சமீபகாலமாக வானுயர் கட்டிடங்கள் கட்டுவது உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. உலகின் மிகப் பெரிய வானுயர் கட்டிடம் துபாயின் புர்ஜ் கலீபாதான். 2,717 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் மொத்தம் 163 மாடிகளைக் கொண்டது. அமெரிக்காவின் ஒன் வேர்டு ட்ரேட் செண்டருக்கு 6-ம் இடம்தான்.
ஆனால், வேர்டு செண்டர் இருக்கும் அதே நியூயார்க் நகரத்திலுள்ள மற்றொரு கட்டிடம் உலகின் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அது 432 பார்க் அவென்யூ கட்டிடம். 1,396 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் 96 மாடிகளைக் கொண்டது. 6 படுக்கையறைகள் கொண்ட 125 அடுக்குமாடி வீடுகள் இதில் உள்ளன.
ட்ராக் தங்கும் விடுதியை இடித்துவிட்டுத்தான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான தங்கும் விடுதியாக இருந்த ட்ராக் 1924-ல் கட்டப்பட்டது. 2007-ல் இடிக்கப்பட்டது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதற்கும் முன்புவரை துபாயின் பிரின்சஸ் டவர்தான் உலகின் மிக உயரமான குடியிருப்புக் கட்டிடமாக இருந்தது. 2012-ல் கட்டி முடிக்கப்பட்ட பிரின்சஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு 1,358 அடிகளைக் கொண்டது. இதில் 763 வீடுகள் உள்ளன. 101 மாடிகளையும் 6 அடுக்கு அடித்தளத்தையும் கொண்டது இந்தக் குடியிருப்பு.
இந்தப் பட்டியலில் இந்தியக் கட்டிடம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அது ‘தி இம்பீரியல் கட்டிடம் பெற்றுள்ள இடம் 41. தென் மும்பைப் பகுதியிலுள்ள இந்தக் கட்டிடம்தான் இந்தியாவைப் பொறுத்தவரை மிக உயரமான குடியிருப்புக் கட்டிடம். 690 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடம் 2010-ல் கட்டி முடிக்கப்பட்டது.