வீட்டில் ஆடைகளை வைத்துப் பராமரிக்க அலமாரிகள் வைத்திருப்போம். ஆனால், எல்லாத் துணி மணிகளையும் அலமாரியில் வைத்திருக்க முடியாது. தினசரி பயன்படுத்தும் சட்டைகள், உள்ளாடைகள், கைக்குட்டைகள் போன்றவற்றை வெளியே வைத்துப் பயன்படுத்துவோம். அப்படியான துணிமணிகளைப் பெரும்பாலும் கிடைக்கும் இடத்தில், கட்டில் மீதே மேஜை மீதே போட்டுவைப்போம்.
இதனால் படுக்கையறை அலங்கோலமாக இருப்பது மட்டுமில்லாமல், துணியும் பாழாகும். உதாரணமாக வீட்டுக்குள் உடுத்தும் சட்டையைக் கட்டிலிலோ மேஜை மீதோ போட்டால் அது கசங்கிப் போகும். மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகும். அதற்காகத்தான் ஆடைகளைத் தொங்குவிடுவதற்காக ஹேங்கர் பயன்படுகிறது.
பயன்படும் விதம், பயன்படுத்தும் பொருளைப் பொறுத்துப் பலவிதமான ஹேங்கர் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை வரிசைப் படுத்தியுள்ளோம். இவை ரூ. 900-ல் இருந்து சந்தையில் கிடைக்கின்றன. எஃகால் செய்த ஹேங்கர்கள்தாம் அதிகம் இப்போது விற்பனையாகின்றன. சுவரில் பதிப்பதுபோன்ற ஹேங்கரில் ஆடைகளைத் தொங்கவிட்டுக் கொள்ளலாம். இவை அல்லாது மரம் போன்ற அமைப்பை உடைய ஹேங்கரும் கிடைக்கின்றன. இதில் ஆடைகள் அல்லாது சிறிய பைகளையும் சாவிகளையும் மாட்டிக்கொள்ளலாம்.