கடனை வாங்கி வீடு வாங்கினாலும், அந்தக் கடனை அடைப்பதற்குள் பலருக்கும் தலையே சுற்றிவிடும். நம்மூரில் வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடும். இன்னும் சில சமயம் ஏதாவது குறிப்பிட்ட வங்கியில் வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இதைப் வைத்து அந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சிலர் நினைப்பார்கள்.
உண்மையில், வீட்டுக் கடனை ஒரு வங்கியில் வாங்கிவிட்டு இன்னொரு வங்கிக்கு மாற முடியுமா? நிச்சயம் முடியும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். இப்போது நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கு 18 மாதங்கள் மட்டுமே சமன்படுத்தப்பட்ட தொகை (இஎம்ஐ) செலுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் அசல் தொகையில் அதிகபட்சமாக ரூ.50-75 ஆயிரம் அடைத்திருப்பீர்கள். மீதமுள்ள தொகையை நீங்கள் தாராளமாக வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதில் தடை ஏதும் கிடையாது. வங்கி மாறுவது என்பதைப் பொறுத்தவரை வீட்டுக் கடன் வாங்கிய வங்கியின் கடனை முன்கூட்டியே அடைப்பது போலத்தான் என்கிறார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷணன்.
நாமே பணத்தை முன்கூட்டியே செலுத்திக் கடனை அடைப்பதை ஃபோர் குளோசர்ஸ் என்று சொல்லுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முன் கூட்டியே வீட்டுக் கடனை அடைத்தால் 2 சதவீத அபராதக் கட்டணத்தையும் வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இது மிகப்பெரும் சுமையாக இருந்தது.
இந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டது. சில வங்கிகள் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை அளித்தன. நிலையான வட்டி விகிதத்தில் வாங்கியவர்களுக்கு அளிக்காமல் இருந்தன. ஆனால் இப்போது எல்லா வகையான வட்டி விகிதத்துக்கும் இந்த அபராதத் தொகை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே அபராதம் இன்றி கடன் தொகையை நாம் அடைத்துவிட முடியும். புதிதாக நாம் வேறு வங்கிக்கு மாறுவதற்கும் இது பயனளிக்கிறது என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
“ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதை ‘டேக் ஓவர்’ என்று சொல்லுவார்கள். இதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் எந்த வங்கியில் கடன் வாங்கினோமோ அந்த வங்கிக்கும், மாற விரும்பும் வங்கியிலும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். கடன் அளித்த வங்கியில் எஞ்சிய கடனை நாம் மாற விரும்பும் வங்கி அடைத்துவிடும் என்பதால், அவர்கள் கேட்கும் உறுதிமொழிகளை அளிக்க வேண்டும். வீட்டுப் பத்திரத்தை நாம் மாற விரும்பும் வங்கிக்கு பத்திரப் பதிவு செய்து தர வேண்டும். இதைச் செய்துவிட்டால் போதும், வங்கி மாறிவிடலாம்” என்கிறார் அவர்.
ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறுபோது சில கட்டணச் செலவுகள் ஏற்படவும் செய்யும். வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றும்போது செயல்பாட்டுக் கட்டணம், நாம் மாற விரும்பும் வங்கியிலிருந்து பிரதிநிதிகள் வந்து வீட்டை மதிப்பீடு செய்வதற்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் எனச் சில செலவுகள் இருக்கும். இவற்றையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.