சொந்த வீடு

ஒரே ஆண்டில் வீடு வாங்கலாம்!

கனி

ஒரு ஆண்டு என்பதை நீண்ட காலம், குறுகிய காலம் என்று எப்படி வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால், நிதித் திட்டமிடலைப் பொறுத்தவரை, ஒரு ஆண்டு என்பது பெரிய விஷயம். கடந்த சில புத்தாண்டுகளில், ரியல் எஸ்டேட் துறை கண்டிருக்கும் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, சரியான திட்டமிடல் இல்லாமல் வீடு வாங்குவது ஆபத்தானதாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஒரு வீட்டை உருவாக்குவதற்குத் திட்டமிடலும் புத்திசாலித்தனமும் தேவை. ஒரு வீட்டை வாங்குவதற்காகத் திட்டமிட, சேமிக்க  ஒரு ஆண்டு என்பது சரியான கால அவகாசம்தான் என்கின்றனர் நிதி நிபுணர்கள். ஒரு ஆண்டில் வீட்டை வாங்குவதற்கான ஆலோசனைகள்:

பட்ஜெட் திட்டமிடல்

பல திட்டங்கள், இடங்கள், கட்டுநர்களுடன் ஒப்பீடுசெய்து, முடிவுசெய்வது போன்ற பணிகள் நிதித்  திட்டமிடலை எளிமையாக்கும். நம்மால் எந்த பட்ஜெட்டுக்குள் வாங்க முடியும் என்பதைத் தீர்மானிக்க இந்த ஒப்பீடு உதவும். நீங்கள் தேர்வுசெய்திருக்கும் திட்டத்தின் தோராயமான தொகை தெரிந்துவிட்டால், வீடு வாங்குவதற்காக உங்களுக்குத் தேவைப்படும் பட்ஜெட்டும் உங்களுக்குத் தெரிந்துவிடும்.

பல வங்கி இணையதளங்களில் வீட்டுக் கடனைக் கணக்கிடுவதற்கான ஆன்லைன் கால்குலேட்டர் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டுக் கடன் தொகையைத் தெரிந்துகொள்ளலாம்.

வீடு வாங்கும் தொகையில் ஆரம்பித்து, ஆவணங்கள் பதிவுசெய்வது, உள் அலங்காரம் என அனைத்தையும் கணக்கிடுவது முழு பட்ஜெட்டைத் தீர்மானிக்க உதவும். வீடு வாங்கும் தொகை இல்லாமல், மற்ற செலவுகள் எல்லாம் சேர்ந்து வீடு வாங்கும் தொகையிலிருந்து 10-20 சதவீதம்வரை கூடுதலாகச் செலவாகலாம். 

முன்பணத்தை அதிகமாகச் செலுத்திவிட்டுக் குறைந்த மாதத் தவணையைக் கட்டத் தீர்மானிக்கலாம் அல்லது, குறைவான முன்பணத்தைச் செலுத்திவிட்டு அதிகமான மாதத் தவணை என்று உங்கள் நிதி வசதிக்கு ஏற்ப நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

முன்பணத்துக்காகச் சேமிக்கலாம்

வீடு வாங்குவதற்கான தொகையைத் தீர்மானித்துவிட்டால், அதில் 20 சதவீதத்தை முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இது வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகளைப் பொறுத்து, 30 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.  ஏற்கெனவே உங்கள் சேமிப்பிலிருந்து ஒரு தொகையை முன்பணமாக ஒதுக்கலாம். அத்துடன், மாதமாதம் இதற்காக ஒரு தொகையைச் சேமிக்கத் தொடங்கலாம். இது குறுகிய காலச் சேமிப்பு என்பதால், பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

முன்பணத்துக்குத் தேவையான தொகையைச் சேமிக்க முடியவில்லை என்றால், நண்பர்கள், குடும்பத்தினரிடம் கடன் பெறுவது, தனிநபர்க் கடன், வருங்கால வைப்புநிதி போன்ற வழிகளைப் பற்றி யோசிக்கலாம்.

கடன், வருமான விகிதம்

கடன் வழங்குபவர்கள் உங்கள் வருமானத்திலிருந்து 30 சதவீதத்தைத்தான் மாதத் தவணையாகத் தீர்மானிப்பார்கள். அதனால், வீட்டுக் கடன் பெறுவதற்குமுன் மற்ற கடன்களை அடைத்துவிடுவது சிறந்தது.

கடன் மதிப்பெண்

உங்கள் பழைய கடன் செயல்பாடுகளைப் பிரதிபலிப்பதற்காக உங்கள் வங்கிகளால் வழங்கப்படுவது இந்தக் கடன் மதிப்பெண் (credit score). 300-900 என்ற அடிப்படையில் இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது கடன்பெறுவதைச் சுலபமாக்கும். ஆனால், குறைவான மதிப்பெண்ணாக இருந்தால், வங்கிகளில் வீட்டுக் கடன் நிராகரிக்கப்படும்.

ஒரு ஆண்டில், உங்களால் கடன் மதிப்பெண்ணைச் சீரமைத்துக்கொள்ள முடியும். 6-8 மாதங்களில், கடன் மதிப்பெண்ணை அதிகரிக்க முடியும்.

தேவையற்ற கடன்கள்

நீங்கள் ஏற்கெனவே நிறையக் கடன்கள் பெற்றிருந்தால், உங்களின் வீட்டுக்கடன் நிராகரிக்கப்படுவதற்கு நிறையச் சாத்தியம் உண்டு. அதனால், வீடு வாங்குவதற்குத் திட்டமிட்ட பிறகு, தேவையற்ற கடன்களைப் பெறாமல் இருப்பது சிறந்தது.

வீடு வாங்குவது ஒரு தனிநபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அது சரியான நிதித் திட்டமிடலுடன் இருந்தால், வீடு வாங்கும்போது ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளைத் தடுக்க முடியும்.

SCROLL FOR NEXT