சொந்த வீடு

அலங்காரமான வீட்டைக் கட்டுகிறீர்களா?

ரோஹின்

சொந்த வீடு என்பது சமூகத்தில் நமக்கொரு மரியாதையையும் அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது. கொளுத்தும் வெயிலிலும் கடும் மழையிலும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் வீடு அவசியம். இதற்காகவெல்லாம் தான் அரும்பாடுபட்டு ஒரு வீட்டைக் கட்ட பிரயாசைப்படுகிறோம். பிரயாசைப்பட்டுக் கட்டும் வீடு பாதுகாப்புக்கானது என்றபோதும், அது பாதுகாப்பு கொண்டதாக மட்டும் இருந்தால் போதும் என்றோ, அது வெறும் கட்டிடம் என்றோ நாம் நினைப்பதில்லை.

நமது ரசனைக்கேற்ப அது கட்டப்பட வேண்டும் என்பதிலும் நமது கவனம் நிலைத்திருக்கிறது. அதற்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கட்டுகிறோம். நாம் அறிந்த அனைத்து ரசனை முறைகளையும் கொண்டு நமக்கேற்ற வகையில் ஒரு வீட்டின் உள் அலங்காரங்களைச் செய்து மகிழ்கிறோம். சுவர்களையும் கதவுகளையும்கூட விடுவதில்லை. அதிலும் முகப்புக் கதவுக்கென்றே பல பிரத்யேக முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

கலை ரசனையுடன் வீட்டைக் கட்டுவதெல்லாம் சரிதான். ஆனால் அந்த ரசனையான அம்சங்கள் நமது பயன்பாட்டுக்குத் தேவைதானா என்பதையும் யோசித்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுவர்களிலும் வீட்டின் முகப்பிலும் பார்வையாகத் தெரியவேண்டும் என்பதற்காக அதிக அலங்காரம் செய்து கொள்ளலாம். ஆனால் அதை முறையாகப் பராமரிக்க முடியுமா என்பதையும் யோசித்து முடிவுசெய்ய வேண்டும். யாரோ ஒரு நண்பர் எப்போதோ வந்து, ‘வீடு சூப்பரா கட்டியிருக்கீங்களே?’ என்று சொல்லும் ஒரு வாக்கியத்துக்கு ஆசைப்பட்டு அதிக அலங்காரத்துக்கு ஆசைப்பட்டால் அதற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பல வீடுகள் கட்டிய புதிதில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும். ஆனால் நாள் செல்லச் செல்ல முறையான பராமரிப்பற்று பார்ப்பதற்கே பாவமாகத் தோன்றிவிடும். பெரிய அலங்காரங்களைக் கொண்டிராத தூணையோ சுவரையோ எளிதில் பராமரிக்க முடியும். அவற்றில் படிந்த தூசு துப்பட்டைகளை எளிதில் அகற்றிவிடலாம். அதே வேளையில் அதிகப்படியான அலங்காரங்களை மேற்கொண்டுவிட்டால் அதற்கு பிரத்யேக கவனிப்புத் தேவைப்படும். அந்தச் சுத்தப்படுத்துதலை எளிதில் நிறைவேற்ற முடியாது.

வெறும் சுவர் என்றால் வாய்ப்புக் கிடைக்கும்போது தண்ணீர் ஊற்றிக் கழுவினாலே போதும் சுத்தமாகிவிடும். ஆனால் அலங்கார வடிவங்களைக் கொண்ட சுவரையோ தூணையோ அத்தனை எளிதில் சுத்தப்படுத்த முடியுமா?

