியில் தெற்குப் பக்கம் பாதசாரிகளுக்கான நடைபாதையும் வடக்குப் பக்கத்தில் பேருந்துக்கான பாதையும் அமைக்கப்படும். சாயங்கால வேளைகளில் இந்தப் பேருந்துக்கான பாதை அங்கிருக்கும் கடைகளுக்கான சேவைப் பாதையாகவும் செயல்படும், அதாவது கடைகளுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த வசதியாக இருக்கும். அந்த அளவுக்குப் போதிய இடத்துடன் புது வடிவமைப்பு இருக்கும். இரண்டாம்
பகுதியில் தெற்கே பாதசாரிகளும் வடக்கே பேருந்துகளும் ஒருங்கே செல்லும் வகையில் பாதை உருவாகும். இங்கே இருபுறங்களிலும் சேவைப் பாதையும் அமைக்கப்படும். மூன்றாம் பகுதியில் நான்குவழிப் பாதையும் இரு புறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்லவும் வாகனங்களை நிறுத்தவும் உதவும் வகையில் அகலமான பாதையும் அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தைப் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கைக்கான நிறுவனம் (Institute for Transportation and Development Policy) என்னும் அமைப்பு மேற்கொள்ளப்போகிறது. இதன் திட்டச் செலவு ரூ. 83 கோடி. 1.4 கிலோ மீட்டர் நீளமுள்ள பாண்டி பஜார் சாலையை மறு வடிவமைப்பு செய்வது தி நகர் வாசிகளுக்கோ பாதசாரிகளுக்கோ மட்டும் நலம் பயக்கும் என்று எண்ணிவிடாதீர்கள்.
அது ரியல் எஸ்டேட்டையும் ஒரு தூக்கு தூக்கும் என நம்பப்படுகிறது. ஏனெனில் டைம்ஸ் சதுக்கத்தில் இப்படிப் புது வடிவமைப்பு மேற்கொண்ட பின்னர் அங்கே வாடகை 70 சதவீதம் அதிகரித்ததாம்.
பாண்டி பஜாரின் மூச்சு முட்ட வைக்கும் கூட்ட நெரிசலையும் வாகன நெரிசலையும் ஒழுங்குபடுத்தும் முனைப்பு அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரவே செய்யும். ஆனால், பாண்டி பஜாரில் வியாபாரம் செய்துவரும் நடைபாதை வியாபாரிகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஒரு நகரம் வளர்ச்சி அடையும்போது அந்த நகரத்தின் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது மனிதநேயம் கொண்ட பார்வையே. புதிய வடிவமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் பாண்டி பஜாரில் சிற்றுந்துகளையும் மின்கார்களையும் இயக்கும் திட்டமும் மாநகராட்சிக்கு உள்ளது.
ஒரு நிமிடம் புதிய பாண்டி பஜாரைக் கண்மூடி கற்பனை செய்து பாருங்கள், ஷங்கர் படத்தில் இடம்பெறும் நவீனமய ஷாப்பிங் சாலை ஒன்று கண்ணெதிரே தோன்றுகிறதா? இப்படி அனைத்துச் சாலைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டால்
இனி டிராபிக் ராமசாமிக்கு வேலை இருக்காது என்பது மட்டும் நிஜம்.