நகர வாழ்க்கையின் நெருக்கடிக்குள் இருக்கும் பலருக்கும் உள்ள ஒரு விருப்பம், தங்களது சொந்த ஊருக்குச் சென்று, சுத்தமான காற்றைச் சுவாசித்து வாழ வேண்டும் என்பது. ஒருவகையில் இதை லட்சியமாகவும் வைத்துப் பலரும் சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் அதெல்லாம் சாத்தியமாகுமா, எனப் பலருக்கும் கேள்வி இருக்கும்.
அதெல்லாம் சாத்தியம்தான் என ஒரு ஜோடி நிரூபித்துள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர்கள் ரூ. 10 லட்சத்தில் கிராமத்தில் ஆசுவாசமான தங்கள் வீட்டை உருவாக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தின் கன்காவாலி தாலுகாவில் உள்ள ஆஸ்ரம் என்ற கிராமத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த அண்டெக் ஸ்டுடியோ என்னும் கட்டுமான நிறுவனம்தான் இந்த வீட்டை உருவாக்கியது. இந்த வீடு கட்டுமானத்துக்கான இடத்தைத் தேர்வுசெய்யப்பட்டது ஒரு சுவார்சியமான கதை.
கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த கெளரி சதார், தேஜேஷ் பாட்டீல் ஆகிய பொறியாளர்கள் வீடு கட்டுவதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய இந்தக் கிராமத்துக்கு வந்தனர். தம்பதியினருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் முழுவதும் மரங்களால் அடர்ந்திருந்தது. அதில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க அலைந்துள்ளனர். அங்கே ஒரு மாமரம் முறிந்து கிடந்துள்ளது. அந்த இடத்தையே வீடு கட்டத் தேர்ந்தெடுத்தனர்.
குறைந்த விலையில் இந்த வீட்டை உருவாக்க நினைத்த அந்தப் பொறியாளர்கள் முதலில் அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கண்டறிந்தனர். அதையே கட்டுமானத்துக்குப் பயன்படுத்த முடிவெடுத்தனர்.
வெட்டுக் கல்
அந்தப் பகுதியில் அதிகமாகக் கிடைக்கும் வெட்டுக் கல்லையே கட்டுமானத்துக்குப் பயன்படுத்த முடிவெடுத்தனர். இதனால் செலவு குறைவு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. மேலும் வெட்டுக்கல் பருவநிலைக்குத் தகுந்தவாறு தன்னைத் தகவமைத்து வீட்டுக்கு வேண்டி வெப்பத்தையும் குளிரையும் தரும். மழைக்காலத்தில் சிறிது வெப்பத்தை அளிக்கும். வெயில் காலத்தில் வெளி வெப்பநிலையைவிட 4, 5 டிகிரி குறைவாகத் தரும்.
கூரைக்கு ஓடுகள்
கூரைக்கு ஓடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கோடைக்காலம் அதிக வெப்பத்தைத் தரக்கூடியது. அதை எதிர்கொள்வதற்கு ஓடுகளே சிறப்பானவை. மேலும் அந்தப் பகுதியில் கிடைக்கக் கூடியவையும் கூட.
கட்டுமானத்துக்கான மரப் பலகை
அந்தப் பகுதியில் ஒரு பழயை கோயிலைப் புனரமைக்கும் பணியின்போது சில மரப் பலகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். இவை அல்லாது சகாயவிலைக்குக் கிடைத்த ஒரு பலாமரத்தின் பலகைகளையும் வாங்கியுள்ளனர்.
கோட்டாக் கல்
உள்புறச் சுவருக்கு கோட்டாக் கல்லைப் பயன்படுத்தியுள்ளனர். பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தக் கல் நேர்த்தியான வடிவமைப்பைத் தரும். மேலும் வெப்பத்தைத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.
அறைக்கலன்கள்
வாடிக்கையாளர் பயன்படுத்திய அறைக்கலன்களையே சரிசெய்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளனர். இப்படி இந்த வீட்டைப் பார்த்துப் பார்த்து பத்து லட்சத்துள் கட்டிவிட்டனர்.