குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் உலகம் முழுக்கப் பரவலாகிவருகிறது. வீடற்றவர்களுக்கான வீட்டுத் திட்டம், பணியாளர்களுக்காகத் தற்காலிகக் குடியிருப்பு போன்ற தேவைகளுக்கு இந்த வீட்டுத் திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தென் அமெரிக்க நாடான பெருவில் இப்படியான ஒரு மாதிரி வீட்டுக் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வெண்டனில்லா தொகுதி (ventanilla module) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் கட்டிடக் கலையில் ஒரு மைல் கல்லாகியுள்ளது.
பல்காரியாவைச் சேர்ந்த டிஆர்எஸ் ஸ்டுடியோ என்னும் நிறுவனம் இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டத்தை வடிவமைத்துள்ளது. வெண்டனில்லா மாவட்டத்தில் பச்சாகுட்டேக் என்னும் நகரத்தில் இந்த மாதிரி வீட்டிக் குடியிருப்புத் திட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
முதலில் அந்தப் பகுதியில் மற்ற வீடுகளைப் பார்வையிட்ட டிஆர்எஸ் ஸ்டுடியோ வடிவமைப்பாளர்கள், அதன் கலாச்சாரத்தை மனத்தில் கொண்டனர். குறைந்த விலையில் சவுகர்யமான வீடுகளை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர்.
இதற்காக அந்தப் பகுதியில் எளிதாகக் கிடைக்கும் கண்டெய்னர்கள் இரண்டை விலைக்கு வாங்கினர். நான்கு பேர் வசிக்கக்கூடிய அளவில் ஒரு விசாலமான வீட்டை உருவாக்க அவர்கள் திட்டமிட்டனர்.
கண்டெய்னர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் வீட்டுக் கட்டுமானத்தின் செலவு பன்மடங்கு குறைந்தது. அஸ்திவாரம், சுவர் எதுவும் அவசியமில்லை.
மட்டுமல்ல குறைந்த கால அவகாசத்தில் வீட்டுப் பணிகளை நிறைவேற்றவும் முடியும். பேரிடர் மீட்புக்காக அவசர காலத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு இந்த நுட்பம் ஏற்றது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
கட்டுமானப் பொருட்கள் என்னென்ன?
இந்த வீடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கண்டெய்னர் வீடுகளை உருவாக்குபவர்கள். அதன் கீழ்ப்பகுதியை மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால், டிஆர்எஸ் கட்டுமானக் கலைஞர்கள் அதன் மேல் புறத்தையும் பயன்படுத்தும் முடிவுக்கு வந்தனர்.
இதனால் கீழ்ப்பகுதியில் வரவேற்பறை, கழிவறை, படுக்கையறை போன்றவையும் மேல் பகுதியில் சமையலறை, படிப்பறை போன்றவையும் வடிவமைக்கப்பட்டன. கீழ்ப் பகுதியில் எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்காக அறையை விரிவுபடுத்தும் நோக்கில் இடமும் விட்டிருக்கிறார்கள்.
பிளைவுட்டுக்கு மாற்றாக இப்போது பிரபலமாகிவரும் ஓ.எஸ்.பி. அட்டைகள் (OSB) கொண்டு வீட்டின் சுவர்களை வடிவமைத்துள்ளனர். வீட்டின் மேற்கூரையாக மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிகார்பனேட்டைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
வெள்ளைத் திரைபோல் உள்ள பாலிகார்பனேட் கூரையால் வீட்டுக்குத் தேவையான வெளிச்சம் எளிதாகக் கிடைக்கிறது. இதனால் மின்சாரப் பயன்பாடும் குறையும். இந்த வீடு கட்டுமானத்துக்கான ஒரு படிப்பினையாகவும் பார்க்கப்படுகிறது.