சொந்த வீடு

பட்டா தொலைந்தால்..?

செய்திப்பிரிவு

முன்பெல்லாம் வீட்டுக்குப் பட்டா அவசியமல்ல. பத்திரப்பதிவு இருந்தால் போதும் என்றிருந்தது. ஆனால், இப்போது பத்திரம் இருந்தாலும் பட்டாவும் அவசியம். அதனால் பட்டாவைப் பாதுகாப்பது அவசியம். ஒரு நிலம் உங்களுக்குச் சொந்தனமானது என்பதற்குப் பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியம். மேலும் வங்கிக் கடன் விண்ணப்பிக்க பட்டா தேவை. பட்டா காணாமல் போனால் மீண்டும் விண்ணப்பித்து டூப்ளிகேட் பட்டா வாங்கிவிட முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன?

பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்தைத்தான் அணுக வேண்டும். அங்கே முதலில் விண்ணப்பிக்க வேண்டும். நகல் பட்டா கோரும் விண்ணப்பத்தையும், பழைய பட்டா நகல் அல்லது அதில் உள்ள விவரங்களைக் கொடுப்பது நம் பணியைச் சுலபமாக்கும். பட்டாவுக்காகக் குறிப்பிட்ட தொகையை வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். எந்த வங்கி என்பதை தாசில்தார் அலுவலகத்தில் விசாரித்தால் தெரியும்.

பட்டாவைப் பெற சில நடைமுறைகள் உள்ளன. தாசில்தாரிடம் டூப்ளிகேட் பட்டா கேட்டு மனு தந்த பிறகு, கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் விசாரணைக்குப் பிறகு மனு மீது ஒப்புதல் பெற வேண்டும். விசாரணையின் அடிப்படையில் பட்டா கிடைக்கும். பட்டாவைப் பெற அதிகபட்சமாக 15 நாட்கள் கால அவகாசம் உண்டு. சில சமயங்களில் பட்டா பெற இழுத்தடிக்கும் வேலையும் நடக்கும். அப்போது மேலும் தாமதமாகலாம்.

SCROLL FOR NEXT