கடல் அலைகள் ஆர்ப்பரித்து வருவதுபோல் கட்டப்பட்டுள்ளது ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம். இது அசர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் உள்ளது. இதை வடிவமைத்தவர் உலகின் புகழ்பெற்ற பெண் கட்டிடக் கலைஞரான ஷாகா முகமது ஹதித்.
சோவியத் ரஷ்யாவில் இருந்து 1991-ம் ஆண்டு பிரிந்த அசர்பைஜான் அதன் பிறகு நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தத் தொடங்கியது. ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்ததால் அசர்பைஜான் கட்டிட அமைப்பும் ரஷ்யக் கட்டிடக் கலையை ஒத்திருந்தது.
இந்நிலையில் நவீனக் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் விதத்திலும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் ஹெய்டார் அலியேவ் கலாச்சார மையம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியது அந்நாட்டு அரசு. இந்தக் கட்டிடம் வடிவமைக்கும் பொறுப்பு, ஈராக்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஷாகா முகமது ஹதித்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கட்டிடக் கலையின் ராணி
ஹதித் 1950- ல் ஈராக்கில் பிறந்தவர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் அசோசியேஷனில் கட்டிடக் கலை பயின்றவர். படிப்பை முடித்த பிறகு தன்னுடைய பேராசிரியர்களின் கட்டிடக்கலை மையத்தில் சிறிதுகாலம் பணிபுரிந்தார். பின்னர் கட்டிடக் கலைஞர் பீட்டர் ரெஸ்யுடன் இணைந்து தன்னுடைய கட்டிடப் பணியைத் தொடங்கினார்.
பிறகு 1980- ம் ஆண்டு அவரது பெயரில் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். ஆஸ்திரியாவில் உள்ள ஸ்கை ஜம்ப், ஜெர்மனியில் உள்ள பி.எம்.டபள்யூ நிறுவனம், ஸ்பெயினின்பெவிலியன் பாலம், சீனாவில் உள்ள ஓபரா அரங்கம், லண்டனில் நீச்சல் ஒலிம்பிக் அரங்கம் உள்ளிட்ட பல கட்டிடங்களை வடிவமைத்துள்ளார் அவர். கட்டிடத் துறையின் நோபல் என அழைக்கப்படும் பிரிட்ஸ்கெர் கட்டிடக்கலை விருது பெற்ற முதல் பெண் இவர்தன். ஹதித் தன்னுடைய 65 வயதில் கடந்த 2016-ல் அமெரிக்காவில் மறைந்தார்.
விருது பெற்றுதந்த கட்டிடம்
ஹெய்டர் அலியேவ் கட்டிடத்துக்கான பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இதற்காக 6,19,000 சதுரப் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அசர்பைஜானின் வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் முன்னாள் அதிபர் ஹெய்டார் அலியேவைக் கவுரவிக்கும் வகையில் இக்கட்டிடத்துக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் இடமாக உள்ளது.
ஹெய்டார் அலியேவ் மையத்தின் வெளிப்புறம், உட்புறம் ஆகியவற்றின் கட்டமைப்புகள் அழகான வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த வளைவுகள் எங்கிருந்து தொடங்கி எங்கு நிறைவடைகின்றன என்பதுதான் இக்கட்டத்தின் தனிச்சிறப்பு.
இந்த நேர்த்தியான வளைவுகளை அமைக்க Glass Fibre Reinforced Concrete (GFRC), Glass Fibre Reinforced Polyester (GFRP) ஆகிய கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் உலோகம், பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் பகல், இரவு நேரத்தின் ஒளியைப் பிரதிபலிக்கும் விதத்தில் கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதிகளில் கண்ணாடிச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. எட்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அஜர்பைஜான் பண்பாட்டை விளக்கும் அருங்காட்சியகம், நூலகம், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அரங்கம், உணவு விடுதி, அஜர்பைஜான் மொழியில் துறை, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நடத்துவதற்கான அரங்குகள், நீச்சல் குளம் ஆகியவை இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. லண்டன் டிசைன் மியூசியம் சார்பில் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த கட்டிடம் என்ற விருதையும் பெற்றுள்ளது.