தீபாவளி என்றாலே நமக்கு மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்களுக்கும் கொண்டாட்டமான காலகட்டம்தான். போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளையும் பரிசுகளையும் அளிப்பார்கள். இதன் மூலம் வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து இழுப்பார்கள். மற்ற காலகட்டங்களைவிடப் பெரும்பாலானவர்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கத் தீபாவளி வரை காத்திருப்பார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்ட கட்டுமான நிறுவனங்கள் தீபாவளியை ஒட்டிப் பல சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றன.
என்றாலும் இந்தத் தீபாவளி, ரியல் எஸ்டேட் துறைக்குக் கொண்டாட்டமாக இருக்குமா? எல்லா வர்த்தக நிறுவனங்களும் உற்சாகத்துடன் இயங்கும் இவ்வேளையில், ரியல் எஸ்டேட் துறை சற்று சோர்வடைந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் தொடர்பாக ஆய்வுசெய்துவரும் Liases Foras நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின் முடிவு இந்தச் சோர்வு நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சென்னை தவிர்த்து இந்தியாவின் பல நகரங்களிலும் ரியல் எஸ்டேட் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இந்தியா முழுவதும் சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறை தொய்வடைந்துள்ளது. இது குறித்துச் சமீபத்தில் வெளிவந்த பல அறிக்கைகளும் உறுதிப்படுத்தின. மனை வாங்குவதில் இருந்துவந்த கட்டுப்பாடுகள், சிமெண்ட் விலை உயர்வு, கட்டுமானப் பொருள்களின் நிலையில்லாத விலையேற்றம் போன்ற பல காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன.
Liases Foras அறிக்கையின்படி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7.6 லட்சம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. அடுக்குமாடி வீடு வாங்குவது தொடர்பாகப் ச்பொதுமக்களிடம் நிலவும் அச்சமும் இதன் பின்னணியிலுள்ள காரணங்களுள் ஒன்று. ஆனால் இந்த நிலை விரைவிலேயே மாறக் கூடும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து மக்களைக் கவர்வதற்காகப் பல சிறப்புத் திட்டங்களையும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருந்தும் வீடு விற்பனை குறிப்பிடும்படியாக இல்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த செம்படம்பரில் இந்தியாவின் 15 பெரு நகரங்களில் மொத்தம் வெறும் 27 புதிய கட்டுமானத் திட்டங்களே தொடங்கப்பட்டுள்ளதாகவும் சென்ற ஆண்டு 279 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. விற்கப்படாமல் உள்ள வீடுகள் இந்தத் தீபாவளி சீசனில் விற்றுவிடும் எனப் பல நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளைத் திருப்திபடுத்துவது போல் விற்பனை இல்லை. சென்ற ஆண்டு தீபாவளி சீசனில் விற்பனை மிக அதிக அளவில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.