சொந்த வீடு

வீட்டுக் கடன் சில கேள்விகள்

செய்திப்பிரிவு

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் நமக்குப் பலவிதமான சந்தேங்கள் வரும். ஒருவழியாக விசாரித்துத் தெளிந்து நாம் வீட்டுக் கடனும் வாங்கிவிடுவோம். ஆனால், அத்துடன் முடிந்துவிடாது. வீட்டுக் கடன் வாங்கிய பிறகு அந்தச் சந்தேகங்கள் விடாமல் நம்மைத் தொடரும்.

வீட்டுக் கடன் வாங்கிய பிறகு தவணைத் தொகையைக் குறைக்க முடியுமா, ரிசர்வ் வங்கி குறைந்த காலக் கடனுக்கான வட்டியைக் குறைக்கும்போது நம்முடைய வீட்டுக் கடன் வட்டி குறையுமா எனப் பல கேள்விகள் எழும்.

பெரிய தொகையை நம் வீட்டுக் கடன் கணக்கில் செலுத்தி நம் வீட்டுக் கடன் தவணைத் தொகையைக் குறைக்க நினைப்போம். ஆனால், உண்மையில் நம் கடன் கணக்கில் தொகையைச் செலுத்த வழி வகை உள்ளது. ஆனால், கடன் தவணைத் தொகை குறையாது. மாறாக, தவணைக் காலத்தைத்தான் பெரும்பாலான வங்கிகள் குறைக்கின்றன.

இதன் மூலம் வீட்டுக் கடனை விரைவாக முடிக்கலாம். ஆனால், இம்மாதிரிப் பெரும் தொகையை உங்கள் கடன் கணக்கில் வரவு வைக்கும்போது அந்தத் தொகை எந்த வழியில் வந்தது என்ற கேள்வியும் எழும். அதற்கு உங்களிடம் சரியான பதிலும் இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி குறைந்த காலக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதை ஒட்டி வீட்டுக் கடனுக்கான வட்டியைச் சில வங்கிகள் குறைக்கும். சில வங்கிகள் புதிய விண்ணப் பதாரர்களுக்கு மட்டும் வட்டிக் குறைப்பை நடைமுறைப் படுத்துவார்கள்.

இப்படி வீட்டுக் கடன் வட்டியைக் குறைப்பதை வங்கிகளிடம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். வட்டி மாற்றத்துக்குச் சிறிய தொகையை வங்கிக்குச் செலுத்த வேண்டி வரும். அதைப் பெரும்பாலும் வரைவோலை அல்லது காசோலையாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

அதைச் செலுத்திவிட்டால் உங்கள் வட்டி விகிதம் மாறும். இப்போதும் உங்கள் மாதந்திர வீட்டுக் கடன் தவணைத் தொகை மாறாது. ஆனால், புதிய வட்டி விகிதத்துக்குத் தகுந்தாற்போல் தவணைக் காலம் குறைக்கப்படும்.

வீட்டுக் கடன் வாங்குவதில் வரும் இன்னொரு சந்தேகம், இரண்டாவது, மூன்றாவது முறையாகச் சொந்த வீடு வாங்கும்போது அதற்கும் வங்கிக் கடன் கிடைக்குமா என்று.  வாழ்க்கையில் வீடு என்பதே அவசிய அடிப்படைத் தேவை. அந்த வகையில்தான் வீடு கட்டவும் வாங்கவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன.

எனவே, முதல் வீடு கட்டவோ வாங்கவோ வங்கிகள் கடன் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேநேரம் இரண்டாவது வீடு கட்டவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதாவது தனக்காக ஒரு வீடும், வாரிசுகளுக்காக இன்னொரு வீட்டையும் ஒரு குடும்பத்தில் கட்டுவது இயற்கை என்பதால், அதற்கும் கடன் வழங்குகிறார்கள். எனவே அந்த வகையில் இரண்டாவது வீடு கட்டவும் கடன் கொடுப்பதில் பிரச்சினையில்லை.

ஆனால், மூன்றாவது வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் எந்த வங்கிகளுமே கடன் தருவதில்லை. லாப நோக்கோடு வீடு கட்டக் கடன் கேட்பதாக வங்கிகள் தரப்பு நினைக்கும். ஒரு வேளை 3-வது வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தாலும், அதை வணிகக் கடனாகவே கருதவும் வாய்ப்புண்டு. இதனால் வட்டி விகிதம் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கும். வீட்டுக் கடனுக்கு அளிப்பது போல தவணைகளும் நீண்ட காலத்துக்கு அளிக்க மாட்டார்கள். குறுகிய காலத்துக்கு மட்டுமே வழங்குவார்கள்.

- முகேஷ்

SCROLL FOR NEXT