சொந்த வீடு

விரிவாகும் சென்னை மாநகர், யாருக்கு லாபம்?

டி.செல்வகுமார்

சென்னை மாநகரை ஏழு மடங்கு விரிவாக்கம் செய்வதால் யாருக்கு லாபம், நில மதிப்பு அதிகரிக்குமா, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் உயருமா எனப் பலவிதமான கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது மயிலாப்பூர் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை.

மொத்தம் 426 சதுர கிலோ மீட்டருடன் இருந்த சென்னை நகரின் எல்லை முதன்முதலில் 1975-ம் ஆண்டு 1,189 சதுர கிலோ மீட்டராக (நான்கு மடங்கு) விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகள் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமின்றி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டங்களின் ஒரு பகுதியையும் இணைத்து 8,878 சதுர கிலோ மீட்டராக (ஏழு மடங்கு) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 1,709 கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்படவுள்ளன. திட்டமிட்ட முறையில் பிரம்மாண்ட வளர்ச்சியை மேற்கொள்வதே இந்த விரிவாக்கத்தின் நோக்கம்.

இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மயிலாப்பூர் கொள்கை ஆராய்ச்சி மையம் (Mylapore Institute of Policy Research) ஆய்வு மேற்கொண்டது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளுடன் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை இம்மையத்தின் செயலாளர் வி.பாலசுப்பிரமணியன் சென்னையில் அண்மையில் வெளியிட்டார்.

2-வது பெரிய நகராகும் சென்னை

இந்தியாவில் தற்போது 53,817 சதுர கிலோ மீட்டர் எல்லையுடன் டெல்லி பெருநகரம் மிகப் பெரிய நகரமாக இருந்து வருகிறது. சென்னைப் பெருநகரம் ஏழு மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்போது நாட்டிலே இரண்டாவது பெருநகரமாக மாறும். விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு அனைத்துப் பகுதிகளும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுத்தின் (CMDA) கீழ் வந்துவிடும். கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சிஎம்டிஏ-விடம்தான் பெற வேண்டியிருக்கும்.

விரிவாக்கத்துக்குப் பிறகும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே தொடர்ந்து வழங்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்தும் வரி, கட்டணங்களில் மாற்றம் இருக்காது.

விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சியைச் செயல்படுத்தினால், அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், சீரான வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, சிறப்பான மக்கள் மேலாண்மை, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், நீர் ஆதாரங்கள், வேளாண்மையின் திறன் ஆகியவை பாதுகாக்கப்படும். இதனால், சீரான முதலீடுகள் வருவதுடன் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கட்டிடத் தளப்பரப்புக் குறியீடு (எப்எஸ்ஐ) உயர்த்தியதால் இடத்தின் மதிப்பு அதிகரித்ததுபோல, சென்னை விரிவாக்கம் செய்யப்படும்போது இடத்தின் மதிப்பு உயர்ந்துவிடக் கூடாது என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அதேநேரத்தில் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்க வேண்டும். இதற்காக அரசு ஆவண செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது.

chennai-2jpg

விரிவாக்கப் பகுதிகளின் வளர்ச்சி

சென்னை மாநகரில் கிடைக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் விரிவாக்கம் செய்யப்படும் எல்லாப் பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும். விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் ஏராளமானோர் குடியேற வருவார்கள். அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புப்பகுதிகளை உருவாக்கும் முன்பு, அரசு திட்டமிட்டுக் குடிசைப் பகுதி மக்களுக்காகக் குறைந்த விலையில் குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும் என அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

விரிவாக்கப் பகுதிகளில் உள்ள நில உரிமையாளர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி நிலத் தொகுப்பை (Land Pooling) உருவாக்க வேண்டும். அந்த இடங்களில் சாலை வசதி, பூங்கா உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது நில உரிமையாளர்களுக்கு நிலத்தின் மதிப்பு உயரும். அதேநேரத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான செலவும் குறையும்.

நகர, ஊரமைப்பு இயக்ககத்தின்கீழ் வரும் பகுதிகளை இணைத்து நிலத் தொகுப்பை உருவாக்க வசதியாகத் தமிழ்நாடு நகர, ஊரமைப்புத் திட்டச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. சென்னைப் பெருநகரப் பகுதிகளிலும் நிலத் தொகுப்பை உருவாக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அதன்மூலம் புதிய நகரியத்தை உருவாக்கலாம் என அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கிறது.

ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்

திட்டமிட்ட வளர்ச்சிக்கு நகர்ப்புற வடிவமைப்பாளர்களின் பங்கேற்பு அவசியம். சிஎம்டிஏ-வில் தற்போது தகுதியான 20 நகர்ப்புற வடிவமைப்பாளர்கள்தாம் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சிக்குத் தேவையான சாலை வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர், தெருவிளக்குகள், மழைநீர், கழிவுநீர் வடிகால்கள், சுகாதாரம், மின்சார வசதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும்.

சென்னையில் பேருந்து போக்குவரத்து, புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்றவை தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (சியுஎம்டிஏ) என்ற அமைப்பை உருவாக்க 8 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்ட்டது.

ஆனால், அந்த ஆணையம் இதுவரை உருவாக்கப்படவில்லை. சாலை, குடிநீர், கழிவுநீர் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படும் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம்போல செயல்பட வேண்டும்.

தற்போது சென்னை மக்கள் ஆன்-லைன் மூலம் சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதுடன், கட்டிட அனுமதியையும் பெறுகின்றனர். அதுபோல சாலையில் உள்ள குழிகள், தெருவைச் சுத்தம் செய்தல், உடைந்திருக்கும் போக்குவரத்து சிக்னல், பகுதித் தெரு விளக்குகள் போன்றவை குறித்து தொலைபேசி எண் அல்லது செல்போன் செயலி அல்லது ட்விட்டர் மூலம் புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். அது மட்டுமில்லாமல் சாலை விபத்துகள், தீ விபத்துகள்,  குற்ற செயல்கள் குறித்தும் ஆன்-லைனில் புகார் தெரிவிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT