சொந்த வீடு

தரமானதா உங்கள் சிமெண்ட்?

ஜே.கே

கட்டுமானத்துக்கான பொருட்களைத் தேர்ந்தெடுத்துப்பதுதான் நமது கட்டிடப் பணிகளில் முக்கியமானது. சிலர் இதில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

என்னதான் பார்த்துப் பார்த்துக் கட்டினாலும் கட்டுமானப் பொருட்கள் தரமானதாக இல்லையென்றால் கட்டிடம் பலவீனமானதாகிவிடும். கட்டிய சில ஆண்டுகளுக்குள் கட்டிடத்துக்குப் பக்குவம் பார்க்க வேண்டியவரும்.

அதனால் கட்டுமானப் பொருட்களைத் தரமானவையாகத் தேர்ந்தெடுத்துவிட்டாலே பாதிப் பணிகள் முடிந்தமாதிரிதான் எனச் சொல்வார்கள். பாலிலும் எண்ணெய்யிலும் கலப்படம் உள்ள இந்தக் காலத்தில் சிமெண்டிலும் மணலிலும் கலப்படம் வந்துவிட்டது. சிமெண்ட்டும் மணலும் கட்டுமானப் பணிகளில் முக்கியமான பொருட்கள்.

சிமெண்டும் மணலும் ஜல்லியும் கம்பியும் சேர்ந்துதான் வீடு என்னும் கட்டுமானத்தைப் பிடித்துவைக்கிறது. நாம் காணும் வீடு எனும் உருவம் என்பதே இந்தக் கலவைதான் எனலாம். இந்தக் கலவையில் சிமெண்டின் பணி முக்கியமானது.

அதுதான் இந்தக் கலவையைப் பிடித்துவைக்கிறது எனலாம். அப்படிப்பட்ட இந்த சிமெண்டின் தரம் கட்டுமானத்துக்கு அவசியமான ஒன்று. அந்த சிமெண்டைத் தரம் பார்த்து வாங்குவது அவசியம்.

சிமெண்டைப் பொறுத்தவரையில் பல வகை உள்ளன; 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு. இவற்றுள் 53 கிரேடு சிமெண்ட் கான்கிரீட் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 43 கிரேடு சிமெண்ட் கட்டுமானக் கல் வேலைகளுக்கும் 33 கிரேடு பூச்சுக்கும் பயன்படுத்தப்பட ஏற்றவை எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தரத்தைப் பொறியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சிமெண்ட் மூட்டையை வாங்கியதும். அதில் தரச் சான்று இருக்கிறதா, நிறுவனத்தின் பெயர் ஒழுங்காக எழுதப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அடுத்ததாக, சிமெண்ட் தயாரிக்கப்பட்ட தேதியைப் பார்க்க வேண்டும். சிமெண்டின் தரம் நாள் ஆக ஆகக் குறைந்துகொண்டே வரும்.

தயாரிப்புத் தேதி இரு மாதங்களுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் இருந்தால் அதன் தரம் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. அதுபோல 6 மாதம் என்றால் 40 சதவீதம் தரம் குறைய வாய்ப்புள்ளது.

சிமெண்டின் நிறம் ஒரே மாதிரி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். சிமெண்டின் நிறம் பொதுவாக சாம்பல் நிறத்தை ஒத்திருக்கும். சிமெண்டில் கட்டிகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். ஒரே மாதிரி மாவுப் பொடி போல் இருக்க வேண்டும். கட்டிகள் இருந்தால் அவை ஈரத்தை உறிஞ்சி சிமெண்டின் தரத்தைக் குறைக்கும்.

சிமெண்டை விரல்களால் எடுத்துப் பார்க்க வேண்டும். அவை மிருதுவாக இல்லாமல் மணலைப் போல் சொரசொரப்பாக இருந்தால் அதில் கலப்படம் உள்ளது எனப் பொருள். சிமெண்ட் மூடைக்குள் கை நுழைத்துப் பார்க்க வேண்டும். அப்போது குளிர்ச்சியை உணர்ந்தால் அது நல்ல சிமெண்ட். இந்த முறைகளில் சிமெண்டைச் சோதித்துப் பார்த்து வாங்குவது நல்லது.

SCROLL FOR NEXT