முன்பெல்லாம் நம் வீடுகளில் கீழே உட்காரும் வழக்கம்தான் இருந்தது. பிறகு தனி நாற்காலிகள் நம் வீட்டுக்குள் வந்தன. இப்போது நாற்காலி சேர்ந்து சோபா வந்துவிட்டது. இந்த சோபாக்கள் இப்போது வீடுகளில் அவசியமான ஒரு அறைக்கலன் ஆகிவிட்டது. நாலைந்துபேர் சேர்ந்து வீட்டுக்கு வந்துவிட்டால் ஓடிப்போய் நாற்காலியை எடுத்துவைக்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. இந்த சோபா விருந்தினர் அமர்வதற்காக இப்போது வீடுகளிலும் இருக்கிறது.
சோபாக்களில் பல வகை உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், திவான். இந்த அறைக்கலன் இருவர் அமரக் கூடிய வகையில் இருக்கும். ஆனால், ஒரு பக்கம் சாய்ந்து படுத்துக்கொள்ளும் வசதியுடன் இருக்கும். இது அந்தக் காலத்தில் திவான் பதவியில் இருப்பவர்கள் அமர்வதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
இந்த திவானிலும் பல வகை உண்டு. காலத்துக்குத் தகுந்தாற் போல் திவான் வடிவம் மாறியுள்ளது. வசதியைப் பொறுத்தும் வகை மாறுபடும்.
நவீன திவான்
இது திவான் இருக்கையை முன்மாதிரியாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஒரு பக்கம் சாய்ந்துகொள்ளும் வசதி இருக்கும். பாரம்பரிய திவானில் உள்ள ஆடம்பரம் இந்த வகையில் இருக்காது. இந்த எளிமைதான் இதன் நவீனம்.
பாரம்பரிய திவான்
இந்த வகை திவான் பெரும்பாலும் மரத்தால் செய்யப்படுது. தலைசாயும் பகுதியிலும் இருக்கையிலும் மெத்தை திவானுடன் சேர்ந்து தைக்கப்பட்டிருக்கும். இந்த திவான் வீட்டுக்கு ஆடம்பரமான தோற்றத்தைத் தரும்.
ஜன்னல் திவான்
வெளிப்பக்கம் புடைத்துத் தெரிவதுபோன்ற ஜன்னல் இருக்கும் வீடுகளில் அந்தப் புடைப்பின் உள்பக்கத்தில் இம்மாதிரி திவான் உருவாக்கலாம். இந்த வகை திவானை செங்கல் கட்டுமானத்தில் உருவாக்கலாம். பிறகு அதற்கு மேல் மெத்தை இட்டுப் பயன்படுத்தலாம்.
ஊஞ்சல் திவான்
ஆடம்பரமான ஊஞ்சலில் திவான் பிணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை திவானும் ஆடம்பரமானது.
பகல் படுக்கை திவான்
இந்த வகை திவானை, பகல் நேரக் கட்டில் என்றும் அழைக்கிறார்கள். பகலில் உறங்கும் பழக்கம் உள்ள பலரும் படுக்கையறையில் சென்று உறங்குவதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்றது இந்த வகை திவான்.
தூண்கள் உள்ள திவான்
ஆடம்பரமான ஊஞ்சல் திவானை ஒத்த வடிவமைப்பு கொண்டவை இந்த வகை திவான். இது இன்றைக்குப் பெரும்பாலும் வெளி அறைக்கலனாகப் பயன்படுகிறது.