சொந்த வீடு

விளக்குகளை அணையுங்கள்!

செய்திப்பிரிவு

நாம் சிக்கனப்படுத்த வேண்டிய பல விஷயங்களில் மின்சாரமும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நிலவிய மின்தட்டுப்பாடு தீர்வுகாணவே முடியாத சிக்கலாக நமக்குச் சவாலாக இருந்தது.

இன்றைக்கு மின்வெட்டுகள் ஓரளவு குறைந்திருக்கின்றன. ஆனால் சென்னை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மின்வெட்டு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு என்னதான் முயற்சி எடுத்தாலும் பொதுமக்களாகிய நாமும் சிரத்தை எடுத்துக்கொண்டால்தான் இந்த மின்தட்டுப்பாடு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும்.

மின்சாரச் சிக்கனம் ஒருபக்கம் காரணமாக இருந்தாலும் மின்விளக்குகள் வெளியேற்றும் வெப்பமும் பூமி வெப்பமடைதலுக்குக் காரணமாக இருக்கலாம். ஒரு குண்டு பல்பு எரிவதால் பூமி வெப்பமடையுமா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் ஒன்று ஒன்றாகச் சேர்ந்துதான் பல்லாயிரம் எண்ணிக்கையாக மாறுகிறது.

அதனால் அவசியமில்லாமல் விளக்குகள் எரிவதைக் குறைக்க முயல வேண்டும். வீட்டின் எல்லா அறைகளிலும் விளக்குகளை எரிய விட வேண்டியது அவசியமல்ல. நீங்கள் பயன்படுத்தும் அறை போக மற்ற அறைகளில் மின் விளக்குகளை அணைக்கலாம்.

வீட்டில் இருட்டு அடைந்திருந்தால் வீட்டிற்கு நல்லதல்ல எனச் சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அது அவசியமல்ல. தேவைப்படும்போது விளக்கைப் பயன்படுத்தினால் போதுமானது.

இன்னும் பல வீடுகளில் மின் விசிறி, விளக்குகள் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு வரவில்லை. ஆளில்லாத அறை மின் விளக்குகள் எரியும்; மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும். நாம் அன்றாடப் பணிகள் பல வற்றுக்கும் மின்சார உபயோகப் பொருள்களையே சார்ந்திருக்கிறோம். அதைச் சட்டனெ விலக்கிக்கொள்ள முடியாது.

ஆனால் சில தேவைகளுக்கு மின்சார உபயோகப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துப் பார்க்கலாம். உதாரணமாக இப்போது உடற்பயிற்சி கருவிகள் கூட மின்சாரத்தில் வந்துவிட்டன.

இவற்றைத் தவிர்க்கலாம். சுத்தமான காற்றுடன் வெளியில் நடந்தால் உடலுக்கும் ஆரோக்கியம். பிறகு வாஷிங்மெஷினைத் துணிகளைத் துவைப்பதற்கு மட்டும் உபயோகிக்கலாம்.

உலர்த்துவதற்கு டிரையரை அவசியமில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவசரமில்லாதபோது வெளியே கொடியில் உலர்த்தலாம். அதுபோல சி.எப்.எல். விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT