உங்கள் படுக்கையறையில், படுக்கையின் பின்னால் இருக்கும் சுவரைத் திட்டமிட்டு வடிவமைத்தால், அறையின் தோற்றத்தை உங்கள் ரசனைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கலாம். படுக்கையறைச் சுவரை விளக்குகள், கலைப்பொருட்கள், நிறங்கள் ஆகிய அம்சங்களால் வடிவமைக்கலாம். இந்தப் படுக்கைச் சுவர் அலங்காரம் அறையின் தோற்றத்தைப் பெரிதுபடுத்திக்காட்ட உதவும். படுக்கையறைச் சுவர்களை வடிவமைப்பதற்கான வழிகள்:
மலர்கள் வடிவமைப்பிலான உலோக ஜாலியை (Floral Metal Jali) வைத்துப் படுக்கையறைச் சுவரை வடிவமைக்கலாம். அறைக்குப் பிரம்மாண்டத் தோற்றத்தைக் கொடுக்க விரும்புபவர்கள் உலோக வடிவமைப்பைப் பயன்படுத்தலாம்.
விளக்கு அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கைக்குப் பின்னால் இருக்கும் சுவரில் விளக்கு அலங்காரத்தைக் கொடுக்கும் படுக்கையைப் (Backlit bed) பயன் படுத்துவது பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் அறைக்கும் இந்த வடிவமைப்பு ஏற்றதாக இருக்கும்.
பாரம்பரியமான படுக்கையறையை வடிவமைக்க விரும்புபவர்கள், சுவரில் பழமையான மரக் கதவு ஒன்றைப் பொருத்தலாம். இந்தக் கதவில் ஒரு உலோக விளக்கு, சிறிய கண்ணாடியை அமைப்பதும் அறைக்கு வித்தியாசமான பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும்.
எளிமையான அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கைச் சுவரை மென்மையான நிறங்களாலான சுவரொட்டிகளால் வடிவமைக்கலாம். இளஞ்சிவப்பு, சாம்பல், இளமஞ்சள் போன்ற நிறங்களாலான சுவரொட்டிகளை இதற்குத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆடம்பரமான அலங்காரத்தை விரும்புபவர்கள், படுக்கை சுவருக்குப் பின்னால் முப்பரிமாணச் (3டி) சுவரொட்டிகளை அல்லது வடிமைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முப்பரிமாண வடிவமைப்புகளால் படுக்கையறையை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி எளிமையாக மாற்றிக்கொள்ளமுடியும்.
படுக்கையின் சுவரை வடிவமைக்கச் சுவரெழுத்துகளைப் (Graffiti) பயன்படுத்துவது இப்போதும் பிரபலமான போக்காக இருக்கிறது. இந்தச் சுவரெழுத்துகள் வடிவமைப்பும் அறையின் தோற்றத்தைப் பிரம்மாண்டமாக மாற்றும் வலிமைகொண்டது.
‘ஜியோமெட்ரிக்’ வடிவமைப்புகளாலான சுவரொட்டிகளும் படுக்கையறைச் சுவரில் பயன்படுத்துவதற்கு ஏற்றவை. எளிமையை விரும்புபவர்கள் இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
படுக்கையறையில் பொருட்களை அடுக்கிவைக்க வேண்டிய தேவையிருப்பவர்கள், படுக்கைக்குப் பின்னாலிருக்கும் சுவரில் அலமாரியை வடிவமைப்பது ஏற்றதாக இருக்கும். இந்த அலமாரி படுக்கையறையில் இடப்பற்றாக்குறை ஏற்படுத்துவதைக் குறைக்கும். படுக்கைக்குப் பொருந்தும் வண்ணத்தில் இந்த அலமாரியை வடிவமைப்பது அறையின் தோற்றத்தை மெருகேற்றும்.
படுக்கைக்குப் பின்னாலிருக்கும் சுவரை மென் செலடான் பட்டு (soft celadon silk) அல்லது சாடின் திரைச்சீலைகளால் வடிவமைக்கலாம். ஆடம்பரமான அலங்காரத்தை விரும்புபவர்கள் இந்தத் திரைச்சீலை அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.