சொந்த வீடு

குப்பையைப் பணமாக மாற்றலாம்

ம.சுசித்ரா

குப்பை சேர்க்காதே! தூக்கிப் போட்டுவிடு! என்று நாம் சொல்கிறோம். ஆனால் எங்கே தூரப் போடுவது? இந்தக் கேள்வியிலிருந்துதான் பிறந்தது பேப்பர் மான் அமைப்பு. மாத்யு ஜோஸ் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பேப்பர் மான் அமைப்பைச் சென்னையில் கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வருகிறார்.

சென்னை போன்ற பெருநகர வாசிகளின் வருமானம் ஒரு புறம் அதிகரித்து வருகிறது. இதனால் முன்பைக் காட்டிலும் தேவைக்கு அதிகமாகப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரமும் வந்துவிட்டது. பொருள்கள் அதிகமாக, அதிகமாகக் குப்பை அதிகமாகிவிட்டன.

குப்பை எனச் சாதாரணமாகச் சொல்ல முடியாத அளவுக்குக் குப்பையும் ஒவ்வொரு நகரத்திலும் இமயம் போல் எழுந்து நிற்கிறது. இந்தக் குப்பையை எப்படி அப்புறப்படுத்துவது என்பது மிகச் சவாலான கேள்வி.

குப்பையைச் சுற்றுச்சூழலை பாதிக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் எனக் கால் நூற்றாண்டாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் விழிப்புணர்வோடு ஆக்கபூர்வமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கை சொற்பமே.

இதற்கு இணையான மாற்று வழியை தேடத் தொடங்கினார் மாத்யு ஜோஸ். குப்பையை அப்புறப்படுத்த வேண்டும். அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபடக் கூடாது. இதற்கு உடனடித் தீர்வு வீட்டுக் குப்பையைப் பணமாக மாற்ற வழி வகுக்கும் ‘பேப்பர் மான்’ அமைப்பை 2010-ல் உருவாக்கினார். இதுவரை பள்ளிக் கூடங்கள், குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 1,000 பகுதிகளைத் தன் அமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளார்.

குப்பையில்லா ஊர்

குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெருவாரியான சென்னை வாசிகளிடம் காணப்படுகிறது என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜோஸ், “சில பகுதி வாசிகள் ‘குப்பை இல்லாமலாக்குவோம்’ என்ற கொள்கையுடனும் செயல்படுகிறார்கள். ஆனால் இது போதாது, இன்னும் பலர் தானாக முன்வந்து மாற்றத்திற்கு வித்திட வேண்டும்” என்கிறார்.

கிட்டத்தட்ட 150 காகிதக் குப்பைகள் வாங்கும் அங்காடிகளோடு இணைந்து பணி புரிகிறது ‘பேப்பர் மான்’. குப்பை மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பல தன்னார்வ நிறுவனங்களுக்கும் அளித்து உதவுகிறார்கள். உங்கள் வீட்டுக் குப்பைகளைப் பணமாக மாற்றும் அதே நேரத்தில் உங்கள் வீட்டையும், சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியுமென் றால் நல்ல விஷயம் தானே!

மறுசுழற்சிக்கான உதவி தொலைபேசி எண் : +91 8015269831

SCROLL FOR NEXT