முத்திரை வரி முறையாகச் செலுத்தப்படிருப்பதை பார்த்து உறுதிசெய்ய வேண்டும். முத்திரைத் தாள் மூலமாகவோ, வரைவோலை, இ-ஸ்டாம்பிங் மூல்மாகவோ முத்திரை வரி செலுத்தப்படும். சொத்தை வாங்குபவரின் பெயரும் விற்பவரின் பெயரும் பிழையின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.சொத்தை வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் அடையாள அட்டை நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
விற்பவரின், வாங்குபவரின் கையோப்பங்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும்சொத்து விவரங்கள், அளவுகள் ஆகியவை தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். விற்பனையாளருக்கு அச்சொத்து எப்படி வந்தது என்பதை முறையாகக் கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். ஒரு வேளை பவர் பத்திரம் மூலம் பத்திரம் பதிவுசெய்தால், பவர் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளவருக்கு பத்திரப்பதிவு செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பத்திரத்தில் நிபந்தனை ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்க என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி ஏதாவது நிபந்தனை குறிப்பிடப்பட்டிருந்தால் அதைக் குறித்துக் கேட்டறிந்து களைவது நல்லது. பிற்காலத்தில் வாங்கும் சொத்து உரிமையில் பிரச்சினை வந்தால் தகுந்த நஷ்ட ஈட்டைச் சொத்தை வாங்குபவருக்கு விற்பவரால் வழங்கப்படும் என்பதைப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இதற்கு முன்பு செய்ய வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் நகல் ஆவணம் விண்ணப்பித்து வாங்கி அதை விற்பனையாளரின் ஆவணத்துடன் ஒப்பிட்டுச் சரி பார்க்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நீங்கள் பெற்ற நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் ஒத்திருக்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழ் எடுத்து பார்க்க வேண்டும்.