சொந்த வீடு

குழந்தைகளுக்கான துறுதுறு அலமாரிகள்

கனி

குழந்தைகள் அறையில் இருக்கும் பொம்மைகளையும் பொருட்களையும் புத்தகங்களையும் அடுக்கிவைப்பது ஒரு பெரிய வேலை. ஆனால், பெற்றோர்களுக்கு அது எப்போதும் சுவாரஸ்யமான வேலைதான். இப்போது குழந்தைகளின் பொருட்களை வழக்கமான அலமாரிகளில் அடுக்கிவைப்பதைப் பெரும்பாலான பெற்றோரும் குழந்தைகளும் விரும்புவதில்லை. அதனால், குழந்தைகள் விரும்பக்கூடிய புதுமையான வடிவமைப்புகளில் அலமாரிகள் சந்தையில் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. இந்த அலமாரிகளின் சில மாதிரிகள்..

புத்தகப்புழு அலமாரி

உங்களுடைய குழந்தைப் புத்தகப் பிரியராக இருந்தால் இந்தப் புத்தகப்புழு அலமாரி அவர்களுக்கேற்றதாக இருக்கும். புத்தகங்கள், பொம்மைகள், சிடிக்கள் போன்றவற்றைக் கலந்து இந்த அலமாரியில் அடுக்கலாம். இந்த அலமாரியைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் அறையில் குறைவான அறைக்கலன்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் வெளிச்சமும் அதிகமாக இருக்க வேண்டும்.

மிதக்கும் மேகங்கள்

மிதக்கும் அலமாரிகள் பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்று. அதனால், மேகங்கள், நட்சத்திரங்கள், கப்பல், மீன்கள் போன்ற வடிவமைப்புகளில் குழந்தைகளின் அறையில் மிதக்கும் அலமாரிகளை வடிவமைக்கலாம்.

வட்ட அலமாரிகள்

குழந்தைகளின் பொம்மைகளை அடுக்குவதற்கு ஏற்றவை இந்த வட்ட அலமாரிகள். இந்த வட்ட அலமாரிகளை ஒவ்வொரு வண்ணத்தில் வடிவமைக்கலாம். குழந்தைகள் அறையை வண்ணமயமாக எளிதில் மாற்றிவிடுபவை இந்த வட்ட அலமாரிகள்.

தேவதைக் கதை அலமாரி

உங்கள் குழந்தைக்குத் தேவதைக் கதைகள் பிடிக்கும் என்றால் அந்தக் கதைகளில் வரும் மாளிகையை மாதிரியாக வைத்து அலமாரியை வடிவமைக்கலாம். அலமாரியில் மேல்பகுதியில் வண்ணமயமான பேனல்களை வைத்தே அதை மாளிகை அலமாரியாக மாற்றிவிடலாம். இந்த அலமாரிகளில் ஆங்காங்கே தேவதைக் கதை கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டிவிடலாம்.

கப்பல்களும் கார்களும்

உங்களுடைய குழந்தைக்கு எந்த விஷயம் அதிகமாகப் பிடிக்கிறதோ அதையே பிரதானமாக வைத்துக்கூட அவர்களுடைய அலமாரியை வடிவமைக்கலாம். உதாரணமாக, உங்கள் குழந்தைக்குக் கப்பல் மிகவும் என்றால் கப்பலையே அலமாரியாக வடிவமைக்கலாம். அதேமாதிரி கார், விமானம் போன்ற மாதிரிகளை வைத்தும் குழந்தைகள் அறையில் அலமாரியை வடிவமைக்கலாம்.

SCROLL FOR NEXT