கடந்த சில ஆண்டுகளாகப் பல விதமான நெருக்கடிகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை பெரும் தேக்கத்தைச் சந்தித்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை மீண்டுவருகிறது.
இப்போது வெளியாகியிருக்கும் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான ஜே.எல்.எல். நிறுவனத்தின் அறிக்கை அதற்கான சான்று எனலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஐ.டி. துறையின் வருகை சென்னை ரியல் எஸ்டேட்டின் அபார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அப்போது அந்தத் துறையில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் காரணமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்வது அதிகரித்தது.
செகுசு வீடுகள், பட்ஜெட் வீடுகள் எனப் பல விதங்களில் முதலீடு செய்யப்பட்டது. அதனால் சென்னையின் வீட்டு விற்பனையும் அதிகரித்தது. விலை மதிப்பும் கூடியது.
இது பட்ஜெட் வீடுகளை வாங்குபவர்களுக்கு வினையாகவும் ஆனது. ஆனால், அந்த நிலை நீடிக்கவில்லை. ஐ.டி. துறையின் வீழ்ச்சி, ரியல் எஸ்டேட் துறையையும் பாதித்தது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ரியல் எஸ்டேட் துறையைப் பாதித்தது.
இவை அல்லாது பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவையும் பாதிப்பின் காரணங்களாகச் சேர்ந்துகொண்டன. ஆனால், இவற்றுக்கு அப்பாற்பட்டு இப்போது பட்ஜெட் வீடுகளுக்குச் சாதகமான சூழல் தொடங்கியிருப்பதாக ஜே.எல்.எல். அறிக்கை தெரிவிக்கிறது.
பட்ஜெட் வீட்டுக் குறியீடு குறித்து இந்திய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் வளம் மிக்க நகரங்களான டெல்லி தலைநகர்ப் பகுதி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது ஜே.எல்.எல்.. இந்த நகரங்களில் 2010-லிருந்து 2018-வரை நடந்த மாற்றத்தை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் வருமானம், வீட்டுக் கடன் சதவீதம், சந்தை மாற்றம் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 2013-ம் ஆண்டு வீட்டு வருமானம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அது மெச்சத்தக்கதாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் பட்ஜெட் வீடுகளின் விற்பனை 5-7 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால், வீட்டுக் கடன் சதவீதம் 10.1 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டும் வீட்டுக் கடன் ஏறத்தாழ இதே அளவு இருந்துள்ளது.
இந்தக் காரணங்களால் 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்ஜெட் வீடுகளின் விற்பனைக் குறியீடு குறைந்த அளவிலேயே இருந்துள்ளது. ஏழு நகரங்களில் மும்பையில்தான் பட்ஜெட் வீட்டு விற்பனை மிகக் குறைந்த அளவாக உள்ளது. மும்பையில் பட்ஜெட் வீட்டு விற்பனைக் குறியீடு 2011-ல் 47 ஆக இருந்தது 2013-ல் 43 ஆகக் குறைந்துள்ளது. 2018-ல் இது 84 ஆக அதிகரித்திருந்தாலும் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த அளவு.
அதன் பிறகு 2014-ல் வீட்டு விலை 2 சதவீதம் அளவில் இருந்ததாகச் சொல்லும் அறிக்கை, வருமானம் 2013-ன் அளவே இருந்ததாகச் சொல்கிறது. ஆனால், வீட்டுக் கடன் சதவீதத்தில் ஏற்பட்ட மாற்றம் சாதகமாக அமைந்ததாக இந்த அறிக்கை சொல்கிறது.
பட்ஜெட் வீட்டுக்கான வாய்ப்பு அதிகம் உள்ள நகரங்களில் ஹைதராபாத் முதலிடம் வகிக்கிறது. 2011-ம் ஆண்டிலிருந்தே அங்கு பட்ஜெட் வீடுகளுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறது இந்த அறிக்கை. 2011-ல் 140 ஆக இருந்த பட்ஜெட் வீட்டுக் குறியீடு, 2013-ல் 111 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆனால், 2018-ல் அது 189 ஆக உயர்ந்துள்ளது. இந்த விகிதம் 2018-ல் 183 வரை உயரக் கூடும் எனவும் அந்த அறிக்கை கணித்துள்ளது. அதே நேரம் 2021-ல் கொல்கத்தா, நாட்டில் அதிகமான பட்ஜெட் வீட்டுக் குறியீட்டைப் பெறும் வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை கணிக்கிறது.
ஹைதராபாத்துக்கு அடுத்தபடியாக கொல்கத்தா 174 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக புனே 167 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. பட்ஜெட் வீட்டுக்கு அதிகமாகத் தேவை உள்ள சென்னைக்கு நான்காம் இடமே கிடைத்துள்ளது.
2018-ல் 155 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னையின் பட்ஜெட் வீட்டுக்குக் குறியீடு, நடப்பு ஆண்டில் 164 வரை உயரக்கூடும் என அந்த அறிக்கை சொல்கிறது. 2021-ல் அது இன்னும் அதிகமாக 167 வரை ஆக உயரக்கூடும் எனவும் இந்த அறிக்கை கணிக்கிறது. இதன் மூலம் சென்னையில் நடுத்தர மக்களுக்கான வீடுகளின் எண்னிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும்.