வீடுகள், எப்போதும் அந்த வீட்டில் வசிப்பவர்களைப் பிரதிபலிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக, அதிகமாகப் பயணம் செய்பவர்களின் வீடுகள் அவர்கள் சென்றுவந்த பயணக் கதைகளைப் பேசும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
பயண விரும்பிகள், தங்கள் பயணங்களை என்றென்றும் நினைவுகூரும்படி வீட்டை வடிவமைப்பதைத் தேர்வுசெய்கிறார்கள். பயணக் கதைகளைப் பிரதிபலிக்கும்படி வீட்டை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்…
உங்களுக்கான இடம்
பயணக் குறிப்புகளை உங்கள் நாட்குறிப்பு, டைரியில் எழுதி வைப்பது எல்லோரும் பொதுவாகச் செய்யும் விஷயம். ஆனால், சில பயண நினைவுகள் உங்கள் வீட்டின் சுவர்கள், கதவுகள், அலமாரிகளில் இடம்பெற்றிருப்பது அவசியம். நீங்கள் பயணம் செய்யும் நகரங்களின் உள்ளூர்ச் சந்தையில் கிடைக்கும் ஏதாவது பிரத்யேகமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிவருங்கள்.
அவை கலைப்பொருட்களாகத்தாம் இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. உங்களுக்குப் பிடித்த எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம். பழைய புத்தகங்கள், சமையல் பாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் சென்று வந்த பயணத்தின்போது வாங்கிய பொருட்களை வைத்து உங்கள் வீட்டை அலங்கரிப்பது பொருத்தமாக இருக்கும்.
உள்ளூர்த் துணிகள்
உலகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்படி தயாரிக்கப்படும் துணிகள், கைவேலைப்பாடுகள் இருக்கின்றன. இப்படித் தனித்துவமான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் துணிகளைப் பயணங்களின்போது வாங்கலாம். அவற்றை வைத்து வீட்டை அலங்கரிப்பது உங்கள் பயண ரசனையை வெளிப்படுத்துவதற்கான எளிமையான வழியாக இருக்கும்.
பாரம்பரிய பொருட்கள்
பாரம்பரிய பொருட்களை வைத்து வடிவமைக்கும் போக்கு இன்னும் நீண்ட காலத்துக்குப் பிரபலமாக இருக்கும். பயணங்களின்போது சேகரித்துவைத்திருக்கும் இதுபோன்ற பாரம்பரியமான பொருட்களை வைத்து வீட்டை வடிவமைக்கலாம்.
பயண நினைவுகள்
பயணங்களின்போது நீங்கள் எடுத்த ஒளிப்படங்களில் உங்களுக்குப் பிடித்த ஒளிப்படங்களை வரவேற்பறைச் சுவரில் மாட்டிவைக்கலாம். இந்த ஒளிப்படங்களைப் புதுமையாக வடிவமைத்து வரவேற்பறைச் சுவரை அலங்கரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒளிப்படங்கள் எப்போதும் சிறந்த வடிவமைப்பு அம்சமாக இருக்கின்றன.
பொருட்களை வடிவமைக்கலாம்
பயணங்களின்போது வாங்கிவந்த சாதாரணப் பொருட்களைக் கலைப்பொருட்களாக மாற்றிப் பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் ஏதாவது உள்ளூர்ச் சந்தையில் வாங்கிவந்த பெட்டியை அழகான விளக்காக மாற்ற முடியும்.
இந்த மாதிரி தனித்துவமான பொருட்களைக் கலைப் பொருட்களாக மாற்றிப் பயன்படுத்துவது உங்கள் அறைக்கே ஒரு தனித்துவமான தோற்றத்தைக்கொடுக்கும்.