சொந்த வீடு

வீடு வாங்கும்போது எதிர்பாராத திருப்பங்கள்

ஜி.எஸ்.எஸ்

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு பெண்மணியிடமிருந்து வீட்டை வாங்கிக் கொண்டார். அது பரம்பரைச் சொத்து அல்ல. அந்தப் பெண்மணி சுயமாக ஈட்டிய தொகையிலிருந்து வாங்கிய வீடு அது. எனவே, அவரிடமிருந்து அந்த வீட்டை வாங்குவதில் பிரச்சினை எதுவும் (தொடக்கத்தில்) இல்லை.

முழுப் பணமும் கொடுத்தாகிவிட்டது. பத்திரப் பதிவும் நடந்துவிட்டது. ஆனாலும், அந்த வீட்டுக்குள் நண்பரால் நுழைய முடியவில்லை. காரணம் இதுதான். வீட்டை விற்ற பெண்மணிக்கு ஒரு மகன் உண்டு. அவர் அந்த வீட்டில் தனக்கு ஒரு பங்கு இருக்கிறது என்று கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார். அதோடு அந்த வீட்டிலும் குறியேறிவிட்டு அங்கிருந்து, “வெளியேற மாட்டேன்” என்றார். சில பலசாலி நண்பர்களை வேறு தன்னுடன் அந்த வீட்டில் வைத்துக் கொண்டார்.

வீட்டை வாங்கிய என் நண்பரின் நிலை பரிதாபமாகிவிட்டது. பல லட்சங்கள் கொடுத்து ஒரு வீட்டை வாங்கிய பின்னும் அவரால் அந்த வீட்டுக்குப் போக முடியவில்லை. நீதிமன்றத்துக்குச் சென்று ஒரு போராட்டத்துக்குப் பிறகுதான் அவரால் அந்த வீட்டைத் தன் வசம் கொண்டுவர முடிந்தது.

எனவே, இதுபோன்ற வாரிசுகளிடமிருந்து ‘’தடையில்லாச் சான்றிதழ்’’ பெறுவதும் அல்லது குறைந்தபட்சம் பத்திரப்பதிவின்போது அவர்களைச் சாட்சிகளாகக் கொண்டு வருவதும் புத்திசாலித்தனம்.

 என் நண்பருக்கு நேர்ந்த அனுபவம் இது. ரவிச்சந்திரன் என்பவரது வீட்டை வாங்க விரும்பினார் நண்பர். இருதரப்பும் ஒத்துக் கொண்டனர். ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அட்வான்ஸ் தொகையை நண்பர் கொடுத்துவிட்டார். மீதித் தொகையை இரண்டு தவணைகளாகக் கொடுத்தவுடன் வீட்டில் நண்பர் குடியேறலாம் என்பது ஒப்பந்தம்.

முதல் தவணையை நண்பர் செலுத்திய பிறகு காட்சிகள் மாறிவிட்டன. நண்பர் ஒப்பந்தம் செய்திருந்த தொகையைவிட அதிகத் தொகையை வேறொருவர் கொடுக்க, அவருக்கு வீட்டை விற்றுவிட்டார் ரவிச்சந்திரன். பத்திரப்பதிவும் நடந்துவிட்டது.

இதை அறிந்த நண்பர் கொதித்துப்போய் ரவிச்சந்திரனைக் கேட்க, அவர் “அதற்கென்ன செய்ய? உங்களைவிட அவர் பத்து லட்ச ரூபாய் அதிகம் தருகிறாரே. நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். அந்த ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டு விடுங்கள்’’ என்றார்.

இதில் இன்னொரு சிக்கலும் சேர்ந்துகொண்டது. ஒப்பந்தத் தொகையைத் தவிர அதிகமாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருந்தார் என் நண்பர். அது கறுப்புப் பணம். அதாவது அதற்கான ரசீது கிடையாது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் இதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

நண்பர் ஒரு வழக்கறிஞரை அணுகினார். ‘’ஒப்பந்தம்தான் முக்கியமானது. ரசீது பெறாமல் ரொக்கமாக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் நீங்கள் கொடுத்திருக்கக் கூடாது’’ என்றார் அவர். பின்னர் சட்டத்தை விளக்கினார்.

ஒரு விற்பனை தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி முழுத் தொகையோ பகுதித் தொகையோ விற்பவர் பெற்று விட்டால் அதற்குப் பிறகு அந்தப் பொருளை (வீட்டை) வேறொருவருக்கு விற்கக் கூடாது. முந்தைய ஒப்பந்தத்தை இருதரப்பினரும் ரத்துசெய்த பிறகுதான் அதை வேறொருவருக்கு விற்கலாம்.

இந்த நிலையில் Specific Performance என்பதைக் கோரி நீங்கள் வழக்குப் போடலாம்’’ என்றார் வழக்கறிஞர். ஓர் ஒப்பந்தத்தை மீறும்போது அதற்கான நஷ்ட ஈட்டைக் கோருவதற்குப் பதிலாக ஒப்பந்தத்தின்படிதான் செயல்பட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவதுதான் Specific Performance.

“தவிர வேறொருவருக்கு அந்த வீட்டை விற்பதற்கத் தடை (இன்ஜங்ஷன்) கோர வேண்டும். கூடவே காவல்துறையிடம் புகார் அளியுங்கள்’’ என்றார்.

நம் தரப்பு வெற்றிபெற வேண்டுமென்றால் ஒப்பந்தம் தேவை – வாய் வார்த்தையில் அல்ல எழுத்துபூர்வமாக - சட்டம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் ஒப்பந்த வாக்கியங்களை உருவாக்குவது நல்லது. எந்தத் தொகையைக் கொடுத்தாலும் அதைக் காசோலையாகக் கொடுங்கள். அவரது வங்கிக் கணக்கில் நீங்கள் நேரடியாகவே அந்தப் பணத்தைச் செலுத்துவது (NEFT) மேலும் நல்லது.

கொடுத்த தொகைக்கு அவரிடமிருந்து ரசீதுபெற்றுக் கொள்ளுங்கள். ஒப்பந்தப்படி குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிக்குள் தவணைகளைச் செலுத்திவிடுங்கள் (தாமதமாகச் செலுத்தினால் நீங்கள் ஒப்பந்தத்தை மீறியவர் ஆகிறீர்கள்). தொடர்ந்து - பதிவு முடியும்வரை -விற்பவரிடம் தொடர்பில் இருங்கள்.

SCROLL FOR NEXT