சொந்த வீடு

பேசும் பொற்சித்திரங்கள்

செய்திப்பிரிவு

புதுமையான பல விதமான வீட்டு உள் அலங்காரம் செய்வது தற்போதைய டிரெண்ட். பலவிதமான புதிய தொழில்நுட்பங்களை உபயோகித்து கண்கவர் கலை நயத்துடன் வீட்டு உள் அலங்காரம் செய்துகொள்ளவே பலரும் விரும்புகின்றனர்.

அந்தப் புதுமையில் பாரம்பரியத்தைப் புகுத்தி கண்கவர் கலை ஓவியங்களை நம் வீட்டு சுவர்களில் இடம் பெற செய்கிறார் ‘தி பேலஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் பாலமுருகன். இவர் 14 ஆண்டுகளாக “ஆயில் பெயிண்டிங்” வரைவதில் கைதேர்ந்தவர்.

கடந்த 4 ஆண்டுகளாகப் பழங்குடி மக்களின் கலை ஓவியங்களைச் சுவர்களில் பிரத்யேகமாக வரைந்து தருகிறார். “மறைந்துபோன கற்கால ஓவியக்கலை தற்போது மீண்டும் பிரபலமடைந்து வருகிறது” என்று சொல்கிறார் பாலமுருகன்.

கோண்டு ஓவியங்கள்

மதுபானி, கலம்காரி,கோண்டு, வார்லி, இவையெல்லாம் பாரம்பரிய பழங்குடி மக்களின் ஓவியக் கலைகள். பழங்காலக் குகை ஓவியங்கள் தொடங்கி பண்டிகைகள், திருவிழாக்(கோ)காலங்கள் என அனைத்திலும் நம் முன்னோர்கள் சுவர் ஓவியங்கள், சித்திரங்கள் எனத் தங்களின் கலைத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

உதாரணமாக மதுபானி அல்லது மிதிலா ஓவியப் பாணி இந்தியாவின், பீஹார் மாநிலத்தில் மதுபானி மாவட்டத்தில் தோன்றிய ஓவியப்பாணி. இராமாயணக் காலத்திலேயே சீதையின் திருமணத்தின் போது பிரத்யேகமான ஓவியர்களால் மாளிகையின் சுவர்களில் வரையப்பட்டது. அக்காலத்தில் மதுபானி பகுதியில் வாழும் பெண்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் விழாக்காலங்களில் இவ்வகை ஓவியங்களை வரைந்தனர். பெரும்பாலான பழங்குடி மக்களின் ஓவியங்கள் அப்பகுதி பெண்களால் உருவாக்கப்பட்ட கலை வடிவம்.

இதில் கோண்டு மற்றும் வார்லி ஓவியங்கள் வரைவதில் வல்லுநராகத் திகழ்கிறார் பாலமுருகன்.

மக்களும் இவ்வகை ஓவியங்களை அதிக அளவு விரும்புகின்றனர் என்கிறார். தோராயமாக இவ்வகை ஓவியங்கள் தீட்ட ஒரு சதுர அடிக்கு 1200 ருபாய் ஆகும். பெரும்பாலான இவ்வகை ஓவியங்களில் மரங்கள், மிருகங்கள், பறவைகள், மலர், செடி, கொடிகள் என இயற்கைச் சித்திரங்களே இடம்பெறுகின்றன.

அதே பழங்கால முறையைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து தற்காலத்திற்கு ஏற்ற வகையில் சுவர்களில் வரையப் பயன்படுத்தும் பெயிண்ட் உபயோகித்து வரைந்து தருகிறார். அதனால் இதற்கு நிறைய நேரம் செலவாகிறது. ஒரே ஒரு சுவரில் ஓவியம் வரைந்து முடிக்கவே 2 முதல் 3 மாதங்கள் பிடிக்கும். இதற்கு நிறையப் பொறுமையும் படைப்பாற்றலும் தேவை.

கோண்டு என்ற வகை ஓவியங்கள் மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற ஊர்களைச் சேர்ந்த கொண்டு பழங்குடி மக்களால் குகை ஓவியங்களாக வரையப்பட்டன. மலர்கள், மரங்கள், விலங்குகள் என்று பெரும்பாலும் இயற்கைச் சித்திரங்களாக வரையப்படுகின்றன.

வார்லி ஓவியக்கலை 2000-3000 ஆண்டுகள் பழமையானது. குகைகளில் வாழ்ந்த வார்லி இனப் பழங்குடி மக்கள், எளிய அடிப்படை வடிவங்களான வட்டம், சதுரம், முக்கோணம் போன்றவற்றைக் கொண்டே இயற்கைக் காட்சிகளை வரைந்தனர்.

திருமண விழாக்களிலும் இவ்வகை ஓவியங்கள் வரையும் பழக்கம் வார்லி பழங்குடி மக்களிடம் இருந்துள்ளது. சுவர் ஓவியம் என்ற நிலையிலிருந்து தற்போது ஆடை வடிவமைப்புகளிலும் இவ்வகை ஓவியங்களைக் காண முடியும்.

ஆந்திராவில் பிரபலமான கலம்காரி ஓவியம் முற்றிலும் பேனாவால் வரையப்படுவது. பெரும்பாலும் காளஹஸ்தி பகுதியில் உள்ள கோயில்களின் திரைச்சீலைகள், சுவரில் தொங்கும் ஓவியங்கள், தேரில் இடம் பெறும் வண்ண வண்ணத் திரைச்சீலைகள் போன்றவற்றில் கலம்காரி ஓவியங்களைக் காண முடியும். போச்சம்பள்ளி துணி வகைகளிலும் காண முடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய ஓவியங்கள் நம் வீட்டுச் சுவர்களில் இடம்பெற்றால் எவ்வளவு அழகாக இருக்கும். பெரும்பாலும் படுக்கையறை சுவர்களில் ஒரு பக்கச் சுவரில் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அந்த அறையில் ஒரு ரம்மியமான சூழலை ஏற்படுத்தித் தருகிறது.

சிலர் வரவேற்பறையை அழகு படுத்தவும் இத்தகைய ஓவியங்களைத் தங்கள் வரவேற்பறையில் வரைந்து கொள்கின்றனர். பாரம்பரிய கலை நயத்தை விரும்புகின்றவர்கள், ஓவியக்கலைப் பிரியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களை இத்தகைய ஓவியங்களால் அலங்கரித்துக் கொள்ளலாம். தொடர்புக்கு: thepalaces@yahoo.com

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய ஓவியங்கள் நம் வீட்டுச் சுவர்களில் இடம்பெற்றால் எவ்வளவு அழகாக இருக்கும். பெரும்பாலும் படுக்கையறை சுவர்களில் ஒரு பக்கச் சுவரில் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன.

இந்த ஓவியங்கள் அந்த அறையில் ஒரு ரம்மியமான சூழலை ஏற்படுத்தித் தருகிறது. சிலர் வரவேற்பறையை அழகு படுத்தவும் இத்தகைய ஓவியங்களைத் தங்கள் வரவேற்பறையில் வரைந்து கொள்கின்றனர். பாரம்பரிய கலை நயத்தை விரும்புகின்றவர்கள், ஓவியக்கலைப் பிரியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களை இத்தகைய ஓவியங்களால் அலங்கரித்துக் கொள்ளலாம். தொடர்புக்கு: thepalaces@yahoo.com

SCROLL FOR NEXT