புறநகர் பகுதிகளிலும் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனிவீட்டு மனைகளுக்கான மவுசு மீண்டும் திரும்பியுள்ளது. பொதுவாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் மந்தமாகக் காணப்படும் சூழலில் வீடு கட்டும் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிலங்களின் ஒருபகுதியைத் தனி வீட்டு மனைகளாக உருவாக்கி விற்கத் தொடங்கியுள்ளன.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புறநகரிலும் இன்னும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கலாச்சாரம் பரவாத நிலையில் வீட்டுமனைகள் உருவாக்கம் ரியல் எஸ்டேட் தொழிலுக்குப் புத்துயிர்ப்பைத் தந்துள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மத்தியில் ஒரு நல்ல முதலீடாகத் தனி வீடுகளைக் கட்டும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. நகரத்திற்கு வெளியே கட்டப்படும் வானுயர் அடுக்குமனைக் குடியிருப்புகளில் வாங்கப்படும் வீடுகள், மதிப்பு மிகுந்த முதலீடாக மாறுவதற்குக் கிட்டத்தட்ட ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகிறது. இச்சூழலில் வட்டிக்குச் செலுத்தும் பணமும் கட்டுப்படியாகாமல் போவதால், தனிவீட்டு மனைகளை விற்பதைப் பாதுகாப்பாக வீட்டுமனை நிறுவனங்கள் நினைக்கின்றன.
நகர்புற நில உச்சவரம்புச் சட்டம் 1970-களின் மத்தியில் நடைமுறைக்கு வந்தபோது, நிலங்களின் விலை உயரத் தொடங்கியதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளை மக்கள் நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான தேவையை அதிகரித்தது. “உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான மவுசு குறையத் தொடங்கியது. நிறைய பரப்பளவில் நிலங்களை வைத்திருந்த கட்டுமான நிறுவனங்கள், வீட்டு மனைகளாக அவற்றை மாற்றத் தொடங்கினார்கள்” என்கிறார் நவீன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான குமார்.
பழைய மாமல்லபுரம் சாலை, ஜிஎஸ்டி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை போன்ற பிரபலமான பகுதிகளில், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் வகையில் ஆயிரத்து 200 சதுர அடி பரப்பு கொண்ட வீட்டுமனை 5 லட்சம் ரூபாயில் தொடங்கி விற்கப்பட்டது. பெருங்குடி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லியில் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு மனைகளை வாங்கியவர்களுக்கு இன்று அது பிரமாதமான முதலீடாக மாறியுள்ளது.
“சரியான விலையில் நிலத்தை வாங்கினால், அடமானப் பத்திரச் செலவு கிடையாது. இன்சூரன்ஸ் செலவும் மிகவும் குறைவு. சொத்து வரியும் மிக மிகக் குறைவு” என்கிறார் குஷ்மன் அண்ட் வேக்பீல்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரான விஎஸ் தர்.
வீட்டுமனைகளை விற்பதில் சமீபகாலம் வரை ஒருங்கிணைக்கப்படாத தனிநபர்களே அதிகம் இருந்து வந்தனர். ஆனால் சமீப ஆண்டுகளில், நிலம் வாங்குபவரின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பெயர் பெற்ற நிறுவனங்கள் வீட்டுமனை வர்த்தகத்தில் இறங்கியுள்ளன. “வீட்டுமனை வாங்குபவர்களைப் பொருத்தவரை சுயேச்சையாக வாழ்வதற்கான பலன்கள் தனிவீட்டில் உண்டு. செய்த முதலீட்டுக்குக் கூடுதல் பலன் மற்றும் வசதிகள் இருக்கின்றன. வில்லங்கம் இல்லாமல் இருப்பது அவசியம் என்று கருதுகிறார்கள்” என்கிறார் நைட் ப்ராங் இந்தியாவின் இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன்.
சாலை வசதி, பேருந்து மற்றும் பிற போக்குவரத்து வசதிகள், தண்ணீர, மின்சார வசதி, தெருவிளக்குகள், பாதசாரிகளுக்கான பாதைகள், பொருள்கள் வாங்க அருகே கடைவசதிகள் போன்றவை வீட்டுமனை வாங்குபவர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளாக உள்ளன.
ஆனால் புறநகர் வீட்டுமனைகளைப் பொருத்தவரை உடனடியாக, எந்த மதிப்புயர்வையும் வாங்குபவர் எதிர்பார்க்கக் கூடாது. அவர் தனது சொத்தின் மதிப்பு உயரும் வரை காத்திருக்க வேண்டும். வீட்டுமனைகளைப் பொருத்தவரை வாங்குவதற்கு வங்கிக் கடன்களும் கிடைக்காது. ஆனால் குடியிருப்பு வீடுகளை வாங்கும்போது, அது காலப்போக்கில் தேய்மானம் மற்றும் பழைமை காரணமாக அதன் மதிப்பு குறையும்.
“புறநகர்களைப் பொருத்தவரை தற்போது வீட்டு மனைகள் வாங்கவே அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் சாலை மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டுமான வேலைகள் வேகமாகத் தொடங்கியிருக்கின்றன. அதனால் வீட்டு மனைகளில் செய்யும் முதலீட்டுக்கு நல்ல பலன் இருக்கவே செய்யும்” என்கிறார் சுரேந்திர ஹிராநந்தினி.