தைவானின் தைசுங் நகரத்தின் அருகே நன்துன் மாவட்டத்தில், அமைந்திருக்கும் ‘வானவில்’ (Caihongjuan என்றும் இந்த கிராமம் குறிப்பிடப்படுகிறது) கிராமம், தற்போது தைவானின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், 96 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஹுவாங் யுங்-ஃபு (Huang Yung-Fu) அந்தக் கிராமத்தின் வீடுகளில் வரைந்திருக்கும் ஓவியங்கள். அவரை ‘வானவில்’ தாத்தா என்றுதான் அந்தக் கிராமத்தினர் அழைக்கின்றனர்.
1940-50 களில், சீனாவிலிருந்து திரும்பிய முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருப்பதற்காக அந்தக் கிராமத்தை தைவான் அரசு தற்காலிகமாக உருவாக்கியது. ஆனால், 1200 வீடுகள் அமைந்திருந்த அந்தக் கிராமம், ஒரு கட்டத்தில் 11 வீடுகளாகச் சுருங்கியது. அந்தக் கிராமத்தில் வசித்தவர்கள் பலரும் அந்தக் கிராமத்தை காலிசெய்து சென்றுவிட்டனர். கட்டுநர்கள் பலரும் அந்தக் கிராமத்தின் இடங்களை வாங்கினர். அதனால் தைவான் அரசு அந்த கிராமத்தில் அமைத்திருந்த வீடுகளை இடிக்க முடிவுசெய்தது.
37 ஆண்டுகளாக அந்தக் கிராமத்தில் வசித்து வந்த ஹுவாங்கிற்கு, தான் வாழ்ந்த கிராமத்தை விட்டுச்செல்ல மனம் வரவில்லை. அவருடன் சேர்ந்து சிலர், அந்தக் கிராமத்தைவிட்டுச் செல்லக் கூடாது என்று முடிவு செய்தனர்.
வீட்டில் தனியாக இருந்த ஹுவாங், என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் தன் வீட்டில் ஒரு பறவையை வரைந்தார். அதற்குப்பிறகு, தன் வீட்டின் சுவர்களில் வெவ்வேறு உருவங்களையும் விலங்குகளையும் ஓவியங்களாக வரையத் தொடங்கினார். அப்படியே கிராமத்தில் இருந்த மற்ற வீடுகளிலும் அவர் ஓவியங்கள் வரைந்தார்.
அவர் வீடுகளில் வரைந்திருந்த ஓவியங்களால் ‘வானவில்’ கிராமம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, விரைவில் சுற்றுலா பயணிகள் பலரும் அந்தக் கிராமத்துக்கு வரத்தொடங்கினர். சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்துவருவதால், தைவான் அரசு, வானவில் கிராமத்தை இடிக்கும் முடிவைக் கைவிடுவதாக அறிவித்தது. 96 வயதில் ஓவியங்கள் வரைந்து, தான் வாழ்ந்துவந்த கிராமம் இடிக்கப்படாமல் காப்பாற்றியிருக்கிறார் இந்த ‘வானவில்’ தாத்தா ஹுவாங்.
நாய்கள், பூனைகள், பறவைகள், பூக்கள் பல்வேறு விதமான உருவங்கள் என நேர்த்தியாக வீடுகளின் சுவர்களில் வரைந்திருக்கும் இவர், முறைப்படி ஓவியம் கற்றவரில்லை. மூன்று வயதில், தன் தந்தையிடம் வரைய கற்றுக்கொண்டதை வைத்தே ஒரு கிராமத்தையே ஓவிய கிராமமாக மாற்றியிருக்கிறார் இவர்.
தினமும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து இவர் வீடுகளின் சுவர்களில் வரையத் தொடங்குகிறார். 100 வயதிலும் வரைவதை நிறுத்த மாட்டேன் என்று சொல்கிறார் இந்த ‘வானவில்’ தாத்தா.