வீட்டில் உங்களுடைய ரசனையை முற்றிலும் பிரதிபலிக்கும்படி ஓர் அறை இருக்க வேண்டுமென்றால், அது நிச்சயமாகப் படுக்கையறையாகத்தான் இருக்க வேண்டும். படுக்கையறை உங்களுக்கான தனிப்பட்ட ஒரு சரணாலயம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், ஓய்வெடுக்க, புத்துணர்ச்சி பெற, சிந்திக்க என வீட்டில் பெரும்பாலான நேரத்தைப் படுக்கையறையில்தான் நாம் செலவிடுகிறோம். அதனால்தான், படுக்கையறையை அலங்கரிக்கப் பலரும் பெரிதும் மெனக்கெடுகிறார்கள். படுக்கையறை அலங்கரிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களாக இவற்றைப் பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த ‘ஏபிசி டிஃபைன்ஸ்’ (ABC Defines) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பாலச்சந்தர்.
படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வண்ணங்கள் பிரகாசமானதானதாக இருக்க வேண்டும். இந்த அறைக்கான விளக்குகளை மஞ்சள், வெள்ளை என இரண்டுவிதமாக அமைக்க வேண்டும். இதை ‘மூட் லைட்டிங்’ (mood lighting) என்று சொல்வார்கள்.
படுக்கையறைச் சுவரில் மாட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஃபிரேம்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒளிப்படங்கள், ஓவியங்கள் என எதுவாக இருந்தாலும் அவை அறையின் ஒட்டுமொத்த அலங்காரத்தோடு ஒத்துப்போகும்படி தேர்ந்தெடுக்க வேண்டும். அதேமாதிரி, அதிகமான பிரேம்களை மாட்டுவதைத் தவிர்க்கலாம். படுக்கையறையின் பிரதான சுவரில் பெரிய ஃபிரேமில் உங்கள் ரசனைக்கேற்ற கலைப் படைப்பைப் பொருத்தலாம்.
இப்போது புதுமையான கருப்பொருள்களில் படுக்கையறைகள் வடிவமைக்கப்படுகின்றன. பலரும் அவர்களுக்குப் பிடித்த படத்தில் வரும் படுக்கையறைகளை மாதிரியாகக் காட்டி தங்கள் படுக்கையறையை வடிவமைக்கச் சொல்கிறார்கள். ‘கார்ஸ்’ திரைப்படத்தில் வரும் கார்களைப் போல ஆண் குழந்தைகளின் படுக்கை வடிவமைக்கப்படுகிறது. ‘லிட்டில் மெர்மெயிட்’ போன்ற கருப்பொருளில் பெண் குழந்தைகளின் அறையை அலங்கரிப்பது இப்போது அதிகரித்திருக்கிறது.
படுக்கையறைக்கு இளஞ்சிவப்பு, நீலம், மென் ஆரஞ்சு, வெள்ளை போன்ற வண்ணங்களை அதிகமாக மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அத்துடன் ஸ்டென்சில் பெயிண்ட்டிங்கையும் (Stencil Painting) இப்போது படுக்கையறைக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். படுக்கையறையின் பிரதான சுவரில் இந்த ‘ஸ்டென்சில் பெயிண்ட்டிங்’ செய்துவிட்டு மற்ற சுவர்களை அப்படியே சாதாரணமாக விட்டுவிடுகின்றனர்.
சமகால படுக்கையறை அலங்காரம்
சுவரொட்டிகளைப் பராமரிப்பதில் இருக்கும் சிரமத்தால் சிலர் படுக்கையறைக்கு இவற்றைத் தவிர்த்துவிடுகின்றனர்.
படுக்கையறைக்கான திரைச்சீலைகள் எப்போதும் அடர்ந்த நிறங்களில் இருப்பது நல்லது. இது அறைக்குள் வெளிச்சத்தைக் கடத்தாமல் இருக்க உதவும்.
படுக்கையறையில் அதிகமான அறைக்கலன்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொருட்களைச் சேமித்து வைக்கும் வசதிகளுடன் இருக்கும் படுக்கைகளைப் பயன்படுத்துவது இப்போது பெருகியிருக்கிறது. இதனால், அலமாரிகளின் பயன்பாடும் குறையும்.
படுக்கையறை சிறியதாக இருந்தால் நாற்காலி, மேசைகளுக்குப் பதிலாக ‘பீன் பேக்’களை அமர்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
படுக்கையறையில் பெரிய கண்ணாடிகளைப் பொருத்துவதும் இப்போது டிரண்டாக மாறிக்கொண்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான படுக்கையறை அலங்காரம்
படுக்கையறைக்கு மேசை விளக்குகள் மட்டுமல்லாமல் ‘நறுமணம் வீசும் மெழுவர்த்திகள்’, நவீன வடிவமைப்புகளில் கிடைக்கும் விளக்குகளை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணத்துக்கு, படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்தும் விளக்கு மாதிரிகளைப் படுக்கையறை அலங்காரத்துக்கு விரும்பி வாங்குகின்றனர்.
- ஆதித்யா பாலச்சந்தர்