மொராக்கிய பாணி அலங்காரம், அரேபிய கலாச்சாரத்தின் முக்கியமான பிரதிபலிப்பாக இருக்கிறது. இந்த மொராக்கிய அலங்காரத்தால் வீட்டை அழகுபடுத்துவது தற்போது பிரபலமான அலங்காரப் போக்காக மாறியிருக்கிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்த மொராக்கிய அலங்காரத்தைக் கொண்டு எளிமையான வழிகளில் வீட்டை அழகாக்கலாம்.
கால்நாற்காலி
மொராக்கிய அலங்காரத்தின் பாரம்பரியமான அம்சமாக இருக்கிறது கால்நாற்காலி (Pouffe). இதைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். எடை குறைவு என்பதால், இதை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.
படிக்கும் அறை, காஃபி மேசை போன்ற இடங்களில் இந்த நாற்காலியைப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும். வீட்டுக்கு நளினமான தோற்றத்தைக் கொடுக்க விரும்புபவர்கள் இந்த நாற்காலியைப் பயன்படுத்தலாம்.
தரைவிரிப்புகள்
மொராக்கிய அலங்காரத்தில் முக்கியமானவை தரைவிரிப்புகள். இவை விதவிதமான வடிவமைப்புகள், வண்ணங்களில் இருப்பதால், வீட்டின் தோற்றத்தைப் பிரம்மாண்டமாக மாற்றக்கூடியவை இவை.
தரைத்தளக் கற்கள்
மொராக்கிய பாணியில் வீட்டை வடிவமைப்பது என்று முடிவுசெய்துவிட்டால், தரைத்தளத்துக்கும் மொராக்கிய பாணி டைல்ஸ் பயன்படுத்துவதைப் பற்றிப் பரிசீலிக்கலாம். அடர்நீலம், கறுப்பு, வெள்ளை, க்ரீம் போன்ற நிறங்களில் மொராக்கிய டைல்ஸ் கிடைக்கின்றன.
தரையில் மட்டுமல்லாமல் சுவர்கள், தூண்களிலும் இவற்றைப் பயன்படுத்தலாம். வீடு முழுக்கப் பயன்படுத்த விருப்பமில்லையென்றால், வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை போன்றவற்றில் குறிப்பாக ஏதாவது ஓர் இடத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.
மயில் வண்ணங்கள்
மொராக்கிய அலங்காரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பிரகாசமான வண்ணம். அதிலும் மயில் வண்ணம், இந்த அலங்காரத்தின் பிரதானமாக இருக்கிறது. இந்த வண்ணங்கள் உங்கள் வீட்டைப் பிரகாசமாக எளிதில் மாற்றிவிடக்கூடியவை. இந்த மயில் வண்ணத்தை இணைத்து வீட்டில் பயன்படுத்தும்போது, அது தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும்.
விளக்குகள், கூடைகள்
மொராக்கிய அலங்காரத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக வீட்டின் வெளிப்புறத்தையும் விளக்குகளால் அலங்கரிப்பது கருதப்படுகிறது. வீட்டின் வெளிப்புறத்தை மொராக்கிய விளக்குகள், கூடைகள், தொங்கும் செடிகளை வைத்து அலங்கரிக்கலாம்.
வீட்டில் பயன்படுத்தும் குஷன்கள், தலையணைகள் போன்றவற்றையும் மொராக்கிய பாணியில் வாங்கிப் பயன்படுத்தலாம். மற்ற அலங்காரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த மொராக்கிய பாணி அலங்காரத்தில் வீட்டை வடிவமைப்பது எளிமையானது என்கின்றனர் உள் அலங்கார வடிவமைப்பாளர்கள்.