அதனால் வீட்டின் உள்புறச் சுவர்களிலும்கூடத் தேவையற்ற அலங்காரத்தைத் தவிர்த்துவிடுங்கள். அலங்கார வடிவங்களை அதிகப்படியாக உருவாக்கிவிட்டீர்கள் என்றால் அவை தூசுகளின் இருப்பிடமாகிவிடும். அந்த தூசுகளால் நமது ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஆகவே அழகுணர்வு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நமது ஆரோக்கியம். சுவர்களை மட்டுமல்ல; கதவுகளையும் நாம் எளிமையாக அமைப்பது நல்லது. அதிக வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள் அமைக்கும்போது அவற்றுக்கான விலையும் அதிகம். கதவு என்பதன் நோக்கம் பாதுகாப்பு மட்டுமே.

அதைவிடுத்து அவற்றில் அதிக அலங்காரம் வேண்டும் என ஆசைப்படுவதால் பொருளாதாரச் சுமை கூடிவிடும். கதவின் விலை மட்டும் அதிகமாகாது, பராமரிப்புச் செலவும் பழுத்துவிடும்; எந்த ரசனையும் இல்லாமல் வெறும் சுவர்களும் கதவுகளும் கொண்ட வீடுகள் எப்படி அழகாயிருக்கும் என்று தோன்றுகிறதா? அதுவும் சரிதான். ஆனால் நாம் வீடு கட்டுவது வாழ்வதற்கா பிறரிடம் தம்பட்டம் அடிப்பதற்கா என்பதை யோசித்துவிட்டு இதைப் போன்ற விஷயங்களில் ஈடுபடுங்கள்.

வீட்டின் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் நமது தேவைகளுக்காக நவீனமான அலமாரிகளை அமைப்பது இப்போது ஒரு பாணியாக பரவிவிட்டது. அதற்கெனவே பிரத்யேக நிறுவனங்கள் தோன்றிவிட்டன. விதவிதமான வடிவங்களில் அவற்றை அமைத்துத் தருகிறார்கள். சமையலறை, படுக்கையறை, வாசிப்பறை, வரவேற்பறை போன்ற ஒவ்வொரு அறையிலும் எத்தகைய அலமாரிகள் வேண்டுமோ அவற்றை அமைத்துத் தருகிறார்கள்.

இப்படி அலமாரிகளை அமைக்கும்போதும் அவசியமானவற்றை மட்டுமே அமைக்க வேண்டும். அலமாரிகளை அமைக்கும்போது அவசியமானவற்றை மட்டுமே அமையுங்கள். பல சந்தர்ப்பங்களில் அளவுக்கு அதிகமாக அலமாரிகளை அமைத்துவிட்டு, பின்னர் அவற்றில் வைக்க பொருள்கள் எதுவும் இல்லாமல் அதை அப்படியே தூசு படர விட்டுவிடும் விபத்து நேர்ந்துவிடும் ஜாக்கிரதை.

ஆக, வீடு கட்டும் விஷயத்தில் அலங்காரம் மட்டுமே பிரதானம் என்று செயல்படக் கூடாது. அப்படிச் செயல்பட்டால் வீட்டின் கட்டுமானச் செலவும் எகிறிவிடும். ஒவ்வொரு பைசை பைசாவாகக் கணக்குப் பார்த்து வீடு கட்டுவோர் தயவுசெய்து அலங்காரத்தின் மீது ஆசைகொண்டு அவதிப்பட்டுவிடக் கூடாது. தாராளமாகப் பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டுவோர் தாராளமாக எவ்வளவு அலங்காரம் வேண்டுமோ அவ்வளவு அலங்காரங்களை மேற்கொள்ளலாம். அதில் ஒன்றும் பிழையில்லை. ஆனால் பட்ஜெட்டுக்குள் வீட்டின் செலவை முடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அலங்காரங்கள் அநாவசியமானவையே.

ஆர்ப்பாட்டமான வீடோ எளிய வீடோ எதுவாயிருந்தாலும் அங்கே நிலவும் அமைதியே வீட்டை அற்புதமானதாக்கும். ஆரோக்கியமும், நிம்மதியும் இணைந்தால்தான் இது சாத்தியம். அப்படியொரு வீட்டைத் தான் நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT