திருச்சியின் மையப் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் காந்தி மார்கெட்டுக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த மார்கெட்டுக்கு வாசல் திறந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் ஆட்சிக் காலத்தில் தற்போது காந்தி மார்கெட் உள்ள இடத்தில் ஒரு சந்தையை அமைக்க முடிவுசெய்தார்கள். 1868 முதலே சிறிய அளவில் சந்தை செயல்பட்டுவந்தது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளில் திருச்சி நகரில் மக்கள்தொகை பெருகியது. அதற்கேற்ப 1927-ம் ஆண்டு சந்தை விரிவுபடுத்தப்பட்டது.
அப்போது நீதிக்கட்சியின் துணைத் தலைவரான ரத்தினவேல், திருச்சி நகராட்சித் தலைவராகவும் இருந்தார். காந்தியை அழைத்துவந்து விரிவுபடுத்தப்பட்ட சந்தையைத் திறக்க அவர் விரும்பினார். அந்தக் காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தை எடுத்துரைக்கவும் ஹரிஜன மக்களின் நலனுக்காக நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்கவும் மகாத்மா காந்தி தமிழகம் வந்தார். அதன் ஒரு பகுதியாகத் திருச்சிக்கும் அவர் வந்தார்.
காந்தி திறந்த மார்கெட்
காந்தியின் திருச்சி வருகையைப் பயன்படுத்தி, விரிவுபடுத்தப்பட்ட சந்தையை அவரைக் கொண்டு திறக்க ரத்தினவேல் முடிவெடுத்தார். 1927-ல் காந்தியடிகள் சந்தையை திறந்து வைத்தார். அப்போது காந்தி திறந்து வைத்ததற்கான அடிக்கல் மார்கெட் முகப்பில் இன்றும் உள்ளது. காந்தி இந்தச் சந்தையைத் திறந்தது முதல் அவரது பெயரிலேயே மார்கெட் அழைக்கப்படத் தொடங்கியது.
அதுவே பின்னாளில் நிலைபெற்றுவிட்டது. காந்தியின் மரணத்துக்குப் பிறகு மார்கெட்டின் நுழைவாயிலில் அவரது நினைவாகச் சிலை ஒன்று அமைக்க முடிவானது. மார்கெட் நுழைவாயிலுக்கு அருகே அமைக்கப்பட்ட அந்தச் சிலையை, 1953 அக்டோபர் 30 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி திறந்துவைத்தார்.
திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்ட காந்தி மார்கெட் 150 ஆண்டுகள் பழமையானது. வாகனப் போக்குவரத்து நெரிசல், மக்கள் நெருக்கம் காரணமாகத் தற்போது நகருக்கு வெளியே கள்ளிக்குடிக்கு மார்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
- கார்த்தி