கதவுகள் வீட்டுக்குக் கண்ணைப் போன்றது. அந்தக் கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் முன்பெல்லாம் வேலைப்பாடுகள் மிகுந்த கதவுகளை உருவாக்குவார்கள். மேலும் முன்பெல்லாம் மரத்தால் மட்டும்தான் கதவுகள் செய்தார்கள். இப்போது கண்ணாடி இழைகள், பிளாஸ்டிக்கில் போன்ற பல பொருள்களால் ஆன கதவுகள் சந்தையில் கிடைக்கின்றன.
மரக் கதவின் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. படாக், வேங்கை, பர்மா தேக்கு, நைஜீரியா தேக்கு எனப் பல வகைக் கதவுகள் சந்தையில் உள்ளன. இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பட்ஜெட்டை வைத்துக் கதவு வாங்குவதை முடிவு செய்யலாம். மரத்துக்கு மாற்றாக ஸ்டீல்களும்கூட இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது ஸ்டீல் விலையும் அதிகமாகவே விற்பனையாகிறது. எனவே விலை அதிகமாக உள்ள இந்தக் கதவுகளைவிடக் கண்ணாடி இழைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடி இழைக் கதவுகளைப் பயனபடுத்தலாம். இவற்றின் விலை குறைவு. மேலும் கண்ணைக் கவரும் வகையில் பல டிசைன்களிலும் கிடைக்கின்றன.
அசல் மரக் கதவுகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கதவுகளில் பல்வேறு வண்ணங்களில் நாம் விரும்பும் வகையில் செய்ய முடியும். மரம் மற்றும் ஸ்டீல் கதவுகளில் பராமரிப்பு அதிகம் தேவைப்படும். மழைக்காலங்களில் சில மரக் கதவுகளில் தண்ணீர் பட்டால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும். ஆனால் கண்ணாடி இழைக் கதவுகளில் அந்தப் பிரச்சினை இல்லை. 100 சதவீதம் வாட்டர் ஃபுரூப்புடன் எல்லா சீதோஷ்ண நிலைகளையும் தாங்கக்கூடியவை.
குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை, உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் இந்தக் கதவுகளைப் பொருத்த முடியும். குறிப்பாகக் குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அறைகள் மற்றும் குழந்தைகளின் குளியல் அறைகளுக்குக் குழந்தைகள் விரும்பும் வகையிலான டிசைன்களிலும் வண்ணங்களிலும் வடிவமைக்கலாம் என்கின்றனர் கட்டுநர்கள்.