வரவேற்பறையில் நீங்கள் வைக்கும் செடிகள் சில சமயங்களில் எந்தக் காரணமுமின்றிக் காய்ந்துபோய்விடும். ஆனால், அதே சமயம் பால்கனியில் வைத்த செடிகள் நன்றாக வளர்ந்துவரும். அதற்குக் காரணம் எல்லாச் செடிகளும் ஒரே சூழலில் வளரக்கூடியவை அல்ல என்பதுதான். வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு அளவில் சூரிய ஒளிக் கிடைக்கும். அத்துடன், ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான வெப்பநிலை நிலவும். காற்றின் அளவும் மாறுபடும்.
எல்லா வீட்டுச்செடிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சூரிய ஒளி தேவைப்படும் செடி ஜன்னலில்லாத படுக்கையறையில் வளரவாய்ப்பில்லை. அதே மாதிரி, காற்றில் வளரும் செடிகளைச் (Air Plants) சூரிய ஒளி படும் ஜன்னலுக்கு அருகில் வைத்தால் அவை மடிந்துவிடும். அதனால், வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் செடிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் தனித்துவமான தேவைகளை அறிந்து தேர்ந்தெடுப்பது அவசியம். ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வகையில் தனித்துவமான அழகியல் இயல்புகளுடன் வீட்டுச் செடிகள் இருக்கின்றன.
படுக்கையறைச் செடிகள்
படுக்கையறை என்பது நீங்கள் ஓய்வெடுக்கும் இடம். அதனால், மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும்படியான செடியைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுப்பது அவசியம். மணம் வீசும் லாவெண்டர் (Fragrant Lavender) செடி, அறையி லிருக்கும் காற்று மாசை நீக்கும். இந்தச் செடியை வெயில் படும்படி, ஜன்னலுக்கு அருகில் வைக்கலாம். வாரம் ஒருமுறை தண்ணீர்விட்டால் போதுமானது. அத்துடன், பாம்புச் செடி, சிலந்திச் செடியும் படுக்கையறைக்கு ஏற்றவை. மறைமுகமாக வெயில்படும்படி அவற்றை வைக்க வேண்டும். இவற்றுக்கும் தண்ணீரைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் விட்டால் போதுமானது. ஆனால், படுக்கையறையில் ஒன்றிரண்டு செடிகளுக்கு மேல் வைக்க வேண்டிய அவசியமில்லை.
வரவேற்பறைச் செடிகள்
வரவேற்பறைக்குச் செடிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, பார்க்க அழகாக இருக்கும் செடிகளைத் தேர்தெடுக்கலாம். ஏனென்றால், வரவேற்பறையில்தான் பெரும்பாலான நேரத்தை நாம் செலவிடுவோம். பீஸ் லில்லி (Peace Lily) வரவேற்பறைக்கு ஏற்ற செடி. இந்தச் செடி எந்த வெளிச்சத்திலும் வளரும் ஆற்றல் கொண்டிருப்பதால், அதைப் பராமரிப்பதும் எளிது. வண்ணங்களை விரும்புபவராக இருந்தால், பிகோனியா (begonias), பிலோதெந்ரோன்(philodendrons), கள்ளி(cacti), சக்குலென்ட்(succulents) போன்ற செடிகளை வாங்கலாம். இந்தச் செடிகள் மிதமான சூரிய வெளிச்சம் இருந்தாலும் வளரக்கூடியவை.
சமையலறைச் செடிகள்
சமையலறை எப்போதும் சூடாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். அத்துடன், சமைய லறையில் இடப்பற்றாக் குறையும் இருக்கும் என்பதால், பெரிய செடிகளைத் தவிர்ப்பது நல்லது. அதனால், தொங்கும் செடிகளைத் தேர்ந்தெடுப்பது சமையலறைக்கு ஏற்றதாக இருக்கும். சமையலறையில் கூடுமான வரை, சமையலுக்கு உதவும் செடிகளை வளர்க்கலாம். உங்கள் சமையலறையில் சூரிய வெளிச்சம் இருந்தால், ரோஸ்மேரி செடியை வளர்க்கலாம்.
குளியலறைச் செடிகள்
குளியலறையில், குறைவான வெளிச்சமும் ஈரப்பதமும் இருக்கும் என்பதால் வெப்பமண்டலச் செடிகளை வளர்க்கலாம். பன்னம் (Ferns)வகை செடிகள் குளியலறைக்கு ஏற்றவை. இந்தச் செடிகளுக்குத் தண்ணீர் விட வேண்டிய அவசியமில்லை. அத்துடன், அவற்றைப் பராமரிப்பதும் எளிது.
சாப்பாட்டு அறைச் செடிகள்
வரவேற்பறையில் வைக்கும் செடிகளே சாப்பாட்டு அறைக்கும் பொருத்தமாக இருக்கும். எல்லாச் செடிகளையும் விட மூங்கில் செடிகள் சாப்பாட்டு அறைக்கு ஏற்றவையாக இருக்கும். சாப்பாட்டு மேசையின்மீது இந்த மூங்கில் செடியை வைக்கலாம். இதைப் பராமரிப்பது எளிமையானது.