வசிப்பதற்குச் சிறிய வீடே போதும் என்று முடிவெடுப்பவர்களுக்கு அதற்கான முக்கியக் காரணம் பெரிய அளவு வீடுகளைக் கட்டுவதற்கோ, வாடகை வீட்டில் இருந்தால் அதிக வாடகை கொடுப்பதற்கோ வசதியில்லை என்பதாகத்தான் இருக்கும். ஆனால் வசதி இருப்பவர்கள்கூட சிறிய வீடுகளில்தான் வசிக்க வேண்டும் என்பதற்காக ஓர் இயக்கமே தோன்றியிருக்கிறது. இதற்கு வித்திட்டவர் என்று சாரா சுசன்கா என்ற பெண்மணி. இதை அவர் தனது நூலான ‘The not so big house’ என்ற நூலில் வலியுறுத்தினார்.
இருக்க இடமின்றிப் பலரும் தவிக்கும்போது மாளிகை போன்ற வீடுகளில் வசிப்பது தவறு என்ற எண்ணம் பரவியதே இந்த இயக்கத்திற்குக் காரணம். 2007-08ல் அமெரிக்கா ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தபோது மேற்படி இயக்கம் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பலரும் சிறிய விடுகளின் பக்கம் பார்வையைத் திருப்பினர். இத்தகைய வீடுகள் அதிக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இது தொடங்கப்பட்டது அமெரிக்காவில் என்றாலும் வேறு பல நாடுகளிலும்கூட இதன் தாக்கம் பரவி வருகிறது. கனடாவில்கூட இந்த இயக்கம் கால்பதித்திருக்கிறது. 150 சதுர அடி பரப்பு கொண்ட வீடுகள் எல்லாம் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஜப்பானில் வீட்டு வாடகை மிக அதிகம். அதே சமயம் மிகச் சிறிய வீடுகள் என்பவை அவர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. ஒருவழியாக நான்குபேர், 500 சதுர அடி கொண்ட வீட்டில் தங்க முடியுமென்று அங்கு முடிவெடுத்தனர்.
ரியல் எஸ்டேட் துறையில் பல புதியவர்கள் இதனால் கால் பதிக்க, சீனியர்கள், ‘இந்தச் சிறிய வீடுகளின் பாதுகாப்பு கேள்விக்குரியது’ என்று கொளுத்திப் போட்டார்கள். 2015-ல் ‘லாப நோக்கற்ற அமெரிக்க சிறிய வீடுகள் கூட்டமைப்பு’ என்ற ஒன்று உருவானது.
சிறிய வீடுகள் என்றாலும் அதற்குரிய நிலம் கிடைக்க வேண்டுமே; அதுதான் முக்கியப் பிரச்சினையானது. தவிர ஒரு பெரும் வீட்டு வளாகம் என்றால் நீச்சல் குளம், ஜிம், சிறு தியேட்டர் போன்ற பல கேளிக்கை விஷயங்களும் இடம்பெறுகின்றன. ஆனால் மிகச் சிறிய வீடுகள் எனும்போது அவற்றில் இந்த அதிகப்படி வசதிகள் எதுவும் இருக்காது. எனவே கேளிக்கைக் தொழிலைச் சேர்ந்த பலரும் சிறிய வீடுகளின் கட்டுமானத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பு தெரிவித்தனர்.
லண்டன் மற்றும் முனிச் நகரைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் குழு ‘மைக்ரோ காம்பேக்ட் வீடு’ என்ற ஒன்றை உருவாக்கியது. கொஞ்ச காலத்துக்குத் தேவைப்படும் வீடு என்றால் இவை மிகவும் ஏற்றவை என்று கருதப்பட்டது. மாணவர்கள், சில நாட்களுக்கு ஓரிடத்தில் தங்கி ப்ராஜெக்ட் ஒன்றை முடிக்கும் ஊழியர்கள், வார இறுதியில் மாறுபட்ட சூழலில் நேரத்தைக் கழிக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு இந்தச் சின்னஞ்சிறு வீடுகள் ஏற்றதாக இருந்தன. ஐரோப்பா முழுவதுமே ஆங்காங்கே இவை எழுப்பப்பட்டன. சிறிதாகவும், நவீனமானதாகவும் இவை காணப்பட்டன.
மேற்புறத்தில் இருவர் படுப்பதற்கான இடம். கீழ்ப்பகுதியில் நாலைந்து பேர் பணி செய்வதற்கும் உணவு சாப்பிடுவதற்குமான பெரிய மேஜை. நுழையும் பகுதி பல்வேறு பயன்களைக் கொண்டது. ஒருபுறம் கழிவறையாகவும், மறுபுறம் ஈரமான துணிகளை உலர்த்தும் பகுதியாகவும் அது இருந்தது. ஏரி அல்லது கடலுக்கு அருகே இவை எழுப்பப்பட்டபோது மேலும் அழகு சேர்த்தது.
சிறிய வீடுகளில் பல பயன்கள் உண்டு. குறைவான கட்டுமானச் செலவு என்பதுடன் வீட்டு வரியும் குறைவாக இருக்கும். ரிப்பேர் செலவு அதிகம் இருக்காது. சிறிய வீடுகளில் வசிப்பது தனிமையில் வாழும் முதியவர்களுக்கு மேலும் பாதுகாப்பானது. இவற்றால் இயற்கை வளங்கள் அதிகம் பாதிக்கப்படாது. இருக்கும் சிறிய இடத்தை எவ்வளவு வசதிகளுக்கு உட்படுத்த முடியும் என்று யோசிப்பதில் பல புதிய விவரங்கள் பிடிபட்டுள்ளன.
சிறிய வீடுகளில் என்னென்ன பிரச்சினைகள் என்றால் நீங்கள் ஒரு பட்டியலையே கொடுக்கலாம். ஆனால் அவற்றால் பல நன்மைகளும் உண்டு. குடும்பத்தினருடன் மேலும் நெருக்கமாக இருக்கலாம். வெவ்வேறு அறைகளில் இருந்து கொண்டு தனித்தனித் தொலைக்காட்சி செட்களைப் பார்த்துக்கொண்டு தனித்தீவு போல இருப்பது தவிர்க்கப்படுகிறது. மின் கட்டணம், வீட்டு வரி என்று பல விதங்களிலும் குறைவான சேவைக் கட்டணங்களே போதுமானது.
சிறிய வீடுகள் வாங்குவோருக்கு அதை அடமானம் வைக்க வேண்டிய தேவை பெரும்பாலும் இருக்காது. எனவே வட்டித் தொல்லையிலிருந்து தப்பலாம். வீட்டை சுத்தம் செய்வது போன்ற பல வேலைகள் குறைவான அளவில்தான் இருக்கும். சிறிய வீடுகள் வாங்குவதால் சேமிப்பு மொத்தமும் தீர்ந்து விடாது. எனவே பிறவற்றிற்குச் செலவழிக்கவும் பணம் இருக்கும். அளவு குறைவு என்பதால் ரிப்பேர் செலவுகளும் குறையும். எந்த விதக் கட்டுமானச் சட்ட மீறலையும் நீங்கள் செய்ய மாட்டீர்கள். அதே சமயம் மிகச் சிறிய வீடுகளில் சில பிரச்சினைகள் எழுவது இயற்கை. தனியறைகள் அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால் அந்தரங்கம் கொஞ்சம் பறிபோகும்.