சொந்த வீடு

முதலிடம் பெறும் தென் சென்னை

விபின்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நீடித்த மந்த நிலை இந்தாண்டு தொடகத்திலேயே மாறியுள்ளது. கடந்த வாரம் வெளியான நைட் ப்ராங்க் அறிக்கை இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது.

சென்னை ரியல் எஸ்டேட் கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாகவே இருந்தது. பண மதிப்பு நீக்கம், மணல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓரளவு ரியல் எஸ்டேட் ஏற்றம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி முக்கியமானது.

சென்னையின் ரியல் எஸ்டேட் முடிவடைந்த 2018-ல் ஏறுமுகம் கண்டுள்ளதாக புள்ளிப் விபரங்களைச் சுட்டுக் காட்டி இந்த அறிக்கை சொல்கிறது. 2017-ல் 228,072 ஆக இருந்த வீட்டு விற்பனை எண்ணிக்கை 2018-ல் 242,328 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் புதிய திட்டங்களும் 78,637 ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கை சுட்டுக் காட்டுகிறது

mudhalidam-2jpg

இந்திய அளவில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெற்றுள்ளது. பண மதிப்பு நீக்கம், சிமெண்ட் விலை ஏற்றம், திட்டத்துக்கான ஒப்புதல் பெறுவதில் உள்ள காலதாமதம் போன்ற காரணங்களால் 2017-ல் தேக்கம் கண்ட ரியல் எஸ்டேட் இப்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி நடை போடத் தொடங்கியுள்ளது.

மும்பை, புனே, சென்னை, பெங்களூரூ, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், தேசியத் தலைநகர்ப் பகுதிகள் ஆகிய நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் புதிய திட்டங்கள் தொடங்குவதில் அகமதாபாத், கொல்கத்தா, தேசியத் தலைநகர்ப் பகுதிகள் ஆகியவை 2017-ம் ஆண்டைவிட 2018-ல் பிந்தங்கியுள்ளன. ஆனால் வீட்டு விற்பனையில் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.

இவற்றைத் தவிர வீட்டு விற்பனையைப் பொறுத்தவரை சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்கள் 2017-ம் ஆண்டைக் காட்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளன.

சென்னை ரியல் எஸ்ட்டேட்டைப் பொறுத்தவரை தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு குறைத்தது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறையாக்கப்பட்டது ஆகிய மாற்றங்கள் சாதகமான மனநிலையை வாடிக்கையாளர் மத்தியில் விளைவித்திருப்பதாகச் சொல்கிறது. வீட்டு விற்பனை 2017 ஆண்டைவிட 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரம் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவதும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. தென்சென்னைப் பகுதிதான் இம்முறையும் சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி மிக்க பகுதி என்பதை நிரூபித்துள்ளது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்சென்னையே விற்பனையில் முதலிடம் பெற்றுள்ளது. 10, 491 வீடுகள் விற்பனையாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதே புதிய திட்டங்கள் தொடங்குவதிலும் தென் சென்னையே முதலிடம் பெறுகிறது.  புதிய வீடுகள் 6,130 அதிகரித்துள்ளன.

தென் சென்னைக்கு அடுத்தபடியாக மேற்குச் சென்னை இரண்டாம் இடம் பெறுகிறது. 3,734 வீடுகள் மேற்குச் சென்னை பகுதியில் விற்பனையாகியுள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. அதேபோல் 2,803 புதிய வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வடசென்னையைவிட மத்தியச் சென்னை விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது.

SCROLL FOR NEXT