சொந்த வீடு

மாடித் தோட்டம்: சில யோசனைகள்

எம்.விக்னேஷ்

சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் 36 வயதினிலே. இந்தப் படம் பார்த்த பலருக்கும் மாடித் தோட்டம் வைக்க ஆசை வந்திருக்கும். ஆனால் நாங்கள் பத்து வருடங்களுக்கு முன்னால் வீடு கட்டிய போதே, மாடித் தோட்டம் வைக்கத் திட்டமிட் டோம்.

இது குறித்து கட்டுமானப் பணியாளரிடம் கேட்டபோது சில யோசனைகள் கூறினார். அதை இங்கே பகிர்ந்துகொள்வது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மொட்டை மாடித் தளம் போடும்போதே, ஒரு அடி நீளமும், ஒன்றரை அடி உயரத்திலும் பத்தி போல் கட்டினோம். அதனுள் நீர் உறிஞ்சாதவாறு, வாட்டர் ப்ரூப் சிமெண்ட் கலவை கொண்டு பூசிவிட்டோம். இவ்வாறு அமைக்கப்பட்ட தொட்டியின் ஓரத்தில், தண்ணீர் போக ஒரு துவாரமும் அமைத்து விட்டோம். இப்போது தொட்டி செடி நடத் தயார்.

தொட்டி முழுவதும் ஒரே மண்ணால் நிரப்பாமல், முக்கால் தொட்டியில் ஒரு பகுதியில் ஆற்று மண், ஒரு பகுதி செம்மண், ஒரு பகுதி தொழு உரமும் அடித்தோம்.

இவற்றை நன்றாகக் கிளறி ஆறிய பின்னே செடி வைக்க ஆரம்பித்தோம். தேவைப்பட்டால் மேலாக ஒரு அங்குல உயரத்திற்குத் தேங்காய் நார் (coir waste) போடலாம். இது ஈரத்தைப் பாதுக்காக்க உதவும். முதலில் கத்தரி, வெண்டை செடி பயிரிட்டோம். இப்போது முல்லை, பிச்சி, செம்பருத்தி, அரளி போன்ற செடிகள் வைத்துள்ளோம்.

இந்த ஏற்பாட்டால் வீட்டுக்குள் ஈரம் படியும் ஆபத்து இல்லை. இது போன்ற மாடித் தொட்டிகளை மேற்கு திசையில் வைத்தோமேயானால், சரியான அளவு சூரிய வெளிச்சம் கிடைக்கும் இதைத் தவிர, எடை அதிகம் இல்லாத சிறிய தொட்டிகளில் புதினா, மல்லி, துளசி போன்ற மூலிகை செடிகளையும் வளர்க்கிறோம்.

SCROLL FOR NEXT