சொந்த வீடு

புத்தாண்டின் புதிய வண்ணங்கள்

கனி

நமக்குத் தெரிந்து வண்ணங்கள் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை உள்ளிட்ட ஏழு வண்ணங்கள்தாம். ஆனால், இன்றைக்கு இந்த அடிப்படை வண்ணங்களில் இருந்து பலநூறு வண்ணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. மேலும் ஒவ்வோர் ஆண்டுக்கும் சில புதிய வண்ணங்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. இந்த ஆண்டில் அசத்தவிருக்கும் வண்ணங்களையும் பிரபலமான ‘பெயிண்ட்’ நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வீட்டின் வண்ணத்தைப் புதிதாக மாற்ற நினைப்பவர்கள், புதிய வீட்டுக்குக் குடிபெயரவிருப்பவர்கள் இந்த வண்ணங்களைப் பரிசீலக்கலாம். இந்த ஆண்டின் வண்ணங்கள்.

புத்துணர்ச்சி தரும் பச்சை

வண்ணங்களை நிர்வகிக்கும் பிரபல நிறுவனமான ‘பேன்டோன்’ இந்த ஆண்டின் வண்ணமாகப் ‘பச்சை’யை அறிவித்திருக்கிறது. ஒரு கொந்தளிப்பான சமூக, அரசியல் சூழலில் நம்பிக்கையை அளிப்பதற்காக இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் லிட்ரைஸ் ஈஸ்மேன். அத்துடன், புத்துணர்ச்சி, புத்துயிர் போன்ற அம்சங்களைப் பச்சை நிறம் பிரதிபலிப்பதாலும், இயற்கையோடு இணைந்து வாழும் நோக்கத்தை வலியுறுத்தியும் இந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்நிறுவனம்.

பேன்டோன் நிறுவனத்தைப் போலவே பெஞ்சமின் மோர், பிபிஜி பெயிண்ட்ஸ், கிலிட்டென், ஒலிம்பிக், கெல்லி-மோர், ஷெர்வின் வில்லியம்ஸ், டுன்-எட்வார்ட்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் 2017-ம் ஆண்டின் வண்ணங்களை அறிவித்திருக்கின்றன.

‘ஷேடோ’(Shadow)

பெஞ்சமின் மோர் நிறுவனம் இந்த ஆண்டின் நிறமாக ‘ஷேடோ’வைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆழமான அடர் செவ்வூதா-சாம்பல் நிறத்தின் கலவையாக இது இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு, எளிமையான வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்திருந்தது. ஆனால், இந்த நிறத்தைப் பயன்படுத்தும்போது சற்று எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும். ஏனென்றால், அதிகமாகப் பயன்படுத்தும்போது இந்த நிறம் இடத்தைச் சோகமாக மாற்றும் தன்மை கொண்டது. அதனால், சரியான அளவில் சரியான இடத்தில் பயன்படுத்துவது முக்கியம். படிக்கட்டுகளின் சுவர்களுக்கு இந்த வண்ணம் ஏற்றதாக இருக்கும்.

ஊதாவின் அமைதி

‘பிபிஜி பெயிண்ட்ஸ்’ நிறுவனத்தின் இந்த ஆண்டு தேர்வு ‘வயலெட் வெர்பேனா’ (Violet Verbena). மென்மையான வண் ணத்தை விரும்புபவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். அமைதியை வலியுறுத்தும் இந்நிறத்தைப் படுக்கையறைக்குப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

நடுநிலையான நீலம்

‘பைசான்டைன் ப்ளு’ (Byzantine Blue) என்ற நிறத்தைத் தேர்வுசெய்திருக்கிறது கிலிட்டென் நிறுவனம். இதுவும் ஒருவித செவ்வூதா-சாம்பல் நிறக் கலவைதான். ஆனால், இதில் நீல நிறம் சற்று அதிகமாக ஆதிக்கம்செலுத்துகிறது. அத்துடன், சாம்பல் நிறம் இந்நிறத்தின் நடுநிலைத் தன்மையை அதிகரித்திருக்கிறது. இதனால் இந்த நிறத்தை மற்ற வண்ணங்களுடன் இணைத்து வடிவமைக்க எளிமையாக இருக்கும்.

கிளவுட்பெர்ரி (Cloudberry)

‘ஒலிம்பிக்’ பெயிண்ட் நிறுவனம் இந்த முறை மென்மையான ‘கிளவுட்பெர்ரி’ நிறத்தைத் தேர்வுசெய்திருக்கிறது. படுக்கையறைக்கும், குழந்தைகள் அறைக்கும் இந்த வண்ணத்தை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் தேர்வுசெய்யலாம்.

‘கெட்டில்மேன்’ (Kettleman)

இந்த வண்ணம் ‘கெல்லி-மோர்’ நிறுவனத்தின் தேர்வு. இதுவும் அடர் சாம்பல் நிறத்தின் கலவைதான். அதனால் ‘ஷேடோ’ நிறத்தைப் போல இதையும் கவனமாகக் கையாள வேண்டும். ஏதாவது ஒரு மென்மையான வண்ணத்துடன் இணைத்து இதைப் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும். இதுதவிர, டுன்-எட்வர்ட்ஸ் நிறுவனம் ‘ஹனி-குளோ’ (Honey Glow) வண்ணத்தையும், ஷெர்வின் வில்லியம்ஸ் ‘பாய்ஸ்ட் டவுப்’ (Taupe) வண்ணத்தையும் இந்த ஆண்டின் வண்ணங்களாக அறிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT