பழைய காலங்களில் வீட்டின் உட்கூரையாக உத்திரம் என்னும் மரப்பலகைகள் திகழ்ந்தன. கால ஓட்டத்தில் அவற்றின் இடத்தை கான்கிரீட் பிடித்தது. இன்றைய நவநாகரிக உலகில் காண்போரின் கவனத்தைச் சுண்டி இழுக்கும் வண்ணம் வீட்டை வடிவமைப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். வீடு வாங்கும்போதே வீட்டின் உள் அலங்காரத்துக்கு (Interior Design) என்று ஒரு தொகையை ஒதுக்கி வைத்துக்கொள்கின்றனர். தரைகள், சுவர்கள் மற்றும் அறைக்கலன்கள் ஆகியவற்றுக்குச் செலுத்தும் அதே அளவு அக்கறையை உட்கூரையிலும் செலுத்துகின்றனர். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இவ்வகை உட்கூரை அமைக்கின்றனர். பெரிய பெரிய ஷோரூம்கள் மற்றும் மால்களில் மட்டுமே காணப்பட்ட அழகிய உட்கூரைகள் இப்போது வீடுகளையும் அழகாக்குகின்றன.
ஃபால்ஸ் சீலிங் என்னும் இவ்வகை உட்கூரையானது உத்திரத்துக்கு மேலேயே இரண்டாவது உட்கூரை போல அமைக்கப்படுவது ஆகும். பொதுவாக இந்த வகை உட்கூரை என்றதும் பழைய அலுவலகங்களில் காணப்படும் கட்டம்கட்டமான சலிப்பூட்டும் கூரையே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வரும். ஆனால் அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் வித விதமான, அழகிய, நூதன, கண்ணைக் கவரும் கூரைகள் பல சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் ரசனைக்கேற்ற வடிவில் தேர்வு செய்து வீட்டில் அமைக்கலாம். இவ்வகைக் கூரையில் பல ரகங்கள் உண்டு.
பிளாஸ்டர்ஆஃப் பாரிஸ் வகை உட்கூரை என்பது மிகப் பிரபலமானது. இதில் ஏற்கனவே உள்ள உட்கூரையில் சட்டமிட்டு, அதன் மீது இரும்பு வலை அமைக்கப்படுகிறது. பின்னர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு அலங்கரிப்படுகிறது. மேலும் அழகுபடுத்த பிளாஸ்டர்ஆஃப் பாரிஸ் மீது வால் பேப்பர் அல்லது பெயிண்ட் பூச்சு பயன் படுத்தப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நிலைகளாக அல்லது பல அடுக்குகளாக இவற்றைக் கொண்டு வடிவமைக்கலாம். இந்த அடுக்குகளில் மறைவாக விளக்குகள் அமைத்து அழகிய பரிமாணத்தை ஏற்படுத்தலாம்.
மரத்தாலான பலகைகளைக் கொண்டும் இவ்வகை உட்கூரைகள் அமைக்கப் படுகின்றன. விலை குறைந்த மரத்தடுகளின் மீது நல்ல தரமான மரத்தகடுகளைப் பதித்து, பின் அலங்கார விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
தெர்மோகோல் கொண்டு அமைக்கப்படும் இவ்வகைக் கூரை மிகவும் மலிவானது. அலுவலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது. அவற்றின் ஒரே பயன்பாடு அழகற்ற முறையில் தொங்கிக்கொண்டிருக்கும் வயர்களை மறைப்பது.
பிவிசியினால் தயாரிக்கப்படும் இவ்வகை உட்கூரைகள் மிகவும் மலிவானவை. பராமரிப்பதற்கு எளிதானவை. அரிக்கும் தன்மையுள்ள இடங்களில் பெரும்பாலும் இதனையே பயன்படுத்துவர்.
