சொந்த வீடு

இயற்கையுடன் கதை பேசும் கட்டிடங்கள்: லாரி பேக்கர் பிறந்த நாள்: மார்ச் 2

ரோஹின்

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நிபுணரின் பெயர் அத்துறையிடமிருந்து பிரிக்க முடியாததாக இருக்கும். அப்படிக் கட்டுமானத் துறையில் தன் பெயரை அழுத்தமாகப் பதித்துவைத்திருப்பவர் கட்டிடக் கலை நிபுணர் லாரி பேக்கர். 1917-ம் ஆண்டு மார்ச் 2 அன்று இங்கிலாந்தின் பெர்மிங்காமில் பிறந்தவர் லாரி பேக்கர். பிறந்தது இங்கிலாந்தாக இருந்தாலும் அவரை இந்திய மண் ஈர்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

28-வது வயதில் இந்தியாவுக்கு வந்த லாரி பேக்கர் அதன் பின்னர் இந்தியாவிலேயே வசிக்கத் தொடங்கிவிட்டார். காந்தியக் கொள்கைகளின் மீது அவருக்குப் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாகவே தனது கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் காந்தியக் கொள்கைகளின் வழியில் அமைத்துக்கொண்டார். லாரி பேக்கர் என்ற பெயரை அறியாமல் ஒருவர் கட்டுமானத் துறையில் பணியாற்றுவது அரிது. அந்த அளவுக்கு அந்தத் துறையில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.

கட்டிடடக் கலையைப் பொறுத்தவரை, அதிக செலவு பிடிக்காத கட்டுமானங்களுக்கே முன்னுரிமை கொடுத்துவந்தார். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டே கட்டுமானங்களை உருவாக்குவது இவரது தனிச் சிறப்பு. இவரது கட்டுமானப் பாணிக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதில்லை. அத்தகைய கட்டுமானங்களை உருவாக்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். வாழுமிடமானது இயற்கையுடன் ஒன்றிணைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடனிருந்தார்.

இரண்டாம் உலகப் போரில் மருத்துவ சேவையாற்றிய அனுபவம் லாரி பேக்கருக்கு உண்டு. இந்தியாவில் தொழுநோய் சிகிச்சை மையங்களுக்கான கட்டிடங்களை உருவாக்கும் பணிக்காகவே அவர் ஒரு குழுவினருடன் வந்திருந்தார். தொடக்கத்தில் உத்ரப்பிரதேசத்தில் வசித்த பேக்கர் உத்தராகாண்ட் மாநிலத்தில் 16 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பின்னர் கேரள மாநிலத்துக்கு 1963-ல் இடம் பெயர்ந்தார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் குடியேறினார். அதிலிருந்து தன் வாழ்நாளின் இறுதிவரை, 2007 ஏப்ரல் 1 வரை அங்கேயே வாழ்ந்துவந்தார்.

லாரி பேக்கரின் வாழ்வு பற்றிய செய்தியை அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்வது அவசியம் என்ற நோக்கத்தில் எழுத்தில் இருக்கும் லாரி பேக்கர் பற்றிய செய்திகளை ஆவணப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் வினீத் ராதாகிருஷ்ணன். இவர் வேறு யாருமல்ல; லாரி பேக்கரின் பேரன். ஆவணப்பட இயக்குநரான இவர் தன் தாத்தா லாரி பேக்கரின் வாழ்வையும் கட்டிடக் கலையையும் விளக்கும் வகையில் ஓர் ஆவணப்படத்தை (Uncommon Sense: The Life and Architecture of Laurie Baker) உருவாக்கியிருக்கிறார். தான் உருவாக்கிய இந்த ஆவணப்படத்தை டெல்லியில் திரையிட்டிருக்கிறார்.

பசுமை வீடுகளின் அவசியத்தைப் புரியவைத்தவர் லாரி பேக்கர். வீடு என்பது நமக்குப் பாதுகாப்பு தரும் அதே வேளையில் அது இயற்கையுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதிலும் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. சுமார் 1,500 கட்டுமானங்களை லாரி பேக்கர் உருவாக்கியிருக்கிறார். எளிய மக்கள் வாழும் வீடுகளை உருவாக்குபவர் என்றதொரு பிம்பம் இவருக்கு இருக்கிறது. லாரி பேக்கரைப் பொறுத்தவரை எளிய வகையில் வீடுகளையும் கட்டுமானங்களையும் உருவாக்கினார். எளிய வகையில் என்றால் அதிக செலவு பிடிக்காத, அதிக ஆற்றலை வீணாக்காத கட்டுமானங்களையே அவர் முன்னெடுத்துச் செய்தார்.

அதுதான் லாரி பேக்கரின் சிறப்பு. கட்டுமானம் எந்த இடத்தில் அமைக்கப்படுகிறதோ அந்த இடத்தின் தட்பவெப்பச் சூழலுக்கு எந்தக் கட்டுமானப் பொருள்கள் பொருந்துமோ அவற்றைப் பயன்படுத்தி மட்டுமே கட்டுமானங்களை உருவாக்கினார். போதிய வெளிச்சமும் தேவையான காற்றும் வலம்வரும் அழகு ததும்பும் கட்டிடங்களை அவர் கட்டியெழுப்பியுள்ளார். அவை எல்லாமே மவுனமாக லாரி பேக்கரின் புகழ் பாடும் என்ற சூழலில் அவரது புகழை பாடும் மற்றொரு படைப்பாக வெளிவந்துள்ளது இந்த ஆவணப்படம்.

லாரி பேக்கர்

SCROLL FOR NEXT