சொந்த வீடு

வீட்டுச் சுவரை அலங்கரிக்கும் ஓவியங்கள்

செய்திப்பிரிவு

சுவர்களில் ஓவியங்கள் வரையும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. கற்கால மனிதன் பாறைகளில் தங்கள் வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் ஓவியமாகத் தீட்டியதை, இதன் தொடக்கமாகச் சொல்லலாம். ஐரோப்பிய நாடுகளில் தேவாலயங்களில் ஓவியங்கள் வரைவது வழக்கமாக இருந்தது. மேற்குலகில் மிகச் சிறந்த ஆளுமைகள் உருவாக இது காரணம் ஆனது. இந்தியாவிலும் பரவலாகக் கோயில்களில், அரண்மனைகளில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.


கலம்கரி ஓவியம்

ராமாயணக் காவியத்தில் ஜனக மன்னன் தன் மகளான சீதாவின் திருமணத்துக்காக மிதிலா நகர் முழுவதும் ஓவியங்கள் வரையச் சொன்னதாகத் தொன்மக் கதையுண்டு. இப்படித்தான் மிதிலா ஓவியக் கலை உருவானதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய பிஹார் மாநிலத்தில் மதுபனி என்னும் மாவட்டப் பகுதியில் தோன்றியதால் இந்த ஓவியக் கலைக்கு மதுபனி என்ற பெயரும் உண்டு. இந்த மதுபனி-நேபாள எல்லையில்தான் ராமாயண இதிகாசத்தில் வரும் மிதிலை நாடும் உள்ளது.


மந்தனா ஓவியம்

இதுபோல அரண்மனையில் வரையப்படும் ஓவியங்கள் அல்லாமல் பழங்குடிகள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஓவியங்கள் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது கோண்டு என அழைக்கப்படுகிறது. இவர்கள் வட இந்தியாவில் கிழக்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்ந்துவருகிறார்கள். கோண்டு இனத்தவர் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட பழங்குடிகள் ஆவர். கோண்டு பழங்குடியினர் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்கின்போதும் திருமணம் போன்ற நிகழ்வின்போதும் வீட்டுச் சுவர்களை ஓவியங்களால் அலங்கரிக்கிறார்கள்.


பட்டச்சித்ரா ஓவியம்

ஓவியத்துக்கான வண்ணங்களை கரி, மண், தாவரங்கள், மாட்டுச் சாணம் போன்றவற்றிலிருந்து எடுக்கிறார்கள். ஓவியங்கள், தெய்வ, இயற்கை வழிபாட்டுக்காக வரையப்படுபவை எனச் சொல்லப்படுகிறது. தீய சக்திகளிடமிருந்து ஓவியங்கள் தங்களைக் காக்கும் என்னும் நம்பிகையும் இவர்களுக்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.


பாஹரி ஓவியம்

வீட்டுச் சுவர்களில் வண்ணம் அடிப்பதற்குப் பதிலாக ஓவியங்கள் வரைவது வழக்கம் பரவலாக வருகிறது. முக்கியமாக வார்லி ஓவியங்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கலம்கரி, பட்டச்சித்ரா, செரியல் ஆகிய ஓவியங்கள் பெரும்பாலும் துணிகளில்தான் வரையப்படுகின்றன. அவற்றை சட்டகமாக்கி வீட்டுச் சுவர்களை அழகுபடுத்தலாம்.


வார்லி ஓவியம்

இவை அல்லாமல் கலம்கரி, பட்டச்சித்ரா, வார்லி, பாஹரி, செரியல், கேரள சுவர் ஓவியம் உள்ளிட்ட பல வகை மரபு ஓவியங்கள் இன்று புதுப்பொலிவு பெற்று வீட்டை அலங்கரித்துவருகிறது. அவற்றைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது.

SCROLL FOR NEXT