ஜிப்சம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இவ்வகை உட்கூரை அனைவராலும் விரும்பப்படுகிறது. நியாயமான விலை. ஒலி, ஈரப்பதத் தடுப்பானாகவும் செயல்படுகிறது. இதன் பிற சாதக அம்சங்கள்; சுலபத்தில் பொருத்தலாம், தீ எதிர்ப்பு, நீடித்து உழைக்கும் பல வடிவங்களில் கிடைக்கும்.
முன்பெல்லாம் இவ்வகை உட்கூரையானது ஜிப்சம் பலகைகளால் உருவாக்கப்பட்டது. காலம் மாற மாறப் புதுமையான நுட்பங்களும், நூதன வடிவமைப்பும் புகுத்தப்பட்டன. பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் ஆடம்பரத்துக்காகவும் அமைக்கப்படும் உட்கூரைகள் மரம், கண்ணாடி, ஃபைபர், பிளாஸ்டிக் போன்ற பல்வேறு விதமான பொருட்களால் அமைக்கப்பட்டன. அவற்றினுள்ளே மறைவாக தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் ஸ்பிரின்கிளர்கள் (sprinklers), ஒளி விளக்குகள் போன்றவை மறைவாகச் செயல்படுவதால் பெரிதும் விரும்பப்படுகின்றன. ஒன்றோ இரண்டோ ட்யூப் லைட்கள் மாட்டுவதை விட உயர்ந்த ரக LED விளக்குகள் பலவற்றை மறைவாகவோ வெளிப்படையாகவோ பொருத்தி பெரிதும் பயன் பெறலாம். சுற்றுச்சூழலுக்கும் உகந்தது, மின் சக்தியும் விரையமாகாது.
இவ்வகைக் கூரையானது வெப்பக் காப்பாகவும் செயல்படுகின்றது. உட்கூரை மற்றும் இவ்வகை உட்கூரையின் இடையில் உள்ள இடைவெளியில் உள்ள காற்று அறையைக் குளுமைப்படுத்துகின்றது. காற்று வெப்பத்தைத் தடுத்து அதிக ஏசி பயன்பாட்டைத் தவிர்க்கின்றது. இதன் சங்கிலித்தொடராக குறைவான மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை கூரை அமைப்பதால் அறையின் அளவு சிறியதாவதாலும் மின்சாரப் பயன்பாடு குறைகிறது. அதே போல் ஒலியையும் உறிஞ்சிக் கொள்வதால் மாசு கட்டுப்படுத்தப்பட்டு அமைதி நிலவ உதவுகின்றது. என்றாலும் சில சங்கடங்களும் உள்ளன. நுட்பமான வேலை என்பதால் திறன் மிக்கவர்களைக் கொண்டே அமைக்க வேண்டும். இல்லையெனில் கீழே விழ வாய்ப்புள்ளது. இவ்வகை உட்கூரையானது பொருத்தப்பட்ட பின் காய்வதற்கு நாட்கள் ஆகும். இவ்வகை உட்கூரை ஒரு அடி அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தை ஆக்ரமித்துக் கொள்வதால் அறையின் உயரத்தைக் குறைத்து விடும். உயர்ந்த உட்கூரை உள்ள வீடெனில் எந்தவிதச் சஞ்சலமும் இன்றி இவ்வகை உட்கூரையைப் பொருத்தலாம்.
இவ்வகைக் கூரை அமைத்த பின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கலாம். ஒளியை மட்டும் ஒளிரக்கூடிய மறைவான விளக்குகள் அல்லது நேரடியான அலங்கார விளக்குகள் கொண்டும் அலங்கரிக்கலாம். நடுவே ஒய்யாரமாகமாக தொங்கு சரவிளக்கு (chandelier) என்னும் விளக்கை கொண்டும் அலங்கரிக்கலாம். கிரிஸ்டல்களால் ஆன சர விளக்கு என்றால் கூடுதல் சிறப்பு.
பார்க்கும் அத்தனை பேரும் அதிசயிக்கும் விதத்தில் நம் வீடு திகழ வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அதனை இந்த இவ்வகை உட்கூரைகள் செவ்வனே பூர்த்தி செய்யும